ஆண்டாண்டு காலமாகத் தொடரும் ஏலியன் கதைகள் இந்த ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. நாசா வெளியிட்ட மர்ம விண்கல வீடியோ, இஸ்ரேல் விஞ்ஞானியின் ஏலியன் குறித்த கருத்து, உட்டா மாகாணத்தில் கண்டறியப்பட்ட உலோகத்தூண் என வழக்கமான ஹாலிவுட் பாணியில் அமெரிக்காவைச் சுற்றியே இந்த ஆண்டும் சுழன்றுள்ளது ஏலியன் கதைகள். மேற்குறிப்பிட்ட மூன்றில் முதல் இரண்டு விஷயங்களை விட அதிகம் கவனம் பெற்றிருக்கிறது உலோகத்தூண் விஷயம்.
ஹாலிவுட்டின் கிளாசிக் படங்களில் ஒன்றான 'ஏ 2001 ஸ்பேஸ் ஒடிஸி' படத்தில் இடம்பெறுவது போன்ற உலோகத்தூண்கள் கடந்த ஒரு மாதமாக உலகின் பல பகுதிகளில் தோன்றியும் மறைந்தும் வருவது இவ்வருடத்தின் தற்போதைய ஹாட் டாபிக். 'ஸ்பேஸ் ஒடிஸி' படத்தில் வருவதுபோன்ற இந்த உலோகத்தூண் அமெரிக்காவில் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவின் உட்டாவில் உள்ள பாலைவன பகுதி ஒன்றில், பெரிய கொம்பு ஆடுகளை எண்ணுவதற்காக ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருந்த வன விலங்குத்துறை அதிகாரிகள் கண்ணில் முதன்முதலாகச் சிக்கியது இந்த தூண். 10 முதல் 12 அடி உயரம் உடைய இந்த தூண் நவம்பர் 18 அன்று கண்டறியப்பட்டது, நவம்பர் 27 அன்று அப்பகுதியிலிருந்து மறைந்தது.
இதனைத்தொடர்ந்து, ருமேனிய நகரமான பியாட்ரா நீம்டுவில் நவம்பர் 27 அன்று தோன்றி டிசம்பர் 1 மறைந்தது. அதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் டிசம்பர் 2 அன்று மீண்டும் ஒரு தூண் தோன்றியது. இதற்குப் பின், நியூ மெக்சிகோ, இங்கிலாந்து, நெதர்லாந்து, கொலம்பியா, போலந்து, ஆஸ்திரேலியா என அடுத்தடுத்து தோன்றி கண்ணாம்பூச்சி காட்டிய இந்த தூண்கள் முதலில் அச்சத்துடன் அணுகப்பட்டாலும், தற்போது மீம் மெட்டீரியலாக மாற்றப்பட்டுவிட்டது. ஆரம்பத்தில் இது நிஜமாகவே ஏலியன் வேலையாக இருக்குமோ என அச்சப்பட்டவர்கள் கூட தற்போது வேலையில்லாதவர்கள் யாரோ இதனை நட்டுவைக்கிறார்கள் எனக் கடந்து செல்ல துவங்கிவிட்டனர்.
அதற்கேற்றாற்போல, 'தி மோஸ்ட் ஃபேமஸ் ஆர்டிஸ்ட்' என்கிற குழு உட்டா மற்றும் கலிஃபோர்னியாவில் உலோக தூணை நட்டுவைத்தது தாங்கள் தான் எனப் பொறுப்பேற்றுக்கொண்டது. அதேபோல, இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட தூணை வடிமைத்தது தான் தான் என ஒப்புதல் அளித்துள்ளார் டாம் டன்ஃபோர்ட் என்பவர். இப்படி மூன்று தூண்களின் தோற்றம் குறித்த பின்புலம் தெரியவந்துள்ள நிலையில், மீதி தூண்களை இவ்விடங்களில் வைத்தது யார், அவற்றைத் திரும்ப எடுத்து யார் என்ற விவரங்கள் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால், விரைவில் இதற்கான பதில்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.