Skip to main content

ரோடு போட்டாலும், யார் கேட்டாலும், தரவேமாட்டோம்! - நில உரிமையை நிலைநாட்டும் நெயில் ஹவுஸ்கள்  

Published on 06/07/2018 | Edited on 06/07/2018
nail house

 

சேலம் டூ சென்னை பசுமை வழிச்சாலை வந்தால் இரண்டு மணி நேரம் மிச்சமாகும் என்று பசுமையான வயல்களை அழித்தும், மலைகளைக் குடைந்தும் பசுமை வழிச்சாலையை அமைக்க இருக்கின்றன மத்திய மாநில அரசுகள். இதற்கு மக்களிடையே எதிர்ப்பும் கட்சிகளிடமிருந்து கண்டனங்களும் வந்த வண்ணம் உள்ளன. இருந்தும் சின்சியராக மாநில அரசு பொது மக்களின் நிலங்களை கையகப்படுத்த ஆரம்பித்துவிட்டது. நீதிமன்றத்தில் இதற்காகத் தடை உத்தரவு கோரியும், சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையெல்லாம் பார்க்கும்போதுதான் நெயில் ஹவுஸ் என்ற ஒன்றை பற்றி தெரிகிறது.

 

nail house 2

 

நெயில் ஹவுஸ், அதான் ஆணி வீடு. ஆணி அடித்தார் போல் அங்கேயே சொருகி கொள்ளும் வீடுகள். நிலம் என்பது ஒருவருடைய உரிமை என்று பல அரசியல் சித்தாந்தங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. அரசாங்கத்திற்கோ அல்லது ஒரு கார்ப்ரேட்டுக்கோ பெரிய அளவில் நிலம் வேண்டும், அப்படி வாங்கும்போது அந்த இடத்தில் ஒருவருடைய குறுகிய நிலம் இருந்தால், அதையும் வாங்கவேண்டும் அல்லவா? அதற்கு அவர்கள் நிலத்திற்கான பணம், அல்லது வேறொரு நிலத்தை அதன் உரிமையாளருக்கு அளிக்க வேண்டும். இதுவும் அந்த உரிமையாளர் ஒப்புக்கொண்டால் மட்டுமே. அப்படி நிலம் அரசாங்கத்திற்காக தேவைப்படுகிறது என்றால்,  பலர் கொடுத்துவிடுவார்கள். ஆனால், சிலர் 'என் நிலம் என் உரிமை' என்று வெளியேற மாட்டார்கள். அப்படி வெளியேறாமல், சுற்றி சாலையோ வேறு கட்டுமானங்களோ இருக்க நடுவில் தனியாக, பிடிவாதமாக நிற்கும் வீடுகள்தான் நெயில் ஹவுஸ் என்று அழைக்கப்படுகின்றன.

 

nail house 3

 

இதுபோன்ற வீடுகள் பல சீனாவில் காணப்படுகின்றன. நீண்ட சாலைக்கு நடுவில் தடையாய் ஒரு வீடு, சுற்றிலும் வேறொருவர் கையகப்படுத்திய நிலத்திற்காக பள்ளம் பறிக்க நடுவில் ஒரு வீடு தீவு போன்று காட்சியளிக்கிறது. அமெரிக்காவில் பெரிய கட்டடத்திற்கு நடுவில் ஒரு சின்ன குறுகிய வீடு. இதுபோன்ற வீடுகளைப் பார்க்கும்போது, தனி மனிதனின் உரிமைக்கும் போராட்டத்துக்கும் அந்த அரசுகள் கொடுத்திருக்கும் மரியாதை (அல்லது உறுதியான சட்டம்) தெரிகிறது. இந்தியாவில் மட்டும் ஏன் இதுபோன்ற நெயில் ஹவுஸ்கள் இல்லை? யாரும் கேட்காத சாலைக்காக இத்தனை ஆயிரம் ஏக்கர் விவசாயத்தை, மரங்களை பிடுங்கி எறியும் அரசுக்கு ஓரிரு வீடுகளா பெரிய விஷயம்?