Skip to main content

ஆதரவற்ற முதியோருக்கு வலியில்லா மரணம்! - இறுதிக்கட்டத்தில் இன்முக சேவை!

Published on 15/05/2019 | Edited on 17/05/2019

நேத்ராவதி ஒரு மகளிர் நலவியல் மருத்துவர் (gynaecologist) ஆவார். புற்று நோய் பாதிப்புக்கு ஆளான அவரை, அருகிலிருந்து உறவினர்கள் கவனித்துக்கொண்டனர்.  பொருளாதார வசதி இருந்தும், உரிய மருத்துவ சிகிச்சை அளித்தும், அவருடைய வாழ்க்கையின் இறுதிக்கட்டம் வலி நிறைந்ததாக இருந்தது.  அந்த வேதனையிலும்,   ‘வறுமையில் உழலும் ஆதரவற்ற முதியவர்கள், நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளும் வசதியற்றவர்களாக இருப்பதால், மிகுந்த வலியுடன் மரணத்தைச் சந்திக்கிறார்களே!’ என்ற கவலை அவரைத் தொற்றியது. மரணம் நெருங்கிய வேளையில், ‘மனிதநேயம் மிக்கவர்கள் முயற்சித்தால், ஆதரவற்ற ஏழை, எளிய மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி, இலவச  மருத்துவ சிகிச்சையை இன்முகத்துடன் அளிப்பதன் மூலம் அவர்களின் இறுதி நாட்களை  வலியற்றதாக ஆக்கிட முடியுமே!’ என்று சிந்தனைவயப்பட்டார். 

 

nethravathi

 

54-வது வயதில் நேத்ராதேவி இறந்துபோனார். தற்போது, மதுரை – விளாச்சேரியில் அவர் பெயரில்,  ‘நேத்ராவதி வலி நிவாரணம் மற்றும் மறுவாழ்வு மையம்’ செயல்பட்டு வருகிறது. 50 படுக்கைகளைக் கொண்ட இந்த மையம், ஐஸ்வர்யம் டிரஸ்ட்டின் கீழ் இயங்குகிறது. வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு முற்றிலும் இலவசமாக உணவும் சிகிச்சையும் அளித்து அரவணைத்து வருகிறது. 
 

கண்டும் காணாமலும் கடந்து செல்கிறோம்!
 

பெற்று வளர்த்தவர்களின் பெருமதிப்பினை அறியாத பிள்ளைகள் அனேகம் பேர் இருக்கிறார்கள் நம் நாட்டில்.  அதனால், பெற்றோரில் பலரும் வயோதிக காலத்தில் வீட்டிலிருந்து வீதிக்கு வந்துவிடுகிறார்கள். முதுமைக்கே உரிய தள்ளாமை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள இவர்கள் ஆதரவற்றோராக சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். நிற்க முடியாமல், உட்கார முடியாமல் பிளாட்பாரங்களில் படுத்துக் கிடக்கின்றனர்.  புற்றுநோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்படும்போது இவர்களுக்கு ஏற்படும் வலியும் வேதனையும் கொடுமையானது. ‘இதெல்லாம் தலைவிதி’ என ஒற்றை வார்த்தையில் நமக்குள் சமாதானமாகி,   அவதிப்படும் முதியவர்களைக் கண்டும் காணாமலும் கடந்து செல்கிறோம்.  ஏனென்றால், பெற்றோரை சரிவர கவனிக்காமல், உரிய மரியாதையும் தராமல், அவரவர் இஷ்டத்துக்கு அவர்களை நடத்தும் போக்குதான் பல வீடுகளிலும்  உள்ளது. மனித மனம் சுருங்கிப் போனது. பெற்றோரோ, சொந்தபந்தங்களோ, அவர்களின் துயரத்தில் பங்கெடுத்துக்கொள்ளாதவர்களால்,  ஆதரவற்றோர் நிலையை எப்படி உணர்ந்திட முடியும்? விதிவிலக்காக இருக்கிறார்கள் ஏழு டாக்டர்களும்,  அவர்களின் சேவைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் நல்மனம் கொண்டவர்களும். 
 

ஐஸ்வர்யம் அறக்கட்டளை சேவையாற்றி வரும் பின்னணி இது:
 

டாக்டர்களான பாலகுருசாமி, அமுதநிலவன் (நேத்ராதேவியின் மகன்), சபரி மணிகண்டன் ஆகிய மூவரும் மதுரை மருத்துவக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். கிராமங்கள்தோறும் மருத்துவ முகாம் நடத்திய இவர்கள்,  வலியுடன் இறக்கும் தருவாயில் இருப்பவர்களை வீடுகளுக்கே தேடிச்சென்று சிகிச்சை  அளித்து வந்தனர். டாக்டர் ஸ்ரீவித்யா மஞ்சுநாத், நோய்த்தடுப்பு மற்றும் பரமாரிப்பு நிபுணர் சதீஷ், டாக்டர் பிரபுராம் நிரஞ்சன்,  நரம்பியல் நிபுணர் வெங்கடேஷ் ஆகிய நால்வரும் இவர்களோடு இணைந்து சேவையாற்றி வருகின்றனர்.  
 

nethravathi


2014-ல் ஐஸ்வர்யம் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இறக்கும் தருவாயில் குணப்படுத்த இயலாத நோயின் தாக்கத்தில் இருப்பவர்கள் யாரும் வலியுடன் மரணிக்கக்கூடாது என்பதே இந்த அறக்கட்டளையின் நோக்கமாக இருக்கிறது. ஆரம்பத்தில் வாடகைக் கட்டிடத்தில் மையம் நடத்திவந்த இந்த மருத்துவர்களின் உன்னத நோக்கத்தை அறிந்த ஜனார்த்தனனும், அவருடைய மனைவி ஜலஜாவும் விளாச்சேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜோசப் நகரில் இருந்த தங்களின் 27 சென்ட் நிலத்தை தானமாக மையத்துக்கு வழங்கி, பத்திரப்பதிவுக்கான செலவுகளையும் அவர்களே பார்த்துக்கொண்டனர். கட்டடம் கட்டவும் நிதி அளித்தனர். உறவினர்களிமிருந்தும் கட்டட நிதி சேகரித்துத் தந்தனர். ஆரோக்கியா நலவாழ்வு அறக்கட்டளை (டிவிஎஸ் டயர்ஸ்), ரோட்டரி கிளப் – மதுரை வடக்கு,  ஆரோ லேப் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவ குழுமம் போன்ற கொடையுள்ளம் கொண்டவர்கள் தொடர்ந்து அளித்துவரும் ஆதரவில், 24 மணி நேர நர்சிங் கேர், முழுநேர பிசியோதெரபி சிகிச்சை, தினசரி மருத்துவ சோதனை என, சொந்த கட்டிடத்தில்,  மிகச் சிறந்த முறையில், நேத்ராவதி வலி நிவாரணம் மற்றும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளித்து வருகின்றனர். 
 

அவஸ்தைகள் நிறைந்த அந்திமக்காலம்!
 

நம் தேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் வலியால் துடிதுடித்து மரணிப்பவர்கள் 10 லட்சம் பேர் என புள்ளிவிபரம் கூறுகிறது. இவர்களெல்லாம், புற்றுநோய், சிறுநீரக முடக்கம், எச்.ஐ.வி. பாதிப்பு போன்றவற்றால், தாங்கமுடியாத வலியுடன் மரணத்தை எதிர்கொண்டவர்கள். இவர்களின் இறுதி நாட்கள் எத்தனை கொடுமையாக இருந்திருக்கும்? படுக்கையிலேயே மலம் கழிக்கும் இவர்கள், ஊனமுற்றோராகவும், பார்வையற்றோராகவும் இருந்து,  உடன் இருந்து சுத்தம் செய்து கவனிப்பதற்கு  யாரும் இல்லாத நிலையில்,  எத்தகைய வேதனையை அனுபவித்திருப்பார்கள் இதுபோன்ற துயரங்களுக்கான ஒரு தீர்வாக இருக்கிறது இந்த நேத்ராவதி மையம். 
 

சேவை என்றாலும் ‘ரிஸ்க்’ அதிகம்!
 

இத்தகைய சேவையில் ஈடுபடுவது சாதாரண காரியமல்ல. எங்கோ சாலை ஓரத்தில் ஒரு முதியவர் கிடக்கிறார் என்றால், உடனே அவரைத் தூக்கி வந்துவிட முடியாது. அந்த ஏரியா காவல் நிலையத்தில் தெரிவித்து,  அனுமதி பெற்ற பிறகே, மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்து பராமரிக்க முடியும். மரணத்தின் விளிம்பில் இருப்பவர்கள் என்பதால், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிவதும் நடக்கும். அப்போது, அந்த இறப்பு குறித்து காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும். விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். பிறகு, இறுதி காரியங்களையும் இவர்களே  பண்ண வேண்டும்.  இத்தனை ‘ரிஸ்க்’ எடுத்துத்தான் ஆதரவற்ற முதியவர்களைப் பராமரித்து வருகிறது இம்மையம். 
 

கோவிலும் கடவுள்களும்..

எச்.ஐ.வி. தொற்று உள்ள கண்ணனுக்கு வயது 66 ஆகிறது. சென்னைவாசியான அவரை, பிரத்யேக அறையில் வைத்துப் பராமரித்து வருகின்றனர். இந்திராணிக்கு இரண்டு மகன்கள். ஒருவர் இறந்துவிட்டார். இன்னொரு மகன் வட்டி தொழில் பார்த்து வருகிறார். மூன்று வருடங்களாக இந்த மையத்தின் பராமரிப்பில் இருந்துவரும் அவர் “நான் பெத்த புள்ள இங்கே சிம்மக்கல்லுலதான் இருக்கான். ஒரு எட்டு வந்து பார்க்க மாட்டேங்கிறான். காசு பணமா கேட்கிறேன்? அவன் முகத்த பார்த்தா போதும். அதுக்குகூட எனக்கு கொடுப்பினை இல்லை.” என்று அழுதார். ராதாபாய்க்கு வயது 92. பாண்டிச்சேரியில் ஒரு காலத்தில் வசதியாக வாழ்ந்தவர். கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். “நாங்க இந்த டாக்டர் தம்பிகளை கடவுளா பார்க்கிறோம். அவங்களும் எங்கள கடவுளா பார்க்கிறாங்க. மொத்தத்துல இது ஒரு கோயில்.” என்று கையெடுத்துக் கும்பிட்டார். 

 

cnr

 

“மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம் செலவழிக்கிறது ஐஸ்வர்யம் டிரஸ்ட். அத்தனை செலவுகளையும் நன்கொடையாளர்கள் மூலம் சமாளித்துவிட முடியாது. அதனால், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை, தங்களின் பங்களிப்பாக டாக்டர்கள் தருகின்றனர்.” என்றார் மையத்தின் மேலாளரான முத்துவினோத். 
 

வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் ஆதரவின்றி தவிக்கும் முதியவர்கள் எங்கெங்கும் உள்ளனர். அதனால்,  இதுபோன்ற மையங்கள் மக்களின் தேவையாக இருக்கின்றன. நல்லுள்ளம் கொண்டோர், வசதி படைத்தோர், சமுதாய சேவையாற்றிட, ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது நேத்ராதேவி மையம். மக்களின் அரசாங்கமும், ஆதரவற்ற முதியோர் மீது அக்கறைகொண்டு, பரவலாக இத்தகைய மையங்கள் அமைத்திட திட்டங்கள் தீட்டி, செயல்படுத்த வேண்டும்.