நாங்குநேரியில் பள்ளி மாணவரை சக மாணவர்கள் கொலை வெறியில் கொடூரமாக வெட்டிய சம்பவம், நீட் தேர்வில் ஆளுநர் பேசியது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு கல்வியாளரும், அரசியல் விமர்சகருமான ராமசுப்பிரமணியன் நமக்கு பேட்டி அளித்தார். அவரது பேட்டியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.
நாங்குநேரி சம்பவத்தில் ஆசிரியர்கள் மீதும் தவறுகள் இருக்கிறது என்கிறார்களே. ஒரு கல்வியாளராக உங்கள் பார்வை?
நாங்குநேரி சம்பவத்தில் எல்லோர் மீதும் தவறு இருக்கு. ஆசிரியர்களை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது. இதுபோன்ற விஷயங்களில் ஆசிரியர்களின் பாதுகாப்பும் முக்கியம். ஒருவேளை ஆசிரியர்கள் சம்பவம் குறித்து நடவடிக்கை மேற்கொண்டால், அவர்களும் தாக்கப்பட நேரும். மேலாதிகாரிகளிடம் சென்று முறையிட்டாலும் சிக்கல் தான். ஆசிரியர்களால் தான் இதுபோன்ற பிரச்சனைகளை சரிசெய்ய முடியும் என்பது முற்றிலும் தவறான கருத்து. ஆனால், ஆசிரியர்கள் பள்ளிக் கால தொடக்கம் முதலே மாணவர்களிடம் ஒற்றுமை பேணும் விதமாக அறிவுறுத்துவது அவர்களின் கடமை. கூடுதலாக கல்வித்துறை அதிகாரிகளும் அவ்வபோது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
இம்மாதிரியான சம்பவங்கள் நேற்று இன்று நடப்பவை அல்ல; தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. திமுக, அதிமுக என்றில்லை கடந்த ஆட்சியிலும் இதுபோன்று மாணவர்கள் தங்கள் சமூகத்தைச் சார்ந்த வண்ணக் கயிறுகளை கைகளில் கட்டுவது, பிறந்தநாள் அன்று பள்ளியின் வெளியே சமூக அடையாளத்துடன் பேனர்கள் வைப்பது என இது அப்போதும் நடந்தது. தற்போதும் தொடர்கிறது.
வன்முறைகள் தீர்க்கப்பட வேண்டுமென்றால், ஆசிரியர்கள் மட்டுமின்றி, கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆட்சியர், தாசில்தார் போன்றவர்கள் பள்ளிகளுக்கு அவ்வப்போது ஆய்வுக்கு செல்ல வேண்டும். இன்றைய சூழலில் மகாத்மா காந்தி போல ஓர் தலைவர் இல்லாதது வருந்தக் கூடிய ஒன்று.
பிராமணர்கள் உள்பட சில முன்னேறிய வகுப்பினர். தாழ்த்தப்பட்டவர்களை கீழானவர்களாக நடத்துவது. குறித்தான உங்கள் பார்வை?
முன்னேறிய வகுப்பினர் என்று நாம் கூறுவது உகந்தது இல்லை. பட்டியலினத்தவர், பட்டியலினமல்லாதவர் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். பிராமண சமூகம் இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடவே மாட்டார்கள். இதுவரை ஒரு பிராமண பையன் இதுபோல் அரிவாளைக் கொண்டு யாரையாவது வெட்டினான் என்று சொல்லமுடியுமா. அல்லது சமூகத்தில் மிகப்பெரிய பிரச்சனையை உண்டாக்கினான் என்று சொல்லமுடியுமா.
சிதம்பரம் கனக சபைக்கு உள்ளே ஒரு பட்டியலினப் பெண் செல்வதை தடுத்த சம்பவம் நடந்திருக்கே?
நிச்சயமாக பிராமண சமூகம் இதுபோன்ற தவறுகளை செய்யவே செய்யாது என நூற்றுக்குநூறு நான் நம்புகிறேன். அதுதான் உண்மையும். இதுபோல் குற்றச்சாட்டுகளை வேண்டுமானால் வைக்கலாம். அதற்காக நான் மற்ற சாதியை பற்றி தவறாக பேசவரவில்லை. ஏனென்றால் அது பெரிய பிரச்சனையாக உருவாகும் என்பது எனக்கு தெரியும். ஆனால், நான் சேர்ந்த பிராமண சமூகத்தைப் பற்றி நீங்கள் பேசுவதால் சொல்கிறேன். அவர்கள் (பிரமாணர்கள்) தவறான வழியில் செல்லவே மாட்டார்கள். சமூகத்தில் ஏதாவது பயங்கரமான காரியத்தைச் செய்தார்கள் என ஏதாவது ஒரு நிகழ்வை காட்ட முடியுமா?
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் கனக சபை மேல் ஏற வேண்டாம் என அரசு சொல்லி உத்தரவு போடப்பட்டது. ஆனால், தர்ஷன் எனும் தீட்சிதர் முக்குருணி பிள்ளையார் கோவிலில் ஒரு பெண்ணை தாக்கியிருந்தார். அவருக்கு தனிப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன. அவர் கனகசபைக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்த காலத்தில் ஒரு பெண்ணை கனகசபை மேல் அழைத்து சென்று பிரச்னையை உருவாக்கினார்.
தடைக் காலம் இருந்ததால் தான் எவரும் அனுமதிக்கப்படவில்லை. சிதம்பரம் கோவிலில் மூன்று நாட்கள் தொடர்ந்து விழா நடக்கும் சமயம். ஆதலால், நிறைய நகைகளை அணிவித்து ஊர்வலங்கள் நடக்கும். அந்த சமயம் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பது அவசியம். கனக சபை மேலேறி பார்த்தாலும் முழுவதுமாக தரிசிப்பது சாத்தியமில்லை. தடையெல்லாம் நீங்கி இப்போது அனைவரும் அனுமதிக்கப் படுகிறார்கள். ஆகவே குறிப்பிட்ட சாராரை குற்றம் சாட்டுவது ஏற்கக் கூடியது அல்ல.
நாங்குநேரி விசயத்தில் முதல்வரும், கல்வித்துறை அமைச்சரும் நேரில் சென்றிருக்க வேண்டும் எனும் கருத்துகள் சொல்லப்படுகிறதே?
பாதிக்கப்பட்டவர்களை முதல்வர் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். பின்னர், அமைச்சர் தங்கம் தென்னரசு, சபாநாயகர் அப்பாவு போன்றவர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இது குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில், விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அமைச்சரை ஒட்டுமொத்தமாக குறைகூறுவது சரியல்ல. சம்பவம் நடந்ததை அறிந்து அவர், கல்வி செலவுகளை ஏற்பதாகவும் கூறியுள்ளார். இதைவிட ஒரு அரசால் என்ன செய்ய முடியும். ஆக எல்லா செயலையும் குறை சொல்லி விட முடியாது. மூத்தப் பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் சிலர் தான், "திமுக என்ன செய்துவிட்டது" என்கிறார்கள். இதைவிட என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை. முதல்வர், அமைச்சர், சபாநாயகர்மற்றும் கல்வித்துறை அமைச்சர் என அனைவரும் அவர்களது பணியினை சிறப்பாக செய்துள்ளார்கள். அப்பட்டமாக குறை சொல்வதை ஏற்க முடியாது.
விழுப்புரத்தில் கள்ளச் சாராயம் குடித்து இறந்தவரை நேரில் சென்று பார்த்த முதல்வர். இதற்கு சென்றிருக்க வேண்டாமா?
காரியம் பெரியதா? வீரியம் பெரியதா என்று பார்த்தால். நாம் காரியத்தை தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக, அனைத்து நடவடிக்கைகளிலும் திமுக அரசு முறையாக செய்து வருகிறது. நேரில் செல்வதால் மட்டுமே தீர்வுகள் எட்டப்படுவதில்லை. உட்கார்ந்த இடத்தில் இருந்தே உரிய தீர்வுகளை வழங்கினால் ஏற்கத்தான் வேண்டும். முன்பு விமர்சித்த பலர், இப்போது விசாரணைக் குழு அமைத்ததை பாராட்டுகிறார்கள். கூடுதலாக மா. சுப்ரமணியனும் ஓர் சிறப்பு மருத்துவக் குழுவினை ஏற்பாடு செய்து அனுப்பியுள்ளார். இதற்கு மேல் ஒரு அரசால் என்ன செய்ய முடியும் என தெரியவில்லை. குறை கூற ஆரம்பித்தால், அது நீண்டு கொண்டே போகும்.
நாங்குநேரி போன்ற சம்பவம் திரைப்படங்களால் தான் நிகழ்ந்தது என்று கூறப்படுகிறதே?
இது அண்ணாமலை, சமீபத்தில் பேசியதாக நினைக்கிறேன், அவர் நடைபயணம் மேற்கொள்ளும் பொழுது விஷ விதிகளை தூவி விடக் கூடாது எனக் கேட்டு கொள்கிறேன். நாற்பது வருடங்களாக நான் திரைப்படம் பார்ப்பதை தவிர்த்து விட்டேன். ஆனால், சில படங்களின் பெயர்கள் அறிவேன். சிவாஜியின் தேவர் மகன், சின்னக் கவுண்டர் உள்ளிட்ட படங்கள் நிறைய வந்துள்ளது. அவற்றையெல்லாம் இவர்கள் கொண்டாடினார்கள். ஆனால், மாமன்னன் வெளியானது தவறாகிறது. முந்தைய படங்கள் சரியென்று சொன்னால் மாமன்னன் தவறான சித்தரிப்பா? சமூகத்தை தோலுரித்து காட்ட சில படங்களை தயாரிக்கிறார்கள். இதனை திரைப்படமாகவே தான் அணுக வேண்டுமே தவிர, தனிப்பட்ட விமர்சனங்களை வைக்கக் கூடாது. இவர்கள் உருவாக்கும் படங்கள் தான் பிரச்னை என அணுகுவது முற்றிலும் தவறு.