கலைஞரின் உண்மையான விசுவாசிகள் என்னுடன்தான் இருக்கிறார்கள் என்றும், எனது ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேருடன், செப்டம்பர் 5 ஆம் தேதி கலைஞர் நினைவிடத்துக்கு பேரணியாக செல்வேன் என்றும் திமுக தலைமைக்கு அழகிரி சவால் விடுத்திருந்தார்.
ஆனால், அதுகுறித்து திமுக தலைமை எதுவுமே கண்டுகொள்ளவில்லை. திமுகவும் ஸ்டாலினும் திமுக பொறுப்பாளர்களும் தன்னை கண்டுகொள்ளாத நிலையில், திமுகவில் சேர்த்துக்கொண்டால் ஸ்டாலின் தலைமையை ஏற்க தயார் என்றுகூட கூறி்ப்பார்த்தார்.
அழகிரியை திமுகவில் சேர்த்தால் மீண்டும் மதுரை திமுகவில் குழப்பம் ஏற்படும் என்று ஸ்டாலின் நினைத்தார். அழகிரியின் ஆதரவாளர்களாக இருந்த தென் மாவட்ட திமுக நிர்வாகிகள் அனைவரும் ஸ்டாலின் ஆதரவாளர்களாக மாறியிருக்கிறார்கள். இந்நிலையில், அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்த்தால், தங்களுடைய நிலை மோசமாகிவிடும் என்று அவர்கள் பயந்தார்கள்.
அதுமட்டுமின்றி, அழகிரியின் மகன் தயாநிதி அழகிரிக்குக்கூட பயந்து நடுங்கும் நிலை ஏற்படும் என்று அவர்கள் திமுக தலைமையிடம் எடுத்துக் கூறினார்கள். அழகிரியின் ஆட்களால், மதுரை மக்களிடம் திமுக மீது ஏற்பட்டிருந்த வெறுப்பு மறைந்திருக்கிற நிலையில் மீண்டும் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று தலைமை முடிவெடுத்துவிட்டது.
எனவேதான், திமுகவிலிருந்து ஒதுங்கியிருந்த கருப்பசாமி பாண்டியன், முல்லைவேந்தன் உள்ளிட்டோரை திமுகவில் மீண்டும் இணைத்தார் ஸ்டாலின். இந்த முடிவு அழகிரிக்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்தது. கலைஞர் மறைந்து ஒரு வாரத்திலேயே கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த அழகிரி முயற்சி மேற்கொண்டதை திமுகவினரோ, அழகிரி ஆதரவாளர்களோ விரும்பவில்லை. அவர்கள் அழகிரி தனிக்கட்சி தொடங்குவதையோ, திமுகவுக்கு சேதம் ஏற்படுத்துவதையோ ஏற்கவில்லை. இருந்தாலும், கட்சித் தலைமையை நிர்பந்தம் செய்வதற்காக பெரிய பேரணியை நடத்தியே தீருவது என்று அழகிரி உறுதியாக இருந்தார்.
அதன்படி, செப்டம்பர் 5 ஆம் தேதி காலையில் சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் அழகிரியின் ஆதரவாளர்கள் கூடத் தொடங்கினார்கள். ஆனால், மீடியாக்கள் கடந்த பல நாட்களாக எதிர்பார்த்தபடி சென்னை நகர போக்குவரத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சில ஆயிரம்பேர் மட்டுமே காலை 11 மணி அளவில் கூடினார்கள். வாலாஜா சாலையின் ஒரு பகுதியில் மட்டுமே பேரணிக்காக அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. மறுபகுதியில் போக்குவரத்து வழக்கம்போல இருந்தது.
10 மணிக்கு பேரணி தொடங்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் 11.30 மணிவரை காத்திருந்தும் 10 ஆயிரம் பேரைக் கூட தொடவில்லை. இது அழகிரி ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் பேரணி தொடங்கியது. இந்தப் பேரணியில் மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் என்று கூறப்படும் மன்னன், கோபிநாதன், இசக்கிமுத்து, முபாரக் மந்திரி உள்ளிட்ட சிலர் மட்டுமே இருந்தார்கள். கட்சியில் தற்போது பொறுப்பில் உள்ள ஆட்கள் யாரும் இந்தப் பேரணியில் கலந்துகொள்ளவில்லை. பேரணியில் பங்கேற்றவர்களில் பெரும்பகுதியினர் கட்சி உறுப்பினர்களே இல்லை என்றும் கூறப்படுகிறது.
பேரணி முடிவில் தனக்கு பின்னால் ஒன்னரை லட்சம் திமுகவினர் குவிந்திருப்பதாக அழகிரி சொன்னாலும், பேரணியில் பங்கேற்றவர்கள் அதிகபட்சமாக 8 ஆயிரம் பேர் இருக்கலாம் என்றே போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆளும் அதிமுக, பாஜக ஆகியவற்றின் ஆதரவோடு அழகிரி நடத்திய இந்த பேரணி திமுகவை அதிரவைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புஸ்வானம் ஆனது என்பதுதான் உண்மை.