Skip to main content

நித்தியானந்தா இனிமேல் இந்தியன் இல்லை... கப்பலில் பதுங்கியிருக்கும் நித்தி? கோபத்தில் அமித்ஷா போட்ட உத்தரவு!

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

எட்டு கிரகமும் உச்சத்தில் இருப்பவன் போனில் பேட்டரியோடும் பேசலாம் இல்லாமலும் பேசலாம்' என ஒரு திரைப்பட நகைச்சுவை புகழ்பெற்றது. அதுபோல எட்டு கிரகமும் ஏடாகூடத்தில் இருப்பவர் பரமசிவன் அவதாரம் என்று சொல்லிக் கொண்டாலும் படுகுழியில் வீழ்வார் என்கிறார்கள் நித்தியானந்தாவுக்கு நெருக்கமானவர்கள்.
 

nithy



"நித்தி அவர் மீதான கற்பழிப்பு வழக்கில் 48 முறை கோர்ட்டில் ஆஜராகவில்லை. கோர்ட் ஒரு வாரண்ட் கூட பிறப்பிக்கவில்லை. இந்தியாவில் உள்ள வி.ஐ.பி.க்கள் பயந்து நடுங்கும் அமலாக்கத்துறை கூட அன்னிய செலாவணி மோசடி வழக்கில் நித்தி மீது இதுவரை கை வைக்கவில்லை. அவர் மீது புகார் கொடுத்தவர்கள் மீதெல்லாம் அமெரிக்க நீதிமன்றங்களில் பொய் வழக்கு போட்டார் நித்தி. அதை அமெரிக்க நீதிமன்றம் கேள்வி கூட கேட்கவில்லை. அகமதாபாத் உயர்நீதிமன்றம் நித்தி குற்றவாளி என ஒரு வழக்கை நடத்தி வருகிறது. இப்படி காவல்துறை, நீதித்துறை என யார் என்ன சொன்னாலும் நகைச்சுவை நடிகர் வடிவேலு பாணியில் "நோ வெட்கம் நோ சொரணை நோ காதுல ரத்தம் வந்திங்' என கலாய்த்துக் கொண்டிருக்கும் நித்திக்கு ஒரு அதிபயங்கரமான ஆப்பு ஒரு தாயாரின் சாதாரண பெட்டிஷனால் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு கிரகம் சரியில்லை'' என்கிறார்கள் நித்தியின் பக்தர்கள்.

 

nithy



நித்திக்கு ஆப்பு வைத்த புகார் மனு 2014-ஆம் ஆண்டு நித்தியின் பிடதி ஆசிரமத்தில் திருச்சியைச் சேர்ந்த ஜான்சிராணி-அர்ஜுனன் தம்பதியின் மகளான சங்கீதாவின் மரணம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட மனு. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி அனுப்பப்பட்ட அந்த மனுவில் "எனது மகள் சங்கீதா 2010ம் ஆண்டு முதல் நித்தியின் பிடதி ஆசிரமத்தில் சன்னியாசினியாக இருந்தார். நான் பலமுறை எனது பெண்ணை விடுவியுங்கள் என கோரிக்கை வைத்தேன். அதை நித்தி ஏற்கவில்லை. என் பெண்ணை முழுமையாக அவரது ஆசிரமத்தில் இருந்து விடுவிக்கவில்லை. 2014ஆம் ஆண்டு எனது மகள் மாரடைப்பு வந்து இறந்து விட்டதாக போனில் தகவல் சொன்னார். சங்கீதாவின் உடல் பி.ஜி.எஸ். மருத்துவமனையில் இருந்தது. விஷம் பாய்ந்து மரணம் அடைந்ததை போல நீலநிறமாக காணப்பட்டது. உடல் முழுவதும் அடித்து கொடுமைப்படுத்தப்பட்டதை போல ரத்தம் கட்டி நின்ற அடையாளங்கள் இருந்தது. மூக்கு, கன்னம் பகுதிகளில் அடிபட்ட காயங்கள் இருந்தது. உடலை ஊருக்கு கொண்டு போகக் கூடாது. சங்கீதா சன்னியாசம் பெற்றவர். உடலை பிடதி ஆசிரமத்தில் புதைக்க வேண்டும் என நித்தியின் சிஷ்யர்களான நித்தி ஹம்சானந்தா, நித்தி பிரணானந்தா ஆகியோர் வற்புறுத்தினார்கள். நான் அதை ஏற்க மறுத்தேன். எனது மகளது சாவில் சந்தேகம் உள்ளது என்றேன்.
 

nithy



அவர்கள் நித்தியின் தூரத்து சொந்தக்காரரும் வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவருமான கல்லூரி அதிபருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி பிரேத பரிசோதனை செய்தார்கள். அதன்பிறகு நிறைய வெள்ளை பேப்பர்களில் கையெழுத்து வாங்கினார்கள். அதன் பிறகும் நித்தி ஹம்சானந்தாவும், பிராணானந்தாவும் சங்கீதாவின் உடலை எரிக்கச் சொன்னார்கள். அவர்களது எதிர்ப்பை மீறி நான் புதைத்தேன். பிடதி ஆசிரமம் அமைந்துள்ள ராம்நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். அதன்பிறகு திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் மறு பிரேத பரிசோதனை செய்தார்கள்.


அவர்கள் சங்கீதாவின் மண்டையோட்டை திறந்தபோது அங்கு மூளை இல்லை. ஜீன்ஸ் துணிதான் இருந்தது. அதுபோல இதயம், நுரையீரல், வயிறு போன்ற முக்கியமான பிரேத பரிசோதனைக்குள்ளாகும் உடல் உறுப்புகள் இல்லை. அங்கெல்லாம் துணிகள்தான் இருந்தது. எல்லாவற்றையும் பிரேத பரிசோதனை என்ற பெயரில் நித்தியின் உறவினரான அரசியல்வாதிக்கு சொந்தமான மருத்துவமனை சட்டவிரோதமாக அழித்துவிட்டது.

திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் இந்த சட்டவிரோத செயலை அறிக்கையாக தராத படி கரூர் மாவட்டத்தில் செல்வாக்காக இருக்கும் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும் இந்நாள் தி.மு.க. வி.ஐ.பி.யுமானவர் தடுத்து விட்டார். ஆனால் இந்த கொடுமைகளை நாங்கள் வீடியோக்களாக வைத்துள்ளோம். அரசு டாக்டர்கள் எங்களால் அறிக்கை தரமுடியாது என மறுக்க தனியார் மருத்துவமனை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சங்கீதாவின் மரணம் சந்தேகத்திற்குரிய மரணம் அல்ல என அறிக்கை அளித்தார்கள். இதை எதிர்த்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என 2015-ம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் எந்த விசாரணையும் நடக்கவில்லை. எனவே மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்பதுதான் அந்த மனு.


அகமதாபாத் உயர்நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம், ராம்நகர் மாவட்ட நீதிமன்றம், பெங்களூரு மாவட்ட நீதிமன்றம் என நான்கு நீதிமன்றங்களில் நித்தியின் மீது வழக்கு இருக்கிறது. ஜனார்த்தன சர்மாவின் மகள்களை கொண்டு வாருங்கள் என உத்தரவு போட்ட அகமதாபாத் நீதிமன்றத்தில் அந்த பெண்கள் அபிடவிட் தாக்கல் செய்தார்கள். இது உண்மையா பொய்யா என தெரியவில்லை. நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்கள். அந்த நாட்டு தூதரகத்தில் ஆஜராகி அவர்களது ஒப்புதல் முத்திரையுடன் அபிடவிட் தாக்கல் செய்யுங்கள் என அகமதாபாத் நீதிமன்றம் சொல்லிவிட்டு, நித்தி எங்கே அவரைப் பிடிக்க புளூகார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டதே... அது என்ன ஆச்சு என கேள்வி எழுப்பியது. 

சங்கீதாவின் பெற்றோர் அனுப்பிய மனுவையும் அகமதாபாத் உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்வியையும் பரிசீலிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுராக் குமார் என்கிற அதிகாரி மூலம் ராஜேஷ் கோயல் என்கிற கர்நாடக உள்துறை அதிகாரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. உடனடியாக சங்கீதாவின் கொலைவழக்கை பதிவு செய்யுங்கள். அந்த வழக்கின் அடிப்படையில் பொருத்தமான நீதிமன்றத்தை அணுகுங்கள். உலகில் நித்தி எங்கிருந்தாலும் கைது செய்து கொண்டு வரும் ரெட் கார்னர் நோட்டீசை கோர்ட் மூலம் பெறுங்கள் என பாஸ் போர்ட் சட்டப்படி உத்தரவு பிறப்பித்தது.

அதற்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் தோன்றிய நித்தி சட்டப்படி யாரும், என்னை எதுவும் செய்துவிட முடியாது என சவால் விட்டுள்ளார். அதுபற்றி நம்மிடம் பேசிய நித்தியின் ஆட்கள் "நித்தி இப்போது இந்திய குடிமகன் அல்ல. அவர் காசு கொடுத்தால் குடியுரிமை தரும் நாட்டின் குடிமகனாகி விட்டார். இனி நித்தியை இந்திய கோர்ட்டோ காவல்துறையோ தண்டிக்க முடியாது. அதைத்தான் நித்தி சட்டப்படி யாரும் என்னை எதுவும் செய்ய முடியாது என சொல்கிறார்'' என விளக்குகிறார்கள்.

"அத்துடன் அவர் எந்த நாட்டிலும் நிரந்தரமாக தங்குவதில்லை. போதைக் கடத்தல் மன்னர்கள் சர்வதேச கடல் பகுதிகளில் கப்பல்களில் சுற்றித் திரிவதை போல சுற்றித் திரிகிறார். கப்பலிலேயே உல்லாசமாக சுற்றியபடி வீடியோக்களை அனுப்புகிறார். கடந்த டிசம்பர் 2ஆம் தேதி அவர் அணிந்துள்ள நகைகள் மற்றும் கிரீடத்தை செய்த மலேசியா கோலாலம்பூர் நகரில் உள்ள தெருவில் உள்ள பிரபல நகைக்கடை அதிபரை நித்தி அழைத்தார்.

"நான் கப்பலில் இருக்கிறேன். என்னை வந்து சந்தியுங்கள்'' என சர்வதேச கடல் எல்லையில் உள்ள ஒரு கப்பலுக்கு அழைத்த நித்தியின் அழைப்பை ஏற்கனவே செய்த நகைகளுக்கு நீங்கள் காசு தரவில்லை என நிராகரித்தார் நகைக் கடை அதிபர்'' என விவரிக்கிறார்கள் நித்தியைத் தெரிந்தவர்கள்.

நித்தி மீது வழக்கு இருக்கிறது. அவர் எந்த நாட்டு குடிமகனாக இருந்தால் என்ன? கொச்சியில் இந்திய படகு மீது மோதிய இத்தாலிய கப்பலையே இந்திய அரசு சிறைபிடித்தது. நித்தி கப்பலில் இருந்தால் என்ன கரையில் இருந்தால் என்ன? உள்துறை அமைச்சர் அமித்ஷா செம கடுப்பில் இருக்கிறார். நித்தி இனி தப்பிக்க முடியாது என்கிறார்கள் அமித்ஷாவின் கோபத்தை அறிந்த மத்திய அரசு அதிகாரிகள்.