நடிக்காததால் வென்ற நடிகன்!
விஜய் சேதுபதி - வெற்றிக்குப் பின்னால்...

இன்று (16-01-2018) நடிகர் விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள். தமிழ் சினிமாவின் தற்போதைய நடிகர்களில் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோரது பிறந்தநாட்கள் மட்டுமே ரசிகர்களுக்குப் பரவலாகத் தெரிந்து கொண்டாடப்படுகின்றன. அந்த வரிசையில் இணையும் அளவுக்கு, இன்று இணையத்தில் விஜய் சேதுபதி புராணம். அவரது அடுத்த படமான 'சீதக்காதி'யின் ஃபர்ஸ்ட் லுக் வேறு வெளியானதால் இரட்டை மகிழ்ச்சியடைந்தனர் இந்த வெற்றி வேதாளத்தின் ரசிகர்கள். நடிப்பைத் தாண்டி ரசிக்கப்படும் நடிகர்களின் வரிசையில் இணைகிறார் இந்த ஆண்டு நாற்பது வயதைக் கடக்கும் இந்த நடிக்கத் தெரியாத நடிகன்.
- விஜய் சேதுபதியை படங்களின் மூலமாக மட்டுமே அறிந்தவர்களுக்கு முதலில் பிடித்தது அவரது இயல்பான நடிப்பு என்றால், சினிமா உலகில் அவரைத் தெரிந்தவர்களுக்கு முதலில் பிடித்தது அவரது நட்பை மறக்காத குணம். அந்த அளவுக்குத் தன் பழைய நண்பர்களுடன் தொடர்பிலும், எவ்வாறெல்லாம் உதவ முடியுமோ அவ்வாறு உதவிக்கொண்டும் இருப்பார். இவரது நடிப்பு வாழ்க்கையின் தொடக்கமாக இருந்த 'ஷார்ட் -ஃபிலிம்' காலத்தில் நணபர்களான நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், மணிகண்டன் ஆகியோரது நட்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் இவர், அவர்கள் படமென்றால், எப்பொழுது அழைத்தாலும் சென்று விடுவார். மூன்றாண்டுகளுக்கு முன்பு விஜய் சேதுபதியின் சில படங்கள் வரிசையாக தோல்வியடைந்தன. அவை பெரும்பாலும், நட்புக்காக இவர் ஏற்றுக்கொண்டு நடித்தவை.

புதுப்பேட்டை படத்தில்...
- திரைப்பட உலகில் எந்த நடிகரானாலும் படங்களுக்கு வெளியே தங்களுக்கென ஒரு பிம்பத்தை பராமரிக்க விரும்புவர். எளிமை, வெளிப்படையான பேச்சு என்று இருந்தாலும் கூட அதிலும் ஒரு பிம்பத்தை உருவாக்கி அதனுள்தான் இருப்பார்கள். ஆனால், திரைப்படங்களில் தான் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள், திரைப்பட விழாக்களுக்கு தான் அணிந்து வரும் உடைகள், நேர்காணல்களில் பேசும் வார்த்தைகள் என எதிலுமே 'இமேஜ்' என்ற ஒன்றை சுத்தமாகக் கருதாதவர் விஜய் சேதுபதி. ஒரு விழாவில் 'இங்குள்ள நாயகிகளில் நீங்கள் யாரைக் கடத்திச் செல்ல விரும்புவீர்கள் என்று கேட்டபொழுது, எந்தத் தயக்கமும் 'இமேஜ்' கவலையுமில்லாமல் 'நயன்தாரா' என்று கூறியவர்.
- நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஓரிரு ஆண்டுகளிலேயே, வயதான தோற்றத்தில் நடித்தார். 'சூது கவ்வும்', 'ஆரஞ்சு மிட்டாய்', 'விக்ரம் வேதா' வரிசையில் இப்பொழுது 'சீதக்காதி' என வயதான பாத்திரங்களைத் தயங்காமல் ஏற்று கலக்குகிறார் மக்கள் செல்வன்

- சமீபத்தில் நடித்த ஒரு விளம்பரத்துக்காக வாங்கிய சம்பளத்தில், ஒரு பகுதியான 50 லட்சம் ரூபாயை அரியலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக பிரித்து அளித்தார். அதைப் பாராட்டிப் பேசுபவர்களிடம் அது ஒரு பெரிய விஷயமில்லை என்று மறுப்பார்.
- ஒரு விருது விழாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் விருதுகளை தவிர்த்து வந்தார். இன்னொரு விழாவில், விஜய் சேதுபதி அரசை விமர்சித்துப் பேச, 'அந்த அரசு உங்களுக்கு தேசிய விருது தந்தால் ஏற்பீர்களா?' என்று கேட்ட செய்தியாளரிடம் 'ஏற்க மாட்டேன்' என்று உறுதியாகக் கூறினார். சமீபத்தில் தனக்கு வழங்கப்பட்ட விருதுகளை தான் குருநாதராக மதிக்கும் சீனு ராமசாமி கூறியதால் பெற்றுக்கொண்டாராம்.

சூப்பர் டீலக்ஸ்
- சினிமாவுக்காக முயற்சி செய்துகொண்டிருந்த காலகட்டத்தில் இயக்குனர் பாலுமகேந்திராவை சந்தித்த போது, விஜய் சேதுபதியின் கண்கள் வசீகரமானது என்று கூறி, புகைப்படம் எடுத்தார் பாலு மகேந்திரா. அந்தப் புகைப்படத்தைப் புதையலாக பத்திரப்படுத்தியிருக்கிறார்.
- பொதுவாக ஒரு இயக்குனரின் படம் தோல்வியடைந்தால், அடுத்து அந்த இயக்குனரின் படத்தை நடிகர்கள் ஏற்கத் தயங்குவர். அதிலும் வசூல் ரீதியாக ஒரு பெரிய வெற்றிப் படம் கூட கொடுத்ததில்லையென்றால் அதிகமாகத் தயங்குவர். ஆனால் இவர், 'ஓரம்போ' , 'வ' படங்களை இயக்கிய புஷ்கர்-காயத்ரி, 'ரேணிகுண்டா' இயக்குனர் பன்னீர்செல்வம், 'பண்ணையாரும் பத்மினியும் இயக்குனர் அருண் ஆகியோருடன் தயக்கமின்றி பணிபுரிந்து விக்ரம் வேதா, கருப்பன், சேதுபதி என வெற்றிகளைக் கொடுத்தார்.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய 'ஏஞ்சல்' (2011) குறும்படத்தில்
- தான் சென்ற ஊர்களிலேயே தன் மனதுக்கு மிக நெருக்கமாக உணர்ந்ததாக திண்டுக்கல்லை குறிப்பிடுகிறார் விஜய் சேதுபதி. கருப்பன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக திண்டுக்கல்லில் தங்கியிருந்த பொழுது, தினமும் ரசிகர்களை சந்தித்தார், அவர்களுடன் கொண்டாட்டமாக இருந்தார். ரசிகர்கள் இவருடன் கன்னத்தோடு கன்னம் வைத்து மிக அன்னியோன்யமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
- 2016இல் ஆறு, 2017இல் நான்கு என வரிசையாகப் படங்களைக் கொடுத்துவரும் விஜய் சேதுபதியின் திட்டத்தில் 2018 வெளியாகவுள்ள படங்களின் எண்ணிக்கை ஏழு. இத்தனை பிசியான நடிகருக்கு ஒரு படத்தை இயக்கவேண்டுமென்பது ஆசை
- 'ஏதோ ஒன்றை வைத்து நம்மைப் பிரிக்க நினைப்பவன் நமக்குத் தலைவனாக இருக்க முடியாது' என்று கூறும் விஜய் சேதுபதிக்கு சமீபத்தில் திராவிடர் கழகம் சார்பாக 'பெரியார் விருது' வழங்கப்பட்டது
- VBK