இந்தியாவில் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உள்ளதால் பெரும்பாலான மக்கள் வேலைக்குச் செல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள்.இதுதொடர்பான எண்ணற்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஸ்டண்ட் தீனா சில தினங்களுக்கு முன்பு வட சென்னைப் பகுதியில் ஏழைகளுக்கு உணவுப்பொருட்களை வழங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதுதொடர்பாக அவரிடம் நடத்திய கலந்துரையாடலில்,

பேஸ்புக் மூலம் நீங்கள் ஏழைகளுக்கு உதவி செய்ததை நாங்கள் பார்த்தோம். இந்த ஊரடங்கின் காரணமாக உழைக்கும் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள்.தங்கள் உணவுக்காகப் பெரிய அளவில் சிரமப்படுகிறார்கள்.இந்த நிலையில் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?
பசிக்குதே... அதான் காரணம்.எனக்குப் பசிக்கிற மாதிரித்தானே அனைவருக்கும் பசிக்கும்.அந்தக் காரணம் தான் உதவ வேண்டும் என்ற எண்ணத்தை நமக்கு அளிக்கின்றது.நான் பத்து நாள் வேலைக்குப் போனேன் என்றால் அதை வைத்து என்னால் ஒரு மாதம் சாப்பிட முடியும்.ஆனால் ஏழைகளின் நிலைமை என்ன என்று பார்க்க வேண்டும்.பெரும்பாலானவர்கள் தினக்கூலிகள்.தினமும் வேலைக்குச் சென்றால் தான் அவர்களால் சாப்பிட முடியும்.அவர்களால் இந்த 21 நாட்களை எப்படிக் கடக்க முடியும்.இவர்கள் தினமும் வேலைக்குச் சென்றால் 200 ரூபாய் இருந்து 500, 600 என்று சம்பளம் பெறுபவர்கள்.இந்த ஊரடங்கின் காரணமாக அவர்களால் வேலைக்குச் செல்ல முடியாததால் அவர்கள் உணவிற்கும் கஷ்டப்படுகிறார்கள்.
அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியினை செய்து வருகிறோம்.இதை நான் மட்டும் செய்யவில்லை.பல நண்பர்கள் இணைந்துதான் இந்த உதவியைச் செய்கிறோம்.நான் ஒரு பத்தாயிரம் கொடுத்தால் பத்து நபர்கள் அதே அளவு தொகையினை கொடுக்கும் போது உதவி செய்தல் என்பது எளிதாகிறது. மேலும் நிறைய பேருக்கு ரேசன் கார்டு இல்லை வெளிமாநிலத்தில் இருந்து இங்கே வந்து தொழில் செய்பவர்கள் இருக்கிறார்கள் எனக்கு எப்படி இந்த ஐடியா வந்தது என்றால்,நேற்று ராத்திரி கனவில் வந்தது என்று சொல்லுமளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது.ஏழைகளுக்குப் பசிக்கும் என்ற உணர்வே நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்ற காரணமாக அமைகிறது.இந்த விஷயத்தை சிலர் ஆர்வக் கோளாறு காரணமாகப் போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டுவிட்டார்கள். அது ஒரு பெரிய தவறுதான்.
வடசென்னை பகுதி என்பது மற்ற பகுதிகளை விட மக்கள் கூட்டமாக வசிக்கும் பகுதி.ஆனால் இதுவரை கரோனா தொற்று தொடர்பாக இதுவரை ஒரு கேஸ் கூட வரவில்லை. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
இந்த விஷயம் மகிழ்ச்சியாக இருக்கிறது. இருந்தாலும் இங்கே இடைவெளி விட்டு எல்லாம் மக்கள் வசிக்க முடியாது.அரசே தீப்பெட்டி மாதிரிதான் வீடு கட்டி கொடுத்துள்ளது.இங்கே ஒரு வீட்டில் ஏழு பேர் இருப்பார்கள்.ஒரு ரூமில் நான்கு பேர் இருப்பார்கள்.அதனால் சமூக இடைவெளி என்பது சாத்தியமில்லாத ஒன்று. கைகளைக் கழுவி சுத்தமாக இருக்கிறோம்.உப்பு காற்றில்தான் வசிக்கிறோம். அதனால் எங்கள் உடம்பில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும்.