அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான சி.ஆர்.சரஸ்வதி, நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
ஜெயலலிதா நினைவிடம் பூட்டப்பட்டுள்ளது குறித்து...
சசிகலா வருவார் என்ற பயத்தில், பதட்டத்தில் பூட்டியுள்ளனர் என பொதுமக்கள் அனைவருக்கும் தெரியும். எங்கள் பொதுச் செயலாளர் சொன்ன பதில்தான், 'சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா?'
இறுதிக்கட்டப் பணிகள் முடியவில்லை. அந்தப் பணிகள் நடப்பதற்காக பூட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறார்களே...
இறுதிக்கட்டப் பணிகள் முடியவில்லை என்றால், அதற்குள் ஏன் அவசரம் அவசரமாகத் திறந்தார்கள். பிரதமரை அழைக்க, டெல்லி சென்றார்கள். நினைவிடத்தை ரிப்பன் வெட்டி திறந்துள்ளார்கள். கைத்தட்டுகிறாரகள். யாராவது இப்படிச் செய்வார்களா. விளக்கு ஏற்றலாம், மெழுகுவர்த்தி ஏற்றலாம். மனதார பிரார்த்தனை செய்யலாம். இவர்கள் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து மக்கள் வேதனைப்படுகிறார்கள்.
சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டியவர்களைக் கட்சியில் இருந்து ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். நீக்கி அறிவிப்பு வெளியிடுகிறார்களே...
உண்மையான தொண்டர்கள் சசிகலாவை வரவேற்கிறார்கள். சசிகலா தலைமையை ஏற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல என்பது மக்களுக்குத் தெரியும். சசிகலாவும், டிடிவி தினகரனும் எம்எல்ஏக்களை ஒருங்கிணைத்து இந்த ஆட்சியை உருவாக்கினார்கள்.
இவ்வளவு பேசும் ஜெயக்குமார், நிதி அமைச்சர் பொறுப்பு கொடுத்தபோது, சசிகலா கொடுத்தால் வேண்டாம், சசிகலா குடும்பம் வேண்டாம் என்று அன்றைக்குச் சொல்ல வேண்டியதுதானே. ஏன் சொல்லவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அவர்களுக்குத் தீர்ப்பு கொடுத்துவிட்டார்கள்.
டிடிவி தினகரன் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் கட்சி பரிசீலிக்கும் என்று கே.பி.முனுசாமி சொல்கிறாரே?
அதற்கு ஜெயக்குமார் இது கே.பி.முனுசாமியின் கருத்து, அது கட்சியின் கருத்து அல்ல என்று சொல்லியிருக்கிறார். முனுசாமி சொல்வது சொந்தக் கருத்து என்றால், மைக் முன்பு பேசாமல் இருந்தால் தூக்கம் வராத ஜெயக்குமார் பேசுவது எல்லாம் சொந்தக் கருத்தா, கட்சியின் கருத்தா என எடப்பாடி பழனிசாமி சொல்லட்டும்.
அதிமுகவின் கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என்று போலீஸ் கமிஷ்னரிடம் அதிமுக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்களே...
பதட்டமும், பயத்தினுடைய வெளிப்பாடுதான் இதெல்லாம். எடப்பாடி பழனிசாமி மற்றும் இந்த அமைச்சர்கள் எல்லாம் பதட்டத்திலும், பயத்திலும் உள்ளார்கள். சசிகலா தமிழகம் வருவார். அவரை வரவேற்கத் தொண்டர்கள் தயாராகிவிட்டார்கள். அதனை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு கூறினார்.