Skip to main content

மோடி அரசின் வேடிக்கை வினோதங்கள்!

Published on 18/08/2019 | Edited on 18/08/2019

வெறும் வாக்குறுதிகளிலேயே காலத்தை ஓட்டும் ஆட்சி ஒன்று உண்டெனில் அது மோடியின் தலைமையிலான ஆட்சியாகத்தான் இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள்.
 

rajnath singh with modi

 


ஆனால், இது உண்மையா என்று நம்ப முடியாத சிலர், கிளீன் இந்தியா, டிஜிடல் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா என்று பல இந்தியாக்களை உருவாக்கியவர் மோடி என்று கூறுகிறார்கள்.

ஆனால், அந்த அறிவிப்பெல்லாம் வெறும் அறிவிப்புகளாக மட்டுமே இருக்கின்றன. இந்தத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியெல்லாம் மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்குத்தான் போய் சேர்ந்தன. சாதாரண ஜனங்களுக்கு என்ன பயன் கிடைத்தது என்பதை யாரும் தெளிவுபடுத்தவில்லை என்பது அவர்களுக்குப் புரியாது.

அதேசமயம், இந்த நாட்டு சாமானிய மக்களுக்கும், இளைஞர்களுக்கும் மோடி தனது முதல் ஐந்தாண்டு ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன். ஆண்டுக்கு ஒருகோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்பதுதான். இந்த இரண்டும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் உண்மை. அதுமட்டுமின்றி, இரண்டாவது ஆட்சிக் காலத்தில் இந்த இரண்டையும் நினைவுபடுத்தக்கூட இல்லை.

மேலும் ஒரு முக்கியமான விளைவையும் மறைக்க முயற்சி நடக்கிறது. ஆம். கடந்த ஆட்சிக் காலத்தில் பணமதிப்பிழப்பு என்ற அறிவிப்பின் மூலம், புதிதாக அச்சிடப்பட்ட இரண்டாயிரம், ஐநூறு ஆகிய ரூபாய் நோட்டுகளை ஏராளமாக பாஜக தலைவர்கள் பதுக்கினார்கள் என்ற செய்தி வெளியாகி பதட்டத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் தங்களுடைய சிறு சேமிப்பை இழந்து, நூறுக்கும் ஐநூறுக்கும் ஏடிஎம் வாசல்களில் வேலைக்குக்கூட போகாமல் காத்திருந்த வேளையில், பணம் அச்சிடும் அச்சுக் கூடத்திலிருந்து நேராகவே கருப்புப்பண முதலைகளின் வீடுகளுக்கே புதிய பணக்கட்டுகள் அனுப்பப்பட்ட நிகழ்வெல்லாம் வெளியாகியது.

புதிய ரூபாய் நோட்டுகளில் டிஜிடல் சிப் இருக்கிறது. அது பயங்கரவாதிகளின் இடத்தை காட்டிக்கொடுக்கும் என்றெல்லாம் பீலா விட்டார்கள். ஆனால், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் குறைந்தபாடில்லை.

இந்நிலையில்தான் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் முதல் பட்ஜெட்டில் 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக அல்லது இந்திய ரூபாயில் 360 லட்சம் கோடி பொருளாதாரமாக உயரும் என்று மோடி அரசு அறிவித்தது.

இதற்கான வரவு செலவு ஆதாரங்களை காட்டாமல் வெறும் வார்த்தை ஜாலம் நிறைந்த பாஜகவின் அறிக்கையாகவே அந்த பட்ஜெட் இருந்தது. மொத்தத்தில் இந்தியாவை கார்பரேட் நிறுவனங்களின் மேய்ச்சல் காடாக மாற்றும் நோக்கமே அந்த பட்ஜெட் அறிக்கையில் இருந்தது.

அது முடிந்ததும், அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய சட்டங்களை நிறைவேற்றுவதில் பாஜக முனைப்பாக இருந்தது. அதில் முக்கியமானது என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, உபா என்ற தீவிரவாத தடுப்புச்சட்டம் ஆகியவற்றை கடுமையாக்கும் திருத்தங்கள். இவற்றை நிறைவேற்றியதன் மூலம் பாஜக அரசுக்கு எதிரான யாரையும் பயங்கரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் அடைக்க முடியும் என்ற நிலையை மோடி அரசு உருவாக்கியது.

அவற்றுக்கு அடுத்து, முஸ்லிம்களின் முத்தலாக் முறையை குற்றமாக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதுடன், அந்த நிலப்பகுதியை இரண்டாக பிரித்து மாநில அந்தஸ்த்தையும் பறிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

நாடே இந்த சர்ச்சைகளை விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில்தான், இந்தியப் பொருளாதாரம் படுமோசமான வீழ்ச்சியை சந்திக்கும் செய்திகள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. 2014ல் உலகில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, இப்போது ஏழாவது இடத்துக்கு போயிருக்கிறது.

பணமதிப்பிழப்பும், ஜிஎஸ்டியும் அறிமுகமான பிறகு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான சிறு மற்றும் குறு தொழில்களுக்கு மூடுவிழா நடத்தப்பட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். மோடியின் இரண்டாவது ஆட்சியின் தொடக்கத்திலேயே மோட்டார் தொழில் கடுமையான நெருக்கடியில் சிக்கியிருப்பதாக செய்திகள் வெளிவரத் தொடங்கின. பட்ஜெட் வாசிக்கப்பட்ட காலாண்டில் மோட்டார் தொழிலில் ஈடுபட்டுள்ள 10 லட்சம்பேர் வேலையிழப்பார்கள் என்றும், பல மோட்டார் உதிரிபாக உற்பத்திக் கூடங்களும், கார் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளும் மூடப்படும் என்றும் அபாயச்சங்கு ஊதப்படுகிறது.

இந்நிலையில்தான், ராக்கெட் தயாரிக்க தனியார் நிறுவனங்களை தேடுவதாக இஸ்ரோ அறிவித்திருக்கிறது. அரசுப் பொறுப்பில் ரகசியமாக செய்ய வேண்டிய தொழில்கள் அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு தயாராகிவிட்டது.

லாப நோக்கம் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அரசு, பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டு வருகிறது.
 

rajnath singh

 

 

மோடி அரசு என்னவெல்லாம் செய்யப் போகிறதோ என்று தினந்தோறும் திகிலோடு வாழும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதை நிரூபிக்கும் வகையில்தான் சுதந்திர தினத்தில் கொடியேற்றிய மோடி, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளுக்கும் ஒரே தளபதி நியமிக்கப்படுவார் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.

இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளுக்கும் தலைவர் என்று குடியரசுத்தலைவருக்கே பெருமை அளித்திருக்கிறது இந்திய அரசியல் சட்டம். ஆனால், அதைத்தாண்டி மோடி எப்படி முப்படைத் தளபதி என்று ஒருவரை நியமிப்பார் என்று தெரியாமல் விழிக்கிறார்கள்.

இதில் விழிப்பதற்கு என்ன இருக்கிறது. அரசியல் சட்டத்தை திருத்தவா முடியாது. அல்லது அதைத் தூக்கி எறிந்துவிட்டு, மனு எழுதிய வர்ணாச்சிரம கோட்பாடுகளை இந்திய அரசியல் சட்டமாக ஏற்கத்தான் முடியாதா?

பாஜக அரசு எதைச் செய்தாலும் அதை ஆமா போட்டு ஆதரிக்கத் தவறினால் தேசவிரோதி என்று சொல்லி விசாரணையில்லாமல் உள்ளே தூக்கிப்போடோ, ஆளையே காணாமல் செய்யவோ சட்டம் இயற்றி கையில் வைத்திப்பதை மறந்துவிடாதீர்கள்.

மோடி இப்படி என்றால், ராணுவ அமைச்சர் அவர் பங்கிற்கு ஒன்றைத் தூக்கிப் போடுகிறார்.

அதாவது, அணு ஆயுதத்தை இந்தியா முதலில் பயன்படுத்தாது என்று இதுவரை கடைப்பிடிக்கப்படும் கொள்கையில் மாற்றம் வரும் என்று கூறியிருக்கிறார்.

இன்றைய உலகில் அணு ஆயுதத்தை பயன்படுத்துவது இயலாத காரியம். வல்லரசுகளே அஞ்சும் ஒரு விஷயத்தை பாஜக அமைச்சர் பேசுகிறார் என்றால் எந்தத் தைரியத்தில் பேசுகிறார்? இதை தைரியம் என்று கருதுவதற்கு பதிலாக, மக்களுடைய கவனத்தை திசைதிருப்பும் நோக்கத்தில் பேசியிருக்கிறார் என்றே கொள்ள வேண்டும்.

நாட்டின் பொருளாதார சீர்குலைவுக்கு மோடி தலைமையிலான பாஜக அரசும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையுமே காரணம் என்ற உண்மையை மறைக்க வேண்டும். 

அதற்காகவே காஷ்மீர் விவகாரத்தை சிக்கலாக்கினார்கள். யாரையும் பயங்கரவாதி என்று முத்திரை குத்தும் வகையில் என்ஐஏ, உபா சட்டங்களில் புதிய திருத்தங்களை செய்து, சட்டத்தைக் கடுமையாக்கினார்கள். இப்போது முப்படைக்கும் ஒரே தளபதி என்றும், அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை என்ற இந்தியாவின் கொள்கையை மாற்றத் தயங்கமாட்டோம் என்றும் கூறுகிற அளவுக்கு சென்றிருக்கிறார்கள்...

மோடி அரசின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்வோரை தேசவிரோதி என்று முத்திரை குத்தும் நிலைகூட விரைவில் வரலாம் என்ற அச்சத்தை மூத்த அரசியல் விமர்சகர்கள் வெளியிட்டுள்ளனர்.