ஓபிஎஸ் செய்த தர்மயுத்தம்!
ஒரு வருட விறுவிறு ஃப்ளாஷ்பேக்...

'பன்றிக்கு நன்றி சொல்லி, குன்றின் மீதேறி நின்றால் , வென்றிடலாம் குலசேகரனை' ... இப்படித்தான் முதல் முதலில் முதல்வர் ஆனார் OPS என்று அனைவராலும் அழைக்கப்படும் திரு.ஓ.பன்னீர்செல்வம். ஆமாம், அவருக்கும் தெரியாது, மக்களுக்கும் தெரியாது எப்படி ஆனார் என்று. ஆனால், ஆக்கியவர்களுக்குத் தெரியும், பல சீனியர்கள் இருக்கும் போது, முதல் முறை எம்.எல்.ஏவாகி, அப்பொழுது தான் அமைச்சராகவும் ஆகியிருந்த பன்னீர்செல்வத்தை எதற்காக முதல்வர் ஆக்கினார்கள் என்று. பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்ட பொழுது, பணிவுசெல்வமாகவும், பணிவிடை செல்வமாகவும் மாறி இவர் காட்டிய அடக்கம் தான் அந்த இடத்துக்கு இவரைக் கொண்டு போனது. "இது அண்ணன் போட்ட கோடு , இதை நீ தாண்டப் படாது" என்று சொன்னால் தாண்டாதவராகத்தான் அப்போது இருந்தார். எப்போதெல்லாம் தமிழ் நாட்டில் மெயின் பவர் போகிறதோ அப்போதெல்லாம் யூஸ் ஆகுற யூ.பி.எஸ்ஆ இருந்தாரு நம்ம ஓபிஎஸ். அதற்கு காரணமாக சொல்லப்பட்டது, பதவி தன் கையில் வந்தாலும், தான் கட்டத்துரை ஆகாம கைப்புள்ளையாகவே இருந்து காட்டிய விசுவாசம் தான்.

2014ல் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குப் போனதும், இவரு ரெண்டாவது தடவை முதல்வராக பதவியேற்றுக் கொண்ட போது கண்ணீர் சிந்திக் கரைஞ்சுட்டாரு மனுஷன். அன்னைக்கு இவரு ஆரம்பிச்சு வச்ச அழுகை மழை, ஆளுநர் ரோசய்யா கால் நனையிற அளவுக்கு பெய்தது. அரசு விரைவு பேருந்துல இருக்குற கண்டக்டர் சீட்டு மாதிரி முதல்வர் சீட்ல உக்காராம காலியாவே வச்சுருந்தாரு ஓபிஎஸ். ஏன்னா எப்ப வேணா வந்து எந்திரிக்க சொல்லிடுவாங்களோ என்றுதான். பட்ஜெட் பெட்டிய படப்பெட்டியாக நினைத்து அதில் அம்மா ஸ்டிக்கரை ஒட்டி அழகு பார்த்தார். அதற்குப் பிறகு ஸ்டிக்கர் கலாச்சாரம், வேற.. வேற.. வேற.. லெவல்க்கு போனது நாம் எல்லாருக்கும் தெரியும்.

என்னதான் பட்டையெல்லாம் போட்டுக்கிட்டு பண்பானவராக இருந்தாலும் தனக்கு பின்னாலயே "வர்ர்லாம் வா... வர்ர்லாம் வா" னு தன்னோட தம்பி ராஜாவையும் , மகன்களையும் மெல்ல அரசியலின் உள்ளே நுழைத்தார் பன்னீர்செல்வம். திடீரென்று சிறைக்கு சென்ற ஜெயலலிதா, "ஐம் பேக் " என்று வந்து நிற்க, "ஐம் வெயிட்டிங் " என்று எழுந்து கொண்டார். 2015-16இல் "நாங்க அஞ்சு பேர் ... எங்களுக்கு பயமே கிடையாது "னு சுற்றிக்கொண்டிருந்த ஐவர் அணியில் மற்றவர்கள் மேலெல்லாம் மேலிடம் நடவடிக்கை எடுத்தபோது கூட இந்த விசுவாசம் தான், இவரைக் காப்பாற்றியது. அம்மா மரணத்திற்குப் பிறகு கொஞ்சம் கூட கலங்காம, அட ஏன் , தூக்க கலக்கம் கூட இல்லாம, அண்ணா யூனிவர்சிட்டி ரிசல்ட் வருவது போல நடுராத்திரியில் பதவி ஏற்றுக்கொண்ட போது தான் இவர் மாணிக்கமா பாட்சாவா என்று மக்களுக்கு சந்தேகம் வந்தது.

இடையில் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலியின் போது, தோள் தொட்டு ஆறுதல் சொல்வது, கோட்டையில் இருந்து வெளியே வரும்பொழுது "ஏங்க..நீங்க போங்க, ஏங்க...நீங்க போங்க .." என்று ஒருத்தர் காருக்கு இன்னொருத்தர் வழி விடுவது என்று ஸ்டாலின் கூட "முஸ்தஃபா... முஸ்தஃபா " பாடினார் ஓபிஎஸ். பேசும் மொழிகள் வேறு என்றாலும், கண்ணும் கண்ணும் பேசும் பொழுது வார்த்தை எதற்கு என்று மோடியுடனும் நட்பாக ஜோடி போட்டார் பன்னீர்செல்வம். 2017 ஜனவரியில் தொடங்கி ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த பொழுது, 'பன்னீர்செல்வம்னா, பொட்டு வச்சு பொங்கல் சாப்பிடறவர்னு நெனச்சியா' என்று கேட்டு நேராக டெல்லி கிளம்பிப் போனார். அப்பொழுது, பிரதமரைப் பார்க்க அனுமதி கேட்டிருந்த எம்.பி க்கள் யாரையும் பார்க்காமல் தன் தம்பியாக நினைத்து ஓ.பி.எஸ்ஸை மட்டும் நமது பிரதமர் சந்தித்தார். அந்த சமயத்தில், இணைய குசும்பர்களும் சில இளைஞர்களும் இவரை 'மிக்சர்' என்று கேலியாக கூப்பிட்டாலும் கவலைப்படாமல், ஏர்போர்ட்டில் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா" என்று கூறி சிக்ஸர் அடிச்சார் அப்போதைய சி.எம். இதையெல்லாம் பார்த்து கொதிச்சுப் போன சின்னம்மா டீம், "அம்மாவாசை கால் படுது .."னு சொல்ல, "நான் நாகராஜை சோழன் "னு சொல்லி ஒரு நிமிஷம் நல்லா உக்காந்தாரு சி.எம் சீட்ல. பொறுத்தது போதும்னு எம்.எல்.ஏ கூட்டத்தைக் கூட்டி, "வரணும் ...பழைய பன்னீர்செல்வமா வரணும் " சொல்லி அவரை ராஜினாமா செய்ய சொல்ல, திரும்பவும் அம்மாவாசையாவே ஆனார் நம்ம ஓபிஎஸ்.

படம் முடிந்தது என்று தியேட்டரை விட்டுக் கிளம்ப மக்கள் எழுந்த போது வரும் 'மங்காத்தா' ட்விஸ்ட் போல 2017 பிப்ரவரி 7ஆம் தேதி முதல்வர் பதவியிலிருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம், கடந்த ஆண்டு இதே நாள் (பிப்ரவரி 7) இரவு சுமார் 8.50 மணிக்கு தன் அடையாறு இல்லத்திலிருந்து கிளம்பி ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றார். அங்கு தியானம் செய்ய அமர்ந்த அவர், ஊடகங்கள் கூடும் வரை அரை மணிநேரம் தியானம் செய்தார். தமிழக வரலாறில் ஒரு தியானம் நேரலை செய்யப்பட்டது அதுவே முதல் முறை. தியானம் முடிந்து அவர் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் 'அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி' என்று 'சரஸ்வதி சபதம்' சிவாஜிகணேசன் பேச்சு வந்து பேசிய முதல் வார்த்தைகள் போல இருந்தது. தமிழகமே அவரது தர்மயுத்தத்தைப் பார்த்து சிலிர்த்தது. இன்னொரு மக்கள் ஆதரவு பெற்ற தலைவராக வருவார் என்னும் அளவுக்கெல்லாம் கூட விவாதங்கள் நடந்தன.

அதிமுகவை கைப்பற்றுவார், ஆட்சியைக் கைப்பற்றுவார் என்றெல்லாம் பேசப்பட்ட ஓ.பி.எஸ், சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 'கூவத்தூர் ஃபார்முலா'வுக்கு முன் தோற்றுவிட்டார். பின்னர் சில மாதங்களிலேயே 'தர்மயுத்தத்தை'ப் பற்றி தம் பிடித்து பேசியவர்கள் வாயடைத்துப் போகும் வகையில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் சேர்ந்து துணை முதல்வர் பதவியை வாங்கி செட்டில் ஆகிவிட்டார். அவரது அணியில் இருந்தவர்கள் அதிருப்தியும் திருப்தியும் கலந்து கட்சியில் ஐக்கியமாகிவிட்டனர். மத்திய அரசின் ஆதரவு, இரட்டை இலை சின்னம் எல்லாம் இருந்தும் ஆர்.கே.நகரில் கோட்டைவிட்டது இந்தக் கூட்டம். தர்மயுத்தம் செய்யும் மாணிக்கமா இல்லை பெரியகுளத்தில் தம்பியின் ராஜ்ஜியம், சேகர் ரெட்டியின் டைரிக் குறிப்பு, மகன்களின் கடல் கடந்த பிசினஸ் செய்யும் பாட்சாவா என்று மக்களைக் குழப்பியவர், இப்பொழுது அதிமுக பேனர்களில் ஈ.பி.எஸ்ஸை விட சற்றே சின்ன சைசில் சிரித்துக்கொண்டு இருக்கிறார்.
VBK