Skip to main content

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...இசைக்கு உயிரூட்டும் பெனிட்டா!

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
  மழலைச்சொல் கேளா தவர்” 

என்கின்ற வள்ளுவரின் குறளின்- குழலுக்கு உயிரூட்டுகின்றார் பெனிட்டா பிரேம்குமார். பரபரப்பான திருநெல்வேலி- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையினூடே இருக்கின்றது மூங்கிலை சீர் செய்து, இசைக்கு உயிர் கொடுக்கும் பெண் சக்தியின் வீடு.! கணவரின் ஆதரவில் பெண் தொழில் முனைவோராக, தனித்துவமிக்க புல்லாங்குழல் தயாரிப்பாளராக, உலகளவில் புல்லாங்குழல் வணிகத்தை கொண்டு சென்றவராக அடையாளம் காணப்பட்ட பெனிட்டா பிரேம்குமாரின் கதையோ சுவாரசியமானது.


"2010- ம் ஆண்டு அது.! என்னுடைய இரண்டாவது குழந்தை பேறுகால நேரம்.! காதல் கணவனுக்கு ஒத்தாசையாகத் தான், எதேச்சையாகத் தான் பொறுப்பாக பார்த்துக்கொள்ள ஆள் வேண்டுமே..? அதனால் தான் அவருக்குத் துணையாக இத்தொழிலுக்கு வர வேண்டியாதாயிற்று. தொடக்கத்தில் புல்லாங்குழலுக்குத் தேவைக்காக கொள்முதல் செய்து வந்த மூங்கில்களை தரம் பிரிக்கின்றது, அளவெடுத்து வெட்டிக்கொள்வது, கரி அடுப்பில் தீ மூட்டி கம்பியை காய வைச்சு மூங்கில்களில் துளையிடுவது, வார்னிஷ் அடிப்பது இப்படித்தான் சின்ன சின்ன வேலையாக, ஒவ்வொன்றாக அவரோட துணையுடன் கத்துக்கிட்டேன்.


வெயில்காலம் என்றால் இரவு நேரத்தில் வேலை செய்வோம். எதுவுமே கஷ்டமாக தெரியவில்லை. நாளடைவில் அவர் வியாபாரத்தைக் கவனிப்பதற்காக வெளியூர் பயணம் செல்ல, நான் முழுவதுமாகவே தயாரிப்பு வேலைகளில் இறங்க வேண்டியதாயிற்று. மூங்கில் கழிகள் புல்லாங்குழலாய் முழுவடிவம் பெற்று ஒலியாய்- இசையாய் வெளிவரும் அத்தருணம் மகிழ்வின் உச்சக்கட்டம்" என்கின்றார் பெனிட்டா பிரேம்குமார்.

 

கேரள அரசிடமிருந்து பெறப்படும் கல்மூங்கில், மைக்கலி மற்றும் ஒலைக்கலி வகை மூங்கில்களை பெற்று கர்னாட்டிக் இசை தரும் புல்லாங்குழல் 24 வகைகளாகவும்,  ஹிந்துஸ்தானி இசை படைக்கும் புல்லாங்குழல்கள் 24 வகைகளாகவும் பிரிக்கப்பட்டு இரண்டு இசை வடிவத்திலும் புல்லாங்குழலை உருவாக்குகின்றனர். இதில், அளவில் பருமனாக இருக்கும் கட்டி தன்மையோடு உள்ள மூங்கில் கழிகள் எட்டுத்துளைகள் இடப்பட்டு கர்னாட்டிக் இசைக்கான புல்லாங்குழல்களாக உருவெடுக்க, மெலிதான, கனம் குறைவான மூங்கில் கழிகள் ஆறு துளைகள் இடப்பட்டு ஹிந்துஸ்தானி ரக இசைக்கான புல்லாங்குழலாக மாறுகின்றது.

 


ஏறக்குறைய ஐந்து நபர்களைக் கொண்டு இயங்கும் புல்லாங்குழல் தயாரிப்புக்கூடம் காலை 09.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை என 10.00 மணி நேரம் இயங்கி வருகின்றது. இங்கு புல்லாங்குழல் தயாரிப்பது இன்றல்ல, நேற்றல்ல.! ஏறக்குறைய 57 வருட பாரம்பரியம் கொண்டது. 1964ம் ஆண்டு பெனிட்டாவின் கணவரின் தந்தையால் துவக்கப்பட்ட புல்லாங்குழல் தயாரிப்பு 1980ம் ஆண்டில் அவரின் மறைவிற்கு பின்னரும் அவருடைய மகன்களால் முன்னெடுத்து செல்லப்பட்டு, தற்பொழுது பெனிட்டாவால் நிர்வகிக்கப்படுகின்றது.


இசைக்கு உயிரூட்டும் பெனிட்டா பிரேம்குமாருக்கு வாழ்த்துகள்.!!!!