Skip to main content

'முக்கியமான கட்சியில் இருந்து ஒரு பெரும்புள்ளி வெளியே வரக் காத்திருக்கிறது... ' -பா.ஜ.க. பிரமுகர் போட்ட ட்வீட்டால் அரசியலில் பரபரப்பு!

Published on 02/06/2020 | Edited on 02/06/2020

 

A.P.


திமு.க.வில் இருந்து அண்மையில் விலகி பா.ஜ.க.வில் ஐக்கியமானார் வி.பி.துரைசாமி. பா.ஜ.க. கொடுத்த அசைன்மெண்ட்டின்படி, தி.மு.க. முக்கியப் புள்ளிகளிடம் பழைய நட்பில் பேசும் வி.பி. துரைசாமி, பா.ஜ.க.வுக்கு வந்துவிடுங்கள், உங்களுக்கு நல்ல அந்தஸ்தோடு பதவி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று தூண்டில் போட்டு வருவதாகச் சொல்கின்றனர்.
 


இந்தநிலையில் பா.ஜ.க. நிர்வாகிகளில் ஒருவரான ஏ.பி.முருகானந்தம், 'முக்கியமான கட்சியில் இருந்து ஒரு பெரும்புள்ளி, வெளியே வரக் காத்திருக்கிறது. பெயரின் முதல் எழுத்து நாளை வெளியிடப்படும்' என்று மே 31 ஆம் தேதி ட்வீட்டரில் தெரிவித்திருந்தார். பின்னர் 'முதல் எழுத்து P' என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 'PK' எனத் தெரிவித்திருக்கிறார். 

பா.ஜ.க.வின் நிர்வாகிகளில் முக்கியமான நபர் ஏ.பி.முருகானந்தம். மாநில தலைவராக வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டவர்களில் அவரும் ஒருவர். 'முக்கியமான கட்சியில் இருந்து ஒரு பெரும்புள்ளி வெளியே வரக் காத்திருக்கிறது...' என அவர் கூறியிருப்பதால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  'PK' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் தி.மு.க.வின் அரசியல் ஆலோசகராக உள்ள  'PK' -வா? என்ற விவாதமும் ஓடிக்கொண்டிருக்கிறது. 
 


தி.மு.க.வில் இருந்துதான் இழுக்க வேண்டுமா? அ.தி.மு.க., காங்கிரஸில் இருந்து இழுக்க முடியாதா? என்று சிலர் பேசிக்கொள்வதால், அ.தி.மு.க. தலைமையும், காங்கிரஸ் கட்சியினரும் தங்களது கட்சியில் பா.ஜ.க.வுடன் நெருக்கமாக இருப்பது யார்? என்று ஆராயத் தொடங்கியிருக்கின்றனர்.