எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனால் அந்த அரசு செயலிழந்த அரசாகவே கருதப்படும்.
இங்கே மக்களின் விருப்பத்துக்கு மாறாக ஒரு அரசு மத்தியிலும் மாநிலத்திலும் இருக்கிறது. இந்த அரசுகளுக்கு எதிராக மக்களின் கோபம் கொப்பளிக்கிறது. ஆனால், மக்கள் நலன்களுக்கு எதிரான திட்டங்களையும், நடவடிக்கைகளையும் திருத்திக் கொள்ள இந்த அரசுகள் தயாராக இல்லை.
மாநில உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற எழுச்சிகரமான உணர்வு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது உருவானது. அதில் கிடைத்த வெற்றியைக்கூட போராட்டக்காரர்கள் அனுபவிக்க இந்த அரசு விடவில்லை.
அதைத் தொடர்ந்து அதுபோன்ற போராட்டம் நடைபெற்றுவிடாமல் தடுப்பதிலேயே அரசு குறியாக இருந்தது. காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கும் மத்திய அரசின் எரிவாயு திட்டங்களுக்கு எதிரான குரலை ஒடுக்க மாநில அரசு பல தந்திரங்களை கையாண்டது. ஆனாலும் அந்தப் போராட்டம் இப்போதும் தொடர்கிறது.
அதற்கிடையே தமிழக மாணவர்கள் நீண்டகாலமாக அனுபவித்து வந்த மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவக்கல்லூரி சேர்க்கையை மோடி அரசு பறித்தது. இதன் விளைவாக அனிதா என்ற மாணவி தனது மருத்துவக் கனவை பறிகொடுத்த துயரத்தில் உயிரை மாய்த்துக் கொண்டார்.
அப்போதும் நீட் தேர்வுக்கு எதிராக உருவான எழுச்சியை மாநில அரசு திசை திருப்பியது. மாணவர்களின் தொடர் போராட்டத்தை தந்திரமாக ஒடுக்கியது. ஆனால், இப்போதும் நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் கோபம் நீருபூத்த நெருப்பாகவே கனன்று கொண்டிருக்கிறது.
இத்தகைய கோபங்களுக்கு மத்தியில்தான், காவிரியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமையை பறிக்கும் வகையில் மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தவிர்க்கிறது.
1990 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைத்த பிறகு பல்வேறு மேல் முறையீடுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையே மத்திய அரசு உதாசீனப்படுத்துகிறது. தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய மத்திய அரசும் வலியுறுத்திப் பெற வேண்டிய மாநில அரசும் தமிழக நலன்களை புறக்கணித்து வேடிக்கை காட்டுகின்றன.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் கர்நாடகாவில் இனி எந்த அணையும் கட்ட முடியாது. இறுதித் தீர்ப்பின்படி தண்ணீரை திறந்துவிட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால், மத்திய அரசு அத்தகைய வாரியத்தை அமைப்பதை தவிர்க்க நினைக்கிறது.
ஒப்புக்கு ஒரு கண்காணிப்பு குழுவை அமைத்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீருக்காக காலம் முழுக்க கையேந்தும் நிலையை உருவாக்க மோடி அரசு திட்டமிடுகிறது.
இதற்கு இன்னொரு சதித்திட்டமும் இருப்பதாக கூறப்படுகிறது. காவிரி டெல்டா பகுதியில் உள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட வாயுக்களையும், எண்ணெய் வளத்தையும் கார்பரேட்டுகளுக்கு விற்க மோடி அரசு விரும்புகிறது. ஆனால், சமீப காலமாக விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில், காவிரியில் தண்ணீர் வரத்தை தடுத்துவிட்டால், டெல்டா பகுதி வறண்டுவிடும். அதைத்தொடர்ந்து விவசாயிகள் வேறு வழியில்லாமல் நிலத்தை அடிமாட்டு விலைக்கு கார்பரேட்டுகளிடம் விற்பார்கள். அம்பானியும் அதானியும் விளைநிலங்களை வாங்கி எரிவாயு எடுத்து கொள்ளை லாபம் சம்பாதிப்பார்கள். அதற்காகத்தான் தமிழக அரசியலை பாஜக குறிவைத்திருக்கிறது என்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை கார்பரேட்டுகள் தமிழகத்தில் கொட்டத் திட்டமிட்டிருக்கின்றன. தமிழகத்தில் மக்கள் நலனைப் பற்றி கவலைப்படாத, கார்பரேட்டுகளின் எடுபிடி அரசு அமைவதற்கு வசதியாக அரசியலை மாற்ற விரும்புகிறார்கள். திமுகவைப் போன்ற அடித்தளம் வலுவான கட்சியின் ஆட்சியை கார்பரேட்டுகள் விரும்பவில்லை. திமுக ஆதரவு வாக்குகளை சிதறடிக்கவே கார்ப்பரேட்டுகள் மூலமாக ரஜினியையும், கமலையும் அரசியலில் இறக்கத் திட்டமிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
ஆனால், தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் இப்போது திமுக தலைமையிலான அணியில் இணைந்திருக்கின்றன. மக்களும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக திரும்பியிருக்கிறார்கள் என்பதால் மோடி அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
மக்கள் எதிர்ப்பு காரணமாக சென்னையில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரதமர் பொறுப்பு வகிக்கும் மோடி தமிழ்நாட்டிற்குள் சுதந்திரமாக சாலை வழியே பயணம் மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியிருக்கிறது.
சென்னை அருகே நடைபெறும் ராணுவ கண்காட்சியை பார்வையிட வரும் மோடிக்கு கருப்புக்கொடி காட்ட தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் முடிவு செய்துள்ளன. திமுக அறிவி்த்த இந்த கருப்புக்கொடி போராட்டத்தை முதலில் அதன் தோழமைக் கட்சிகளும் பின்னர் முக்கிய எதிர்க்கட்சிகளும் ஒப்புக்கொண்டன. இப்போது, தமிழகத்தின் அனைத்து அமைப்புகளும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தை அறிவித்துள்ளன.
இந்தப் போராட்டம் காரணமாக மோடி சாலை வழிப் பயணத்தை தவிர்த்திருக்கிறார். விமான நிலையத்திலிருந்து மகாபலிபுரத்துக்கும், மகாபலிபுரத்திலிருந்த ஐஐடி வளாகத்திற்கும் ஹெலிகாப்டரில் வருகிறார். கேன்ஸர் மருத்துவமனை நிகழ்ச்சிக்காக ஐஐடி வளாகத்தில் இருக்கிற காம்பவுண்டு சுவறை இடித்து மோடியை மற்றவர் பார்வையில் படாமலே ஒளித்துக் கொண்டுபோக மாநில அரசு திட்டமிட்டிருப்பது மிகவும் அசிங்கமாகவே பார்க்கப்படுகிறது.
மக்கள் எதிர்ப்பை உணர்ந்து கொள்ளக் கூட மோடி விரும்பவில்லையா? மக்கள் எதி்ர்ப்பை மோடிக்கு உணர்த்த மாநில அரசுக்கு விருப்பமில்லையா? என்பது தெரியவில்லை. இருந்தாலும், மோடியின் 56 இன்ச் பெருமைக்கு இது அழகல்ல!