Skip to main content

"என்னை எம்ஜிஆரிடம் அழைத்துச் சென்றதே ஸ்டாலின்தான்.." - கண்ணீருடன் நினைவைப் பகிர்ந்த ஓம்பொடி பிராசாத் சிங்!

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

h

 

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் கடந்த 7ஆம் தேதி நடப்பதாக அதிமுக தலைமை கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கான வேட்புமனு விநியோகம் அதிமுக தலைமைக்கழகத்தில் செய்யப்பட்ட நிலையில், அதைப் பெறுவதற்காக அதிமுகவைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஓம்பொடி பிரசாத் சிங் சில நாட்களுக்கு முன்பு கட்சி அலுவலகத்துக்குச் சென்றார். அப்போது அவரிடம் அங்கிருந்த நிர்வாகிகள் வாக்குவாதம் செய்து வெளியே அனுப்பினார்கள். வெளியே வந்த அவரை அங்கிருந்த சிலர் கடுமையாக தாக்கி கட்சி அலுவலகத்துக்கு வெளியே தள்ளினார்கள். இதுதொடர்பாக நாம் அவரிடம் பேசியபோது பல்வேறு அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்தார்.

 

அதிமுகவுக்கும் உங்களுக்குமான தொடர்பு எப்போது ஆரம்பித்தது என்று நாம் அவரிடம் கேட்டபோது அவர் பல்வேறு புதிய தகவல்களை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது...

 

"செஞ்சி கோட்டை மன்னன் ராஜா தேசிங்கு வம்சாவளியை சேர்ந்தவர்கள் தான் நாங்கள். இங்கு 69 லட்சம் பேர் இருக்கிறார்கள். டெல்லியில் எங்கள் சமூகத்தை சேர்ந்த 45 பேர் அமைச்சர்களாக இருந்து வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சி என்றாலும், பாஜக ஆட்சி என்றாலும் எங்கள் சமூகத்துக்கு உரிய மரியாதை டெல்லியில் இன்று வரை இருந்து வருகிறது. ராஜ்நாத் சிங், ஜெயில் சிங் என இவர்கள் அனைவரும் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். 

 

இதுஒருபுறம் இருந்தாலும் நான் பள்ளி பருவத்தில் இருந்தே தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பள்ளியில்தான் நான் படித்தேன். நானும் கமலும் கிளாஸ்மேட். நானும் அவரும் நாடகங்களில் நடித்திருக்கிறோம். அவருடைய முதல் படத்திலும் நான் சிறிய கேரக்டரில் நடத்திருந்தேன். தலைவருக்காக மன்னாதி மன்னன் என்ற பத்திரிக்கையை தலைவர் ஆட்சியில் இருந்த போது நடத்தினேன். முதன் முதலில் 67ல் நான் எம்ஜிஆரை சந்தித்தேன். அவரிடம் ஒரு பொருளை கொடுக்க முயன்ற போது அவரின் விரல் என் கைகளின் மீது பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை எம்ஜிஆர் பைத்தியமாகவே இருக்கிறேன்.

 

சாகும் வரையில் நான் எம்ஜிஆர் ரசிகன், தொண்டன் என்பதை யாராலும் பறிக்க முடியாது. அதனால் தான் தலைவர் அவர்களின் எந்தப்படம் எப்போது வந்தாலும் தினமும் தியேட்டர் போய் படம் பார்த்துவிடுவோம். ஒரு படத்தை எத்தனை தடவை பார்ப்பேன் என்று கணக்கு வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு நான் எம்ஜிஆர் திரைப்படத்தை பார்ப்பேன். குறிப்பாக 71ம் ஆண்டு தேர்தலில் கலைஞர் முதல்வராக எம்ஜிஆர் மிக முக்கிய காரணமாக இருந்தார். அப்போது நானும், முதலமைச்சர் ஸ்டாலினும் இணைந்து நாடகங்களில் நடித்தோம். அவரும் நானும் நிறைய நாடகங்களில் அந்த காலத்தில் நடித்துள்ளோம். 

 

அப்போது முரசே முழங்கு என்ற தலைப்பில் நடைபெற்ற நாடகத்தில் நாங்கள் பங்கேற்றோம். அப்போது எனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தின் பெயர் ஓம்பொடி. அதுவே என் வாழ்க்கையில் பட்டப்பெயராக போனது. அந்த நாடகத்தை புரட்சி தலைவர் ரோட்டில் அமர்ந்து பார்த்தார். ஸ்டாலின் அவர்களே எம்ஜிஆரின் தீவிர ரசிகர்தான். சிறுவயதில் எங்கள் இருவருக்கு அதிகம் அரசியல் புரியாத நாட்களில் அடிக்கடி நாங்கள் இருவரும் எம்ஜிஆர் வீட்டிற்கு செல்வோம். என்னை எம்ஜிஆர் வீட்டிற்கு அழைத்து சென்றதே ஸ்டாலின்தான். எனக்கு எம்ஜிஆர் தான் எல்லாம். அவரை வைத்து 72ல் இரண்டு பொதுக்கூட்டத்தை மிக பிரம்மாண்டமாக நடத்தினேன். என் மீது அவருக்கு எப்போதும் அதிக பாசம் உண்டு.

 

என் திருமணத்தை அவர்தான் நடத்திவைத்தார். திருமணத்திற்கு வந்த அவர் மேடையில் இருந்த எங்களை வாழ்த்திவிட்டு, கீழே அமர்ந்திருந்த என் அம்மாவை மேடைக்கு அழைத்து நான்தான் எம்ஜிஆர் வந்திருக்கேன் அம்மா என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். இப்போது அதை நினைத்தாலும் கண்ணீர் வருகிறது. இவ்வாறு இந்த இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்து இயங்கி வரும் என்னை இன்றைக்கு யார் என்று கேட்பதை எல்லாம் என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. எந்த பதவியையும் எதிர்பார்த்து இந்த இயக்கத்தில் இருந்ததில்லை, இனியும் அவ்வாறே இருப்பேன்" என்றார் கண்ணீரை துடைத்துக்கொண்டே!