பெரும் சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களின்போது நிகழும் உயிரிழப்புகளைக் காட்டிலும் சாலை விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகள் பல மடங்கு அதிகம். பேரிடர்கள் கூட எப்போதேனும் மட்டுமே நிகழ்கின்றன. ஆனால் சாலை விபத்து என்னும் இடர்ப்பாடுகள் அப்படியானவை அல்ல. அவை, எப்போது வேண்டுமானாலும், முகமறியாத நபர்களாலும் நிகழக்கூடும். சம்பந்தமே இல்லாத யாரோ ஒருவரின் அலட்சியத்தால் உண்டாகும் விபத்து, வேறு யாரோ ஒருவரின் வாழ்க்கையையே தடம் புரளக் காரணமாகி விடுகிறது.
உலகளவில், ஆண்டுக்கு 12.5 லட்சம் பேர் சாலை விபத்துகளில் மரணிக்கின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். இதில் பெரும்பான்மையினர் 15 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்பது மற்றொரு வேதனைக்குரிய சேதி. அதாவது, உயிரிழப்புக்கான காரணங்களில் 10- வது இடம் வகிக்கிறது சாலை விபத்துகள். எளிமையாகச் சொல்வதெனில், ஆண்டுதோறும் காசநோயால் 14 லட்சம் பேர் இறக்கின்றனர் எனில், அதற்கு அடுத்த இடத்தில் சாலை விபத்துகளால் இறப்போர்தான் அதிகம்.
இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் 147913 பேர் சாலை விபத்துகளில் பலியாகி உள்ளனர். அந்த ஆண்டில், தமிழ்நாட்டில்தான் சாலை விபத்துகளால் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். 2017ம் ஆண்டில் தமிழகத்தில் 16157 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு முந்தைய 2016ம் ஆண்டில் 17218 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.
நாம் முதல் பத்தியில், பேரிடரால் ஏற்படும் மரணங்களுடன் சாலை விபத்துகளை ஏன் ஒப்பீடு செய்திருந்தோம் என்பதற்கு மற்றொரு உதாரணமும் சொல்கிறோம். அதாவது, கடந்த 2004ம் ஆண்டில் ஏற்பட்ட ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தால் இந்தியாவில் 10136 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபோன்ற இயற்கை சீற்றத்துக்கு இரையானவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பீடு செய்து பார்க்கையில், சாலை விபத்துகளே கொடூர அரக்கனாக இருப்பது புலனாகும்.
அதன்பிறகு போக்குவரத்து, காவல்துறை, கல்வித்துறை, சுகாதாரம் ஆகிய துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் சாலை விபத்துகளில் உண்டாகும் மரணங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளன. கடந்த ஈராண்டுகளில் சாலை விபத்துகளால் உயிரிழப்போர் எண்ணிக்கை 24 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 2018ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகள் மூலம் 12216 பேர் பலியாகி உள்ளனர். உயிர்ப்பலிகள் ஒருபுறம் இருந்தாலும், கை, கால், கண்களை இழந்து வீட்டில் முடங்கிக் கிடப்போரைச் சொன்னால் மனித மனங்கள் கனத்துப்போகும்.
இங்கு ஒருபுறம் தரமான சாலைகள் இல்லை என்பது விபத்துகளுக்கான காரணங்களுள் ஒன்று. இன்னும் தமிழ்நாட்டில் பாதசாரிகளுக்கும், மிதிவண்டியில் செல்வோருக்கும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இது, தமிழ்நாட்டின் ஆகப்பெரும் சாபக்கேடு. பாதசாரிகளுக்கான நடைபாதைகள், சாலையோர விபாயாரிகளுக்கு கடை வைக்க அனுமதித்துவிட்டு அவர்களிடமும் அரசியல்வாதிகள், காவல்துறையினர், ரவுடிகள் வரை கல்லா கட்டுகின்றனர். எனினும், சாலை விபத்துகளுக்கான காரணங்களை நுட்பமாக ஆய்வு செய்ததில் சில முடிவுகள் கிடைத்திருக்கின்றன.
இருசக்கர வாகன ஓட்டிகளால்தான் 43.94 சதவீத விபத்துகள் நிகழ்கின்றன. கார், ஜீப் போன்ற இலகுரக நான்கு சக்கர வாகன ஓட்டிகளால் 27.74 சதவீதமும், கனரக வாகனங்களால் 22.30 சதவீத விபத்துகளும் ஏற்படுகின்றன என்பது, தமிழ்நாடு சாலை விபத்துகள் பற்றிய தரவுகள் மேலாண்மைத் திட்டத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் ஒரு கசப்பான உண்மை என்னவெனில், 47.28 சதவீதம் பேரின் உயிர்ப்பலிகளுக்கு அவர்கள் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை இயக்கியதே காரணம் என்பதுதான்.
இத்தனை ஆதாரங்கள் இருந்தும் நம்மவர்கள் பொத்தாம் பொதுவாக கேட்கும் ஒரு வினா, 'ஹெல்மெட் போட்டால் விபத்து நிகழாதா?' என்பதுதான் அது. அப்படி வினா எழுப்புபவர்கள் ஓர் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு தலையில் ஏற்படும் காயங்களே காரணமாக அமைகின்றன. ஒருவேளை, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டி, ஹெல்மெட் அணிந்து சென்றிருந்தால் விபத்தில் சிக்கியிருந்தாலும்கூட தலைக்காயத்தில் இருந்து தப்பியிருக்க முடியும். உயிரை பாதுகாத்திருக்க முடியும்.
இப்படியான சூழலில்தான் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் செப். 1, 2019ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. சாலை விதிகளை மீறுவோருக்கு முன்பு இருந்ததை விட பல மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்பதுதான் இந்த புதிய சட்டத்தின் முக்கிய அம்சம். பாஜக ஆளாத (தமிழகம் தவிர) பிற மாநிலங்களில் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும் கலந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த புதிய சட்டத்தின்படி, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். முன்பு இக்குற்றத்திற்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. காரில் செல்வோர் சீட் பெல்ட் அணியாவிட்டால் 1000, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5000, தகுதியில்லாத வாகனம் ஓட்டினால் 10000, அதிவேகமாக வாகனத்தை இயக்கினால் 2000, ஆபத்தாக வாகனம் ஓட்டினால் 5000, ரேஸில் ஈடுபட்டால் 5000, சிறார் வாகனம் ஓட்டினால் 25000 என பல மடங்கு அபராத கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும். இதைக்கேட்டபோதே பலருக்கு போதை தெளிந்து போய்விடும் என்பது வேறு கதை.
சட்டம் அமலுக்கு வந்த முதல் மூன்று நாள்களில் போக்குவரத்து காவலர்கள் வழக்கத்தைவிட கூடுதலாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். சேலத்திலும் வள்ளுவர் சிலை, அம்பேத்கர் சிலை, நான்கு சாலை, பட்டைக்கோயில், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை மடக்கி மடக்கி அபராதம் விதித்தனர். உள்ளூர் காவல் நிலைய காவலர்களும் கூட வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
எனினும், சட்டத்தின் ஆரம்பக்கட்டம் என்பதால் சேலத்தைப் பொருத்தவரை காவல்துறையினர் மிதமானப் போக்கையே கடைப்பிடித்தனர். அம்பேத்கர் சிலை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலர்கள், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வருவோருக்கு பழையபடியே 100 ரூபாய் அபராதம் விதித்துவிட்டு, அடுத்த முறை இதே குற்றத்தில் ஈடுபட்டால் 1000 ரூபாய் அபராதம் கட்ட நேரிடும். கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுங்கள் என கொஞ்சமும் சளைக்காமல் எல்லோரிடமும் அறிவுரை வழங்கினர்.
அதேவேளையில், ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள் காவலர்கள் வாகனத்தை நிறுத்தியதுமே சர்வ சாதாரணமாக 100 ரூபாயை கையில் எடுத்து வைத்துக்கொண்டு அபராதம் செலுத்த தயார் நிலையில் இருந்ததையும் காண முடிந்தது. பல வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணியாமல் செல்வதையோ, இரு சக்கர வாகனத்தில் மூன்று, நான்கு பேர் பயணிப்பதையோ ஒரு குற்றமாகக்கூட உணராமல் அலட்சியமாக சென்றனர்.
''சார்... எங்கள் உயிரை பாதுகாக்க எங்களுக்கு தெரியாதா? எங்கள் உயிர் மீது அரசாங்கத்திற்கு எதற்கு இவ்வளவு அக்கறை? எதற்காக நீதிமன்றமும், அரசும் ஹெல்மெட் போடுங்கள் ஹெல்மெட் போடுங்கள் என்று தினமும் தொந்தரவு செய்கின்றன? மக்கள் மீது அக்கறை இருக்கும் அரசாங்கம், ஏன் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கிறது? அந்தக் கடைகளை உடனடியாக மூடலாமே? காவல்துறையை வைத்து வாகன ஓட்டிகளிடம் மிரட்டி பணம் பறிக்கிறது அரசாங்கம்,'' என்று குமுறினார் அருள் என்ற வாகன ஓட்டி.
பெண் வாகன ஓட்டி ஒருவரோ, ''எங்கள் குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இருவருமே பத்து வயதுக்கு உட்பட்டவர்கள். அதனால் நாங்கள் நான், என் கணவர், இரண்டு குழந்தைகள் ஆகிய நான்கு பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் செல்கிறோம். அதைக்குற்றமாகக் கருதி அபராதம் விதிப்பது சரியாகுமா? இதற்காக நாங்கள் ஆட்டோவில் சென்றால் அதற்கே 300 ரூபாய் ஆகும். முதலில் இந்த சாலையை தரமாக போடச்சொல்லுங்கள். பிறகு வாகன ஓட்டிகளைப் பிடிக்கலாம்,'' என்றார் சலிப்பாக.
வாகன வழக்குகளைப் பதிவு செய்ய முன்பு போல பெரிய, நீளமான தாள்களை எல்லாம் போக்குவரத்து காவலர்கள் பயன்படுத்துவதில்லை. எல்லோரிடமும், பேருந்து நடத்துநரிடம் உள்ளதுபோன்ற மின்னணு சலான் கருவி வழங்கப்பட்டுள்ளது. அதிலேயே வாகன ஓட்டி என்ன மாதிரியான விதிகளை மீறினார்? அவருடைய பெயர், அபராத தொகை, செல்போன் எண் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து, அந்த இடத்திலேயே அபராதத்தை வசூலித்து விடுகின்றனர். ரசீதில், சம்பந்தப்பட்ட காவலர், வாகன ஓட்டியின் கையெழுத்தும் பதிவு செய்யப்படுகிறது. ஒரே நபர், ஒரு மாதத்தில் எத்தனை முறை அபராதம் செலுத்தினார் என்ற விவரங்களைக்கூட இந்த இயந்திரத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இந்த புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலாக்கத்திற்குப் பிறகும் இன்னொரு மாற்றமும் நடந்திருக்கிறது. காவலர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிகின்றனர். இது தொடர்பாக போக்குவரத்து உதவி ஆய்வாளர் கிட்டுவிடம் பேசினோம்.
''புதிய மோட்டார் வாகன சட்டப்படி சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டதால் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது அதிகரித்துள்ளது. சேலம் மாநகரில் 80 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்துதான் வருகின்றனர். சட்டம் அமலுக்கு வந்ததன் ஆரம்ப நிலை என்பதால், பலரையும் எச்சரிக்கை செய்துதான் அனுப்புகிறோம். அப்படியும் சிலர் தொடர்ந்து ஒரே மாதிரியான குற்றத்தில் ஈடுபடுகின்றனர். சாலை விதிகளை மீறுவதில் ஆண், பெண் பேதமில்லை. எல்லோருமே மீறுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள்தான் அதிகளவில் விதிகளை மீறுகின்றனர்.
காவல்துறையினர் நிற்பதைக் கண்டவுடன், எங்கே அவர்களிடம் மாட்டி விடுவோமோ என்ற பயத்தில் வாகன ஓட்டிகள் வேகமாக வாகனங்களை இயக்குகின்றனர். அதுபோன்ற நேரங்களில்தான் விபத்தில் சிக்க நேரிடுகிறது. இந்த சட்டம் எங்களைப்போன்ற காவல்துறையினருக்கும் பொருந்தும். நாங்கள் ஹெல்மெட் அணியாவிட்டால் பணியிடைநீக்கம் செய்யப்படுவோம். காவல்துறையினரும் ஹெல்மெட் அணிவதை நடைமுறைப்படுத்தினால்தான் பொதுமக்களும் மாறுவார்கள்,'' என்றார்.