மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞருக்கு தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் புகழஞ்சலி நிகழ்ச்சி நடந்து வருகிறது. கலைஞரின் சொந்த மாவட்டமான திருவாரூரிலும் புகழஞ்சலி செலுத்தினர்.
திருவாரூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கலைஞருக்கும், தமிழ்ச் சங்க முன்னாள் செயலாளரும், நல்லாசிரியர் விருது பெற்றவருமான செல்லத்துரைக்கும் புகழஞ்சலி நிகழ்ச்சி 07.10.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை வர்த்தக சங்க கட்டிடத்தில் நடந்தது.
கடுமையான மழை இருக்கும் என ரெட் அலர்ட் விட்டிருந்தது வானிலை ஆய்வு மையம். அந்த நிலையிலும் தமிழ் ஆர்வலர்கள் குவிந்திருந்தனர். புகழஞ்சலி நிகழ்ச்சியில் நக்கீரன் ஆசிரியர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசியவர்கள் அனைவருமே கலைஞர் செய்த சாதனைகள், அவர் கண்ட சோதனைகள், சொந்த மண்ணுக்கு செய்த நற்காரியங்களை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு பேசினார்கள்.
நக்கீரன் ஆசிரியர், ‘’திருவாரூர் மண் புன்னியமானது. நக்கீரன் துவங்கி முப்பது ஆண்டுகளை கடந்து விட்டது. கடந்து வந்த காலகட்டத்தில் எத்தனையோ சோதனைகளை சந்தித்தோம், நிறைய இழந்திருக்கோம். அதேபோல நிறம்ப பெயரையும், புகழையும் சம்பாதிச்சிருக்கோம். அதில் எங்களுக்கு மிகப்பெரிய புகழ் கலைஞரின் நட்பு கிடைத்ததும், அவரது ஊரான திருவாரூரில் நட்பு கிடைத்ததும்தான்.
வீரப்பன் விவகாரத்தில் நாங்கள்பட்ட துன்பங்கள், துயரங்கள் சொல்லால் சொல்லிவிட முடியாது. கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்பு விவகாரத்தில், ஜெயலலிதா உச்சத்திற்கே சென்று எங்களை பழிவாங்கினார். காட்டிலேயே என்னை தீர்த்துக்கட்டக் கூட முடிவு செய்தார். தேவாரம் வெளிப்படையாக பேட்டியே கொடுத்தார். அப்போது பெற்ற தகப்பனைப்போல் இருந்தவர் கலைஞர்.
2004ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது எப்படியாவது பிரதமர் ஆகிவிட வேண்டும் என முயற்சித்து அதற்கு தடையாக இருப்பவர்களை கைது செய்ய திட்டமிட்டார் ஜெயலலிதா. என்னை பொடா சட்டத்தில் கைது செய்து அரை நிர்வானமாக்கி கொடுமை செய்து கலைஞரையும், ரஜினியையும் கைது செய்ய ஒரே ஒரு கையெழுத்தை போடச் சொல்லித் துன்புறுத்தினர். நான் போடவில்லை. கலைஞரோ ஒரு மூத்த பத்திரிக்கையாளராக நின்று போராடினார்.
மாபெரும் கூட்டத்தைக் கூட்டி கண்டன பொதுக்கூட்டங்களை நடத்தினார். 137 எம்.பி.க்கள் முலம் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கச் செய்தார். அந்த போராட்டத்தின் பலன் பொடா சட்டத்தில் இருந்து வெளியில் வந்தோம். இப்படி பத்திரிகையாளராக இருந்ததால் பத்திரிகையாளனின் உரிமைக்காகவும், தொழிலாளியாக இருந்து தொழிலாளர்களின் நலனுக்காகவும், விவசாயியாக இருந்து விவசாயிகளின் நலனுக்காகவும், அவர் பிறந்த மண்ணிற்கான நலனுக்காகவும் 94 ஆண்டு காலம் உழைத்திருக்கிறார். அவருக்கு நக்கீரன் குடும்பமே என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. அவர் புகழ் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். கலைஞர் இறந்த பிறகும் அவர் தொகுதியின் மீது உள்ள பயம் ஆளும் ஆட்சியாளர்களுக்கு போகவில்லை. அதனால்தான் மழையை காரணம் காட்டி இடைத்தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போடுகிறார்கள்’’ என்று பேசி முடித்தார்.
நிகழ்ச்சியின் இடையிடையே கலைஞருக்கான புகழஞ்சலி கவிதை வாசித்தனர், அப்படி வாசிக்கப்பட்ட கவிதையில் சக்கர நாற்காலி பேசுகிறது என்கிற கவிதை வந்திருந்தவர்களின் மனதை கனக்கச் செய்தது. ’’பகலில் என்னோடு இருந்த நீ என்னை பார்த்தபடி படுக்கைக்கு சென்றாய், பார்க்க இயலாது படுத்தபடி சென்றாய், அடுத்த பத்து நாட்களில் பரிதவிக்கவிட்டு சென்றாய். உன்னோடு சேர்த்து என்னை புதைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன், தேவை முடிந்த பின் ஓரங்கட்டுவது அரசியலில் மட்டுமல்ல எனக்கும் தான்’’ என்று செல்லும் அந்த கவிதையின் வரி பலரையும் கலங்க வைத்தது.