காலங்காலமாக பாசி மணி, ஊசி விற்று பழைப்பும் நடத்தும் பழங்குடிகளான குருவிக்காரர்கள் தங்கள் குழந்தைகளை தொடக்க கல்வியோடு நிறுத்திவிட்டு தங்கள் தொழிலுக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றனர். இதனால் குழந்தை திருமணங்களும் ஏராளம். எங்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிய அங்கீகாரம் கிடைத்தால் ஏன் படிப்பை நிறுத்துகிறோம் என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் விரல்விட்டு எண்ணும் அளவில் தான் குருவிக்காரர்களின் குழந்தைகள் படிக்க தொடங்கியுள்ளனர். இதில் ஒரு மாணவர் தான் தஞ்சை மாவட்டம் பேராவூரணி செந்தமிழ்நகர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த கூலிக்காக பாசி-மணி விற்கும் வைரக்கண்ணு - நீலா தம்பதியின் மகன் சின்னத்துரை உள்ளூர் பள்ளியில் படிப்பை முடித்துவிட்டு கல்லூரி சென்று படித்து ஆசிரியர் ஆகவேண்டும் என்ற உறுதியோடு இருந்தவர் தற்போது திருச்சி பெரியார் கல்லூரியில் புவியியல் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அட்மிசன் போட்டாச்சு ஆனால் அதற்கே பணமில்லாத நிலையில் முதல்கட்டமாக மருத்துவர் நீலகண்டன் செய்த உதவியால் சேர்க்கை முடிந்தது. ஆனால் இனி கல்லூரி திறக்கும் போது விடுதிக்கான முன் பணம், வாடகை மொத்தமாகவும், உணவுக்காக மாதம் ஒரு முறையும் கட்ட வேண்டும். நல்ல உடைகள், புத்தகம், தேர்வுக் கட்டணம் இப்படி ஏகப்பட்ட செலவுகளை எப்படி சமாளிப்பது என்று அந்த குடும்பமே சோகத்தில் உள்ளது.
நாங்க தான் படிக்கல எங்க புள்ளைகளையாவது படிக்க வைக்கனும் இவங்க படிச்சா எங்க நரிக்குறவ பசங்களை படிக்க வைப்பாங்க. இந்த மக்கள் எங்களையும் மதிப்பாங்கனு தான் என் மகளை படிக்க வச்சேன் 8 ம் வகுப்புக்கு மேல பணமில்லாம படிப்பை நிறுத்திட்டேன். இப்ப என் மகனை 12 வது வரைக்கும் எங்க வேலைகளை சொல்லிக் கொடுக்காமல் படிக்க வச்சுட்டேன். இனி மேல படிக்க வைக்க வசதி இல்ல. எல்லா புள்ளைங்களும் நல்ல சட்டை போட்டுக்கும் காலேஜ் வரும் போது என் புள்ள எந்த சட்டையை போடுவான். எங்களுக்கும் இந்த அரசாங்கம் உதவி செஞ்சா என் புள்ளை வாத்தியாருக்கு படிச்சு எங்க இனத்தை படிக்க வச்சிடுவான் என்றார் சின்னத்துரையின் அம்மா நீலா.
அக்கா கார்த்திகாவோ.. என்னையும் எங்கம்மா படிக்க வச்சாங்க. நானும் நல்லா தான் படிச்சேன். என்.எஸ்.எஸ்-ல சேர்ந்தேன். வெள்ளை ட்ரெஸ் வேணும்னு சொன்னாங்க எங்கம்மா கைல பணமில்ல நானும் எங்கம்மாவும் கூடை தூக்கிட்டு போய் வீடு வீடா, தெருத்தெருவா பாசி, ஊசி வித்து அந்த பணத்தில் வெள்ளை ட்ரெஸ் வாங்கி போட்டுக்கும் பள்ளிக்கூடம் போனேன். அதுக்கப்பறம் செலவு செஞ்சு படிக்க முடியல 8 ம் வகுப்போட நிறுத்திடேன். உடனே கல்யாணமாகிடுச்சு. இப்ப ஒரு மணி மாலை கோர்த்து கொடுத்தால் ரூ.3 கூலி தருவாங்க. அந்த கூலியில தான் வாழுறோம். என் தம்பி எப்படியாவது படிக்க வைக்கனும் அதுக்காக குழுவுல எல்லாம் கடன் கேட்டேன் எங்கேயும் கிடைக்கல. என் தம்பி படிச்சுட்டா எங்க சமுதாயத்தை படிக்க வச்சுடுவான் என்கிற நம்பிக்கை இருக்கு. அப்பறம் பழங்குடிகளான குருவிக்கார நரிக்குறவர்களுக்கு இப்ப வரை எந்த சலுகையும் கிடைக்கல. எங்களுக்கென்று எங்க மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு கொடுத்தாங்கன்னா எங்க மக்களும் படிச்சுட்டு அரசாங்க வேலைக்கு போவாங்க. எங்க பாரம்பரிய தொழில் மாறும் என்றார்.
மாணவன் சின்னத்துரைக்கு படிப்பிற்கான உதவியை தமிழக அரசோ அல்லது நல்ல உள்ளங்களோ செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு உள்ளனர் அந்த மாணவனுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களும் அப்பகுதி மக்களும். ஒரு இன விடுதலை இந்த மாணவன் கையில் உள்ளது. மாணவன் படிப்பு அரசாங்கம் கையில் உள்ளது.