Skip to main content

கரோனாவுக்கு தாய்ப்பாலில் மருந்து? உத்தரப் பிரதேசத்தில் நடந்தது என்ன? ஆர்வம் காட்டும் அமெரிக்கா! 

Published on 30/04/2020 | Edited on 30/04/2020


 

corona issues

கரோனா ஆய்வாளர்களின் பார்வை தாய் பாலின் பக்கம் திரும்பியுள்ளது. உலகளவில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட, பிறந்து சில மாதங்களேயான குழந்தைகள், தாய்ப்பாலால் குணமாகியுள்ளதுதான் அதற்குக் காரணம்.


உத்தரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூரிலுள்ள பி.ஆர்.டி. மருத்துவக் கல்லூரிக்கு ஒரு தாயும் பிறந்து மூன்று மாதங்களேயான அவரது குழந்தையும் கரோனா நோய் தொற்று சோதனைக்கு வந்திருந்தார்கள்.

ஆய்வில் தாய்க்கு கரோனா இல்லையென தெரிந்தது. ஆனால் குழந்தைக்கு நோய் தொற்று இருந்தது. இந்த விநோதமான ரிசல்ட் மருத்துவர்களை ஆச்சரியபடுத்தியது. எனினும், வேறுவழியின்றி தாயையும் பிள்ளையையும் ஒருசேர வைத்து சிகிச்சையை தொடங்கினார்கள்.

 

 


குழந்தையிடமிருந்து தாய்க்கு கரோனா வராமல் பார்த்துக்கொண்டார்கள். குழந்தைக்கு பாரசிட்டமல் தவிர வேறெந்த மருந்தும் வழங்கப்படவில்லை. குழந்தையின் பசிக்கும் கரோனாவுக்கும் தாய்ப்பாலையே மருந்தாக வழங்கினார்கள். இரண்டுவார சிகிச்சைக்குப் பின் இருவருக்கும் திரும்ப பரிசோதனை நடத்தியதில், குழந்தை கரோனாவிலிருந்து மீண்டிருந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்கள்.

தென்கொரியாவிலும் 6 மாதக் குழந்தையொன்று தாய்ப்பாலை மட்டும் மருந்தாகக்கொண்டு கரோனாவிலிருந்து மீண்டுவந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில்தான் கரோனாவின் அசுரத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள அமெரிக்காவில் மருத்துவர் ரெபேக்கா என்பவர் தாய்ப்பாலை அடிப்படையாகக் கொண்டு கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் மும்முரம் காட்டி வருகிறார்.

 


ரெபேக்கா பாவெல் மவுண்ட் சினாயிலுள்ள ஐக்கான் ஸ்கூல் ஆப் மெடிசின் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய் பிரிவில் மருத்துவ உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நியூயார்க் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பெண்களிடமிருந்து ஆய்வுக்காக தாய்ப்பாலை சேகரித்து வருகிறார். "தாய்ப்பாலில் உள்ள ஆன்டிபாடிஸ் கோவிட் 19 வைரஸுக்கு எதிராக செயல்படக்கூடியவை. தாய்ப்பாலிலிருந்து கிடைக்கும் ஆன்டிபாடிகள் நேரடியாக இரத்தத்திலிருந்து உருவாகுபவை. இவற்றை சுத்திகரித்து கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம்'' என்கிறார் பாவெல்.

அதேசமயம் மிகவும் எச்சரிக்கையாக, "நான் தாய்மையடைந்த பெண்களிடமிருந்து தாய்ப்பாலை விலைக்கு பெற்று அருந்துவதை பற்றிப் பேசவில்லை. உடலிலிருந்து வரும் எந்த ஒரு திரவமும் சமயங்களில் அந்த உடலுக்குரிய நோய் தன்மையையும் உடன் கொண்டிருக்கும். தவிரவும் சிலர் தாய் பாலை விலைகொடுத்து வாங்கி அருந்த முயற்சிப்பர்'' என்கிறார்.

ரத்த பிளாஸ்மாவிலிருந்து ஆன்டிபாடிகளை உருவாக்கி சிகிச்சையளிக்க முயற்சிப்பதுபோல் தாய்ப்பாலிலிருந்து ஆன்டிபாடிகளை உருவாக்கி கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதே பாவெலின் லட்சியம். பாவெல் என்னதான் எச்சரித்தாலும், தாய்ப்பாலை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் போக்கு சமீபமாக அமெரிக்காவில் அதிகரித்துள்ளதாம். வீட்டுச் சிறையிலிருக்கும் மனித குலத்துக்கு தாய் பால் விடுதலை கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.