ஆளும் அதிமுகவுக்கு எதிராக டிடிவி தினகரன் அணியில் இருந்து தக்க பதிலடி கொடுத்து வந்த நாஞ்சில் சம்பத், தினகரன் தனது புதிய அமைப்பை அறிவித்தவுடன், திராவிடத்தையும் அண்ணாவையும் மறந்துவிட்டதாக குற்றம் சாட்டியதுடன், அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில் நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்த தினகரன் அணியின் தங்கத்தமிழ் செல்வன், நாஞ்சில் சம்பத் நல்ல மனிதர். நாஞ்சில் சம்பத்துக்கு பக்க பலமாக இருந்தோம். பல மேடைகளில் பேசியிருக்கிறார். அந்த உழைப்பை மதிக்கணும். என்ன காரணத்திற்காக போனார் என்று தெரியவில்லை. வாய்ப்பு இருந்தால் பேசி சமாதானம் ஆகிவிடலாம் என்பதே எங்கள் கருத்து என கூறியிருந்தார்.
இதுகுறித்து நாஞ்சில் சம்பத்திடம் கேட்டபோது,
என்னை யாரும் சமாதானப்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டாம். நான் எடுத்த முடிவில் தெளிவாக இருக்கிறேன். யார் மீதும் எனக்கு வருத்தமோ, வன்மமோ இல்லை. நான் எதிர்நிலை அரசியல் எடுக்கவும்மாட்டேன் டிடிவி தினகரனுக்கு எதிராக. இனி உள்ள காலங்களில் தமிழ் மேடைகளில் என்னுடைய கொடி பறக்கும். நான் முடிந்துபோவேன் என்று கருதினால் தமிழ் எனக்கு முடிசூட்டும் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையில் அடுத்த அத்தியாயத்திற்கு கால் எடுத்து வைக்கிறேன். இவ்வாறு கூறினார்.