Skip to main content

எதிர்க்கட்சி எப்படி நடக்க வேண்டும்?

Published on 31/03/2020 | Edited on 01/04/2020

 

இப்போது தேவை மருத்துவத்துறை சார்ந்த நடவடிக்கைகள்தான். அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைப்பதால் என்ன நடந்துவிடும் என்று நீங்களே சொல்லுங்க என்று ஊடகத்தினரைப் பார்த்துக் கேட்டார் முதல்வர். அனைத்துக் கட்சிக் கூட்டம் என்றாலே அரசியல் கட்சிக் கூட்டம் என்பதுபோன்ற நினைப்பு நம் மனதில் பதிந்துவிட்டது. அதே மனநிலையில் உள்ள ஊடகத்தினரிடமும் பதில் இல்லை.

      

கரோனா நேரத்தில் மருத்துவர்கள்தான் உரிய சிகிச்சையை அளிக்க முடியும். ‘டாக்டர்’ பட்டம் வாங்கியதால் முதலமைச்சரால் சிகிச்சை பார்க்க முடியாது என்பது அவருக்கும் தெரியும். அரசு எடுக்க வேண்டியது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். இந்தியாவை கரோனா அச்சுறுத்தி, பக்கத்து மாநிலமான கேரளாவில் ஐ.சி.யூ. வார்டில் பலர் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், தமிழக சட்டப்பேரவைக்கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்தது.

     

rrrrr



தனிமைப்படுத்தல் பற்றி சுகாதார நிறுவனங்கள் அறிவுறுத்தும் நிலையில், நாம் இப்படி அருகருகே உட்கார்ந்து ஆலோசித்துக்கொண்டிருக்கலாமா? கூட்டத்தொடரை ஒத்திவைத்தால், மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிக்கு சென்று உதவ முடியும் என்றார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியோ, சட்டமன்றம் நடந்தால்தான் மக்கள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றார்.

      

எதிர்க்கட்சித் துணைத் தலைவரான துரைமுருகன், தங்களுக்கு மாஸ்க் கொடுங்கள் என்றும், சட்டப்பேரவையில் கிருமி நாசினி அடியுங்கள் என்றும் தாங்கள் எல்லாம் பிள்ளைக் குட்டிக்காரர்கள் என்றும் சொன்னபோது முதலமைச்சர் உள்பட ஆளுங்கட்சியினர் நக்கலாக சிரித்தனர்.

  “நாங்கள் உழைக்கிறோம். உழைப்பவர்களுக்கு கொரோனாவெல்லாம் வராது” என்று உலக சுகாதார நிறுவனமே அதிர்ந்துபோகும் அளவில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.

      
 

rrrrr


 


இப்போது நாடு முழுவதும் என்ன நடக்கிறது? அத்தனை பேரும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் மனிதர்கள் மீதே கிருமிநாசினி அடிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் துணைத்தலைவர் மாஸ்க் கேட்டபோது சிரித்த முதல்வர் உள்ளிட்ட ஆளுங்கட்சியினர் இப்போது மாஸ்க் இல்லாமல் பேட்டி கொடுப்பதில்லை. எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியதுபோல, சட்டமன்றக் கூட்டத்  தொடரை ஒத்திவைத்தது மட்டுமல்ல, கரோனாவிலிருந்து பாதுகாப்பதற்காக மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவையும் பிறப்பித்தார் முதலமைச்சர்.    

      

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் தேவையான அளவில் மாஸ்க் இருக்கிறதா என்று கேட்டார். நோயாளிகளுக்குத் தேவையான  வெண்ட்டிலேட்டர்கள் பற்றி கேட்டார். அவற்றை வாங்குவதில் அரசு ஏற்படுத்திய தாமதத்தை சுட்டிக்காட்டினார். குறை சொல்லிவிட்டு மட்டும் ஒதுங்கிவிடவில்லை. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்தக் கருவிகளை வாங்குவதற்கு நிதி ஒதுக்கினார்.

 

fffff

      

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவனும் மக்கள் நலனில் அக்கறையான கேள்விகளை ஆளுங்கட்சியை நோக்கி எழுப்பியதுடன் தனது தொகுதி நிதியிலிருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதி ஒதுக்கினார்.

      

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் கரோனா பாதுகாப்புக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஊடகத்தினருக்கும் அளித்தனர். அதனைத் தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் பலவற்றிலும் இதேபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

      

zdfhsdh

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்பட தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் எதுவும் கரோனா பாதிப்பினை அரசியலாக்காமல் அவரவருக்கு முடிந்த வகையில் உதவிகளை மேற்கொண்டனர். 144 என மாநில அரசும், ஊரடங்கு என மத்திய அரசும் அறிவித்த நிலையில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் எவ்வித வருமானமும் இன்றி எப்படி வாழ்க்கையை எதிர்கொள்வார்கள் என்ற சிந்தனையுடன், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் அந்தத் தொழிலாளர்களுக்காக வழங்கப்படும் என அறிவித்தார் மு.க.ஸ்டாலின்.

      

அதன்படி 98 எம்.எல்.ஏக்கள் தங்கள் ஒரு மாத ஊதியமான தலா 1லட்சத்து 5ஆயிரம் ரூபாயை வழங்கியதன் மூலம் 1 கோடியே 20 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயும், தி.மு.க.வின் மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் 31 பேரின் மாத  ஊதியமான தலா 2  லட்சத்து 70 ஆயிரம் மூலமாக 83 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் தமிழக அரசிடம் நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இது போக, தி.மு.க. அறக்கட்டளை சார்பாக 1 கோடி ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக அளிக்கப்பட்டுள்ளது.

     

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கியது போல, தி.மு.க. எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ள தொகை 34 கோடி ரூபாய். தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டிருப்பது 5 கோடி ரூபாய். எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டிலிருந்து எதற்காக நிதி ஒதுக்கப்படுகிறதோ அதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அதன்படி, இந்த நிதி முழுவதும் அவரவர் தொகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் உதவியளிக்கும்.  தி.மு.க. எம்.பி.-எம்.எல்.ஏக்களின் சம்பளம், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஒதுக்கப்பட்டிருப்பது 31 கோடி ரூபாய்.

     


தனிமைப்படுத்திக் கொள்வதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோளை மு.க.ஸ்டாலின், தொல்.திருமாவளவன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் உடனடியாக வரவேற்றனர். தங்களையும் தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில், தோழமைக் கட்சித் தலைவர்களிடம் செல்போனில் நலன் விசாரித்து, தமிழக மக்களுக்கான உதவிகள் குறித்து பேசினார் மு.க.ஸ்டாலின். மற்ற தலைவர்களும் அதுபோல அவரவர் கட்சியினரிடம் நலன் விசாரித்து, மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ளச் செய்தனர்.

      

திருப்பூரில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் ட்விட்டர் மூலம் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்க, திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அந்தத் தொழிலாளர்களுக்கு 15 நாட்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அதுபோலவே, சென்னையில் பீகார் மாநிலத் தொழிலாளர்கள் சிரமப்படுவதை லாலுபிரசாத்தின் மகனும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ட்விட்டர் மூலம் தெரிவிக்க, சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. மூலம் அவர்களுக்கான உதவிகள் கிடைக்கச் செய்தார் மு.க.ஸ்டாலின்.

      

பிற மாநிலத் தொழிலாளர்கள் இங்கே தவிப்பது போல, தமிழகத்தைச் சேர்ந்த சிறுவியாபாரிகள் 6  பேர் தெலங்கானா மாநிலத்தில் தவிப்பது பற்றி அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்வுக்கு மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்ய, அவர்களின் இருப்பிடத்துக்கு அரசு நிர்வாகத்தினரை அனுப்பி உணவும் செலவுக்கு தலா 500 ரூபாயும் வழங்கியதைப் பதிலாகத் தெரிவித்துள்ளார் சந்திரசேகர்ராவ். இதுபோல மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் பற்றி முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு தகவல் தெரிவிக்க, அவரும் உரிய முயற்சிகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

      

eps


தி.மு.க.வின் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்களிடம் வீடியோ கால் மூலம் ஸ்டாலின் பேசியதும், அவர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் சமூக வலைத்தளங்களில் பரவின. அதுபோலவே, காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகளும் அவரவர் அளவில் செயல்பட்டு வருகின்றன.

      

சோழிங்கநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் தனது தங்கும் விடுதியை, கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் தனிமைப்படுத்தலுக்கு அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்தார். அதைப் போல மேலும் சிலரு அறிவித்த நிலையில், தி.மு.கவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திருமண மண்டபத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விருப்பத்தை சென்னை மாநகராட்சிக்குத் தெரிவித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து, கோவையைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் பொங்கலூர் பழனிச்சாமி தனது கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி விடுதியில் உள்ள படுக்கைகள் மற்றும் அதன் வளாகத்தில் உள்ள வசதிகளைக் குறிப்பட்டு அவற்றையும் தனிமைப்படுத்தலுக்குத் தர முன்வந்துள்ளார்.

      

kkkkkk



அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டினால் இதுபோல இன்னும் பல ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் ஆலோசனைகளையும் ஆளுங்கட்சியால் பெற முடியும். அண்டை மாநிலங்களான கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசும் கர்நாடகாவின் பா.ஜ.க. அரசும் எதிர்க்கட்சிள் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களை  அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

      

தமிழ்நாட்டில் அத்தகைய நிலையை அத்தனை எளிதாக எதிர்பார்க்க முடியாது என்றாலும், கரோனா குறித்த எச்சரிக்கை மணியை தொடக்கத்திலிருந்தே ஒலிக்கச் செய்ததில் எதிர்க்கட்சிகளுக்கு முக்கிய பங்கு உண்டு.  இப்போதுவரை அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகாமல் தி.மு.கவும் அதன் தோழமைக்  கட்சிகளும், பிற கட்சிகளும் மேற்கொண்டு வரும் பணிகள், பேரிடர் நேரத்தில் எதிர்க்கட்சிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
 

சார்ந்த செய்திகள்