வாரணாசியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தபோது, அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகனும், தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத்தும் சென்றிருந்தனர்.
அந்த பயணம் பற்றி அப்போது பல கருத்துகள் எழுந்தன. அவர்கள் குடும்பத்தோடு பாஜகவில் இணைய போகிறார்கள், ரவீந்திரநாத்தை ஜெயிக்க வைக்கதான் அவர் போய் பார்த்துள்ளார். இப்படியாக பல கருத்துகள் எழுந்தன. அதை உறுதிசெய்யும் விதத்தில் தற்போது வாக்குப்பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளது என்ற சந்தேகமும் எழுகிறது.
கள்ள ஓட்டு போட்டது, மாதிரி வாக்குகளை அழிக்காமல் விட்டது இவையே மறுவாக்குப்பதிவு நடப்பதற்கு தேர்தல் ஆணையம் கூறிய காரணங்கள். அதன்படி மொத்தம் 13 வாக்குச்சாவடிகளில் தேனியில் இரண்டு வாக்குச்சாவடிகளுக்கு மட்டுமே மறுவாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு இரண்டு செட் இயந்திரங்கள் இருந்தாலே போதுமானது, ஆனால் இறங்கியதோ 50.
கூடுதலாக இரண்டு பெட்டிகள்கூட இல்லாமல் எப்படி அங்கு தேர்தல் நடந்திருக்கும் என்பதும் ஒரு கேள்வி. ஈரோட்டிலும் அதேபோல் ஒரே ஒரு வாக்குச்சாவடிதான் ஆனால் அங்கு இறங்கியதோ 20 விவிபேட்கள். அங்கிருந்து மற்ற வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் என வைத்துக்கொண்டாலும், மறுவாக்குப்பதிவு நடக்கும் மற்ற மாவட்டங்களான தர்மபுரி, கடலூர், திருவள்ளூர் ஆகிய ஊர்களும் அவ்வளவு அருகில் இல்லை. அதனால்தான் இவ்வளவு தூரம் சந்தேகம் நீள்கிறது.
இந்த சந்தேகங்களுக்கு வலுசேர்க்கும் முக்கிய புள்ளியாக இன்னொரு சம்பவமும் இருக்கிறது. அதுதான் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்ததற்கும், தேர்தல் நடந்ததற்கும் இடையே உள்ள காலம். பொதுவாக இப்படி மறுவாக்குப்பதிவு நடத்துவதாக இருந்தால் அது ஒன்று, இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்பட்டுவிடும். ஆனால் இந்தமுறை 20 நாட்கள் கழித்துதான் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதில் தவறுசெய்த அதிகாரிகள்மீதும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
இதுபோன்ற கேள்விகள்தான், தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா, ரவீந்திரநாத்-ஐ ஜெயிக்கவைக்கதான் இப்படியான முயற்சிகள் நடக்கிறதா என்ற சந்தேகங்களை அனைத்து தரப்பிலும் ஏற்படுத்தியுள்ளது. எதிர்கட்சிகளும் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின்மீது குற்றம் சுமத்துகிறது.