Skip to main content

போனஸ் வாங்குறீங்களோ இல்லையோ, இந்தக் கதையை தெரிஞ்சுக்கங்க!

Published on 12/11/2020 | Edited on 13/11/2020

 

diwali

 

தீபாவளி வந்தாலே குழந்தைகளுக்கு புத்தாடை, இனிப்புகள், பட்டாசு நினைப்பாகவே இருக்கும், மீசை எட்டி பார்க்கும் டீன்களுக்கு தன் ஆசை நாயகனின் பட ரிலீஸாகுதா என்கிற எதிர்பார்ப்பு இருக்கும். பெண்களுக்கு காஸ்மெடிக்ஸ் அல்லது அந்த வருடம் வெளியாகும் புது டிஸைன் ஆடைகள் நினைப்பாகவே இருக்கும். இவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்ய வேண்டிய இடத்தில் இருக்கும் வேலைக்கு செல்பவர்களுக்கோ, போனஸ் கிடைக்குமா, வந்தால் எவ்வளவு வரும் என்கிற யோசனையிலேயே தீபாவளி வந்துவிடும். அதற்குள் அடித்துப்பிடித்து தனக்கு கொடுக்கப்பட்ட மிஷனை கடன்வாங்கியாவது முடித்துவிட்டு, அதை சரிகட்ட போனஸ் வந்துவிட வேண்டும் என புலம்பிக்கொண்டோ பிரார்த்தனை செய்துகொண்டோ இருப்பார்கள்.

 

இப்படி போனஸை எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு, இந்தியாவில் இவ்வழக்கம் எப்படி வந்தது, என்னதான் அந்த வரலாறு என்று பெரும்பாலும் தெரிய வாய்ப்பில்லை. வேலை பார்க்கும் நிறுவனத்தில் போனஸ் தரவில்லை என்றால் அந்நிறுவனத்தின் மீது சட்ட ரீதியாகப் போராடும் அளவிற்கு சட்டம் வந்துவிட்டது. ஆனால், ஆங்கிலேயர்களின் பிடியில், விடுதலை தாகத்தை தணிக்க வழி தேடிக்கொண்டிருந்த சமயத்தில், பல வருடங்களாக போராடி, அதில் வெற்றிபெற்று போனஸ் வாங்கியிருக்கிறார்கள். ஆனால், அந்த வரலாற்று சிறப்புமிக்க விஷயம் வரலாற்றில் மறைந்தே இருப்பதாக தெரிகிறது.

 

முதன் முதலில் இந்தியாவில் தொழிலாளர்களுக்கு போனஸ் என்கிற வார்த்தை பரிச்சயமானது முதலாம் உலகப் போர் சமயத்தில்தான். 1917ஆம் ஆண்டு உலகப் போர் முடிவடைந்து, பிளேக் பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது, தொழிலாளர்கள் பலரும் பிளேக் கொள்ளை நோய்க்கு அஞ்சி தொழிற்சாலைகளுக்கு வருவதை நிறுத்திவிடுவார்கள் என்று அஞ்சிய குஜராத் - அகமதாபாத்தை சேர்ந்த டெக்ஸ்டைல் நிறுவனங்கள் வார் போனஸ் கொடுத்தன. சம்பளத்தில் 10 சதவீதம் அதிகம் வழங்கியுள்ளன.

 

இதன்பின்னர், தொழிலாளர்கள் மத்தியில் கேப்பிடலிஸம், கம்யூனிஸம் பற்றியான கொள்கைகளின் அறிமுகம் பரவலாகிறது. இந்திய சம்பள முறைப்படி வார சம்பளம் பெற்று வந்த தொழிலாளர்களுக்கு ஆங்கிலேய சம்பள முறையான மாத சம்பளமாகக்  கொடுக்கப்பட்டுள்ளது. கொள்கைகள் அறிமுகமாவதற்கு முன்பு இதுகுறித்தெல்லாம் பெரிதாகக் கண்டுகொள்ளாத தொழிலாளர்களுக்கு, இதன் மூலம் நான்கு வார சம்பளம் கிடைக்காமல் ஏமாற்றப்படுவதாக உணர்ந்து, எதிர்த்துக் கேள்வி கேட்க தொடங்கினார்கள். அதாவது வார சம்பள முறைப்படி ஒரு வருடத்திற்கு 52 வாரங்கள் சம்பளம் பெற்றுவந்த தொழிலாளர்களுக்கு, மாத சம்பளத்தின் மூலம் 48 வாரத்திற்கே சம்பளம் கிடைக்கும். இதனால் மீதமுள்ள நான்கு வாரத்திற்கான சம்பளம் வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்கள் மஹாராஷ்ட்ராவை சேர்ந்த டெக்ஸ்டைல் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள். இந்தக்  கோரிக்கையை முறையிட்டு பல வருட போராட்டத்தில் ஈடுபட்டனர் டெக்ஸ்டைல் தொழிலாளர்கள்.

 

இவர்களின் பத்து வருடப் போராட்டத்திற்குப் பிறகே அந்த ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்குவது என்று மஹாராஷ்ட்ராவை சேர்ந்த முதலாளிகள் அறிவித்திருக்கிறார்கள். தற்போது இந்த போனஸ் முறை என்பது சட்டமாவதற்கு இதுவே ஒரு தொடக்கமாக இருந்திருக்கிறது. இதன்பின்னர், குறிப்பிட்ட தொழிலாளர்கள் சங்கம் போனஸை உரிமையாகப் பெறுவதற்காக நீதிப் போராட்டத்தில் இறங்கியது. தொடர்ச்சியாக பல தொழிலாளர் சங்கங்களின் சட்ட போராட்டம், களப்  போராட்டங்களின் வழியே தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவது என்பது போனஸ் சட்டத்தின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியர்களால் பெருமளவில் கொண்டாடப்படும் பண்டிகைகளாக தீபாவளி, தசரா பண்டிகைகள் இருக்கின்றன. எனவே பண்டிகை காலத்தில் வழங்கினால் தொழிலாளர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்று அந்த காலத்தில் வழங்கப்பட்டது போனஸ். 

 

நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு நன்மைக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. தீபாவளி போனஸ் இன்றைய நிலையை எட்டியிருப்பது இப்படித்தான். ஆனால், இந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு நிறுவனங்கள் தட்டுத்தடுமாறி மீண்டு வரும் நிலையில் போனஸ் கொடுக்கப்படுமா என்பது கேள்விக்குறிதான். ஆனாலும், எப்படியோ அந்த பண்டிகை நாளை கொண்டாடத் தயாராகிறோம். கவலைகள் எப்போதும் இருக்கும், பண்டிகைகளால் அதை சற்று மறப்போம்.