ஊரக உள்ளாட்சிக்கான தலைவர்- துணைத்தலைவர் மறைமுகத் தேர்தல் முடிவதற்குள் ராஜ்யசபா தேர்தலில் பரபரப்பாகி விட்டன கழகங்கள்.
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.க்களாக இருக்கும் அ.தி. மு.க.வை சேர்ந்த விஜிலாசத்யானந்த், சசிகலாபுஷ்பா, செல்வராஜ், முத்துக்கருப்பன், தி.மு.க.வைச் சேர்ந்த திருச்சி சிவா, சி.பி.எம். கட்சியை சேர்ந்த டி.கே.ரங்கராஜன் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் வருகிற ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் தேதியை மார்ச் இறுதி வாரத்தில் அறிவிக்க முடிவு செய்துள்ளது தலைமைத் தேர்தல் ஆணையம்.
தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க. 124, தி.மு.க. 100, காங்கிரஸ் 7, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, சுயேட்சை (தினகரன்) 1, சபாநாயகர் 1 என 234 உறுப்பினர்களும், நியமன உறுப்பினர் ஒருவரும் இருக்கின்றனர். தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் 6 ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான இடங்களில் கட்சிகளின் வலிமையைப் பொறுத்து அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தலா 3 இடங்களை கைப்பற்ற முடியும் என்பதால் இரு கட்சிகளிலும் போட்டி அதிகரித்துள்ளது.
"ஒரு எம்.பி.யை வெற்றிபெற வைக்க 34 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவை. அந்த வகையில் 3 எம்.பி.க்களுக்கும் 102 எம்.எல்.ஏ.க்கள் போக, அ.தி.மு.க.வில் கூடுதலாக 22 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அதேபோல, தி.மு.க.விடம் 100 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் நிலையில் 3 எம்.பி.க்களை வெற்றிபெற வைக்க 102 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்கிற நிலையில் 2 எம்.எல்.ஏ.க்கள் மேலும் தேவை. அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரசிடம் 7 எம்.எல்.ஏ.க்களும், முஸ்லிம் லீக்கிடம் 1 எம்.எல்.ஏ.வும் இருப்பதால் 3 எம்.பி.க்களை எளிதாக ஜெயித்துவிட முடியும். அதனால் போட்டியின்றித் தேர்வாகி விடலாம்'' என்கின்றனர் சட்டமன்ற செயலக அதிகாரிகள்.
நான்கு எம்.பி.க்களை இழக்கும் அ.தி.மு.க., தற்போது 3 எம்.பி.க்களை மட்டுமே ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்க முடியும். பதவிக் காலம் முடியும் விஜிலாசத்யானந்த், தற்போது ராஜ்யசபாவின் அ.தி.மு.க. கொறடாவாக இருக்கிறார். அதனால் மீண்டும் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என எடப்பாடியிடம் கேட்டுள்ளார்.
கடந்த வருடம் ஜூலையில் நடந்த ராஜ்யசபா தேர்தலின் போதும் அ.தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களை வெற்றிபெற வைக்க முடியும். அப்போது பா.ம.க. அன்புமணிக்காக ஒரு இடத்தை விட்டுக்கொடுத்த எடப்பாடி, மீதமுள்ள 2 இடங்களில் அ.தி.மு.க.வை சேர்ந்த முகமது ஜான், கடந்த ஜூலையில் ராஜ்யசபா தேர்தலின் போது முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சீட் ஒதுக்க வேண்டும் என முடிவு செய்த போது அதனை தமிழ்மகன் உசேனுக்கு வழங்கலாம் என கட்சியின் மூத்த அமைச்சர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், அடுத்த முறை உங்களுக்கு வாய்ப்புத் தருவதாக தமிழ்மகன் உசேனிடம் சொல்லிவிட்டு, முகமதுஜானை தேர்வு செய்தார் எடப்பாடி. அதனால் தமிழ்மகன் உசேனும் இந்த முறை சீரியசாக இருக்கிறார்.
அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனு சாமியும் கடந்த முறையே எதிர் பார்ப்பில் இருந்தார். எடப்பாடியோ, ராஜ்யசபா சீட் ஒதுக்காமல், லோக்சபா தேர்தலில் அவரை நிற்க வைத்தார். அதில் தோல்வியடைந்த கே.பி.முனுசாமியும் தற்போது ராஜ்யசபா சீட்டை குறி வைத்திருக்கிறார். இந்த நிலையில், பதவிக் காலம் முடியும் சசிகலா புஷ்பா, நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த சமூகத்திற்கான பிரதிநிதித்துவத்தை கட்சிக்குள்ளிருந்தும் நாடார் அமைப்புகள் மூலமும் எடப்பாடியிடம் வலியுறுத்தி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், எடப்பாடிக்காக டெல்லியில் பல்வேறு அரசியல்களில் ஈடுபட்டு வரும் அவரது நண்பரான சேலம் இளங்கோவனும், மூத்த அமைச்சர்கள் 4 பேர், தங்களது ஆதரவாளர்களுக்காகவும் ராஜ்யசபாவை குறி வைத்துள்ளனர். இதற்கிடையே, 1 இடத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென பா.ஜ.க. தலைமை அழுத்தம் தந்து வருகிறது. பிரணாப் முகர்ஜி சப்போர்ட்டில் பா.ஜ.க. மேலிடத்தில் செல்வாக்கு பெற்றுள்ள ஜி.கே.வாசனுக்காகவும் எடப்பாடியிடம் டெல்லி வலியுறுத்துகிறது. அதனால் ராஜ்யசபா சீட்டில் இடியாப்பச் சிக்கலை எதிர்கொள்கிறார் எடப்பாடி' என்று விவரிக்கின்றனர்.
தி.மு.க. தரப்பில் விசாரித்தபோது, "மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவிற்கு கடந்த முறையே வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. அதனால் இந்த முறை அவருக்கு கிடைக்கும். அதேபோல, கூட்டணியிலுள்ள முஸ்லிம் கட்சியான ம.ம.க., லோக்சபா தேர்தலில் வாய்ப்புத் தரப்படாததை சுட்டிக்காட்டி, ராஜ்யசபா சீட் கேட்கும் என நினைக்கிறார் ஸ்டாலின். அதேபோல, கூட்டணியிலுள்ள காங்கிரசும், சி.பி.எம்.மும் ஒரு சீட் கேட்டு அறிவாலயத்தை அணுகும். இதையெல்லாம் எதிர்பார்த்திருக்கும் ஸ்டாலின், இந்த முறை 3 இடங்களையும் தி.மு.க.வுக்கே ஒதுக்க திட்ட மிட்டிருக்கிறார். கடந்த முறை கிறிஸ்தவருக்கு தந்ததால் இந்த முறை தி.மு.க.விலிருந்து நேரடியாக ஒரு முஸ்லிம் பிரமுகரை அனுப்ப வேண்டும் என்று ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது'' என்கிறார்கள் சீனியர் மா.செ.க்கள்.