உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1.77 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 600-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 18,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமூகத்தில் அடிதட்டு மக்களான நரிக்குறவ சமூக மக்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்கிறார்கள் என்று நாம் கள ஆய்வு செய்தோம். இதுதொடர்பாக முதியவர் ஒருவர் பேசும் போது, " சாமி, இந்தக் கரோனா வந்ததில் இருந்து ஊர் திருவிழாக்கள் எதுவும் நடைபெறவில்லை. சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கிறது. ஊர் மக்கள் கொடுக்கும் உணவினை கொண்டுதான் நாங்கள் பிழைக்கிறோம். கடன் வாங்கி வியாபாரத்திற்காக விளையாட்டு பொருட்களை எல்லாம் நிறைய வாங்கி வைத்துள்ளோம். கடனை அடைக்க வேண்டும். பிள்ளை குட்டிகள் பட்டினியாகக் கிடக்கிறார்கள். எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அரசாங்கம் எங்களுக்கு எதாவது செய்ய வேண்டும். சாமி, நீங்களே பாருங்க, பொருள்கள் எல்லாம் எவ்வளவு இருக்கிறது பாருங்கள். இவைகளை எப்போது விற்று கடனை அடைப்பது" என்று வருத்தத்துடன் நம்மிடம் தெரிவித்தார்கள்.