சேலம் உடையாப்பட்டி பாலமுருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். இவர், மார்ச் 21-ஆம் தேதி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தனது தாயார் ஆனந்தி, மனைவி சாந்தி மற்றும் குழந்தைகள் ஆகியோருடன் திடீரென்று தீக்குளிக்க முயன்றார்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், இதைப் பார்த்து அதிர்ந்துபோய், அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த... விசாரணையில் இறங்கினோம்.
இது குறித்து அந்த நாகராஜனிடமே நாம் கேட்டபோது, "சேலம் அம்மாபேட்டையில் பேக்கரி கடை நடத்தி வருகிறேன். அயோத்தியாபட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமார், கடந்த சட்டமன்ற தேர்தலில் சிலருக்கு சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி 67 லட்சம் ரூபாய் வரை வசூலித்தார். அந்தப் பணத்தை என்னிடம் கொடுத்ததாகவும், அதைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டு எனக்கும், குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுக்கிறார். அவர் என்னிடம் எந்தப் பணத்தையும் கொடுக்கவில்லை. இதுகுறித்து அம்மாபேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால்தான் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றேன்'' என்றார் நிதானமாக.
இது குறித்து காவல்துறையின் விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளிடம் நாம் விசாரித்தபோது, ''ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமாரிடம், இந்த நாகராஜன் கார் ஓட்டுநராக இருந்தார். கிட்டத்தட்ட வலதுகரம் போல செயல்பட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, மிமிக்ரி ஆர்டிஸ்டை வைத்து, விஜயகுமாரின் செல்போனுக்கு தளபதி ஸ்டாலின் குரலில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் தொண்டர்களுக்கு தொப்பி, டீஷர்ட், கரை வேட்டி, சேலைகள், பேட்ஜ்கள் வாங்கித் தர வேண்டும் என்றும் அதற்கான செலவுகளைப் பார்த்துக் கொள்ளுமாறும் பேசியுள்ளார். தளபதியே சொன்ன பிறகு தட்ட முடியுமா? அதனால் மேலே சொன்ன செலவுகளுக்காக 67 லட்ச ரூபாயை ஏற்பாடு செய்து, நாகராஜனிடம் கொடுத்து, அந்த வேலைகளை ஒப்படைத்திருக்கிறார் விஜயகுமார். பின்னர்தான் இது நாகராஜன் நடத்திய நாடகம் என்பது விஜயகுமாருக்கு தெரிய வந்திருக்கிறது. அதனால் தனது பணத்தைக் கேட்டு நாகராஜனுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்'' என்றவர்கள்,
"மோசடி செய்வதில் நாகராஜன் ஜெகஜ்ஜால கில்லாடி. பலரையும் பல வகையிலும் ஏமாற்றி பல லட்ச ரூபாய் வரை சுருட்டி இருக்கிறார். இதன்மூலம் சொந்தமாக மூன்று டாரஸ் லாரிகளை வைத்திருக்கிறார். அந்த லாரிகளில் குட்கா, கஞ்சா கடத்தி வந்து உள்ளூரில் விற்பனை செய்வதாகவும் தெரிகிறது. பணம் கொடுத்தவர்கள் அதைக்கேட்டால் தற்கொலை நாடகம் போடுவார். ஏற்கனவே, இரண்டுமுறை இப்படி தற்கொலை நாடகம் நடத்தியிருக்கிறார்'' என்று நம்மை அதிரவைத்தார்கள்.
இது குறித்து அயோத்தியாபட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமாரிடம் கேட்டபோது, ''கட்சிப் பெயரைச் சொல்லி என்னிடம் பணம் மோசடி செய்தது நாகராஜன்தான். அவர் எந்த வகையில் ஏமாற்றினார் என்று சொல்ல விரும்பவில்லை. அவர் நடத்தி வந்த பேக்கரி கடையை என்னிடம் விற்பதாகச் சொன்னார். நானும் பேக்கரியைவாங்க ஒப்புக்கொண்டு, அதற்குரிய தொகையான 67 லட்சம் ரூபாயை செட்டில்மெண்ட் செய்தேன். இடத்திற்கான ஆவணங்களை சரிபார்த்தபோது, அந்த இடத்தின் உரிமையாளர் நாகராஜன் இல்லை என்பதும், தி.மு.க. பிரமுகர் செல்வமணி என்பவர் பெயரில் இருப்பதும் தெரிய வந்தது.
அதனால், நான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டேன். ஆனால் என்னை ஏமாற்றும் நோக்கத்துடன், என் மீதே பொய்யான புகாரைச் சொல்லி, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக நாடகமாடுகிறார். நாகராஜன் என்னிடம் பணம் பெற்றுக்கொண்டதற்கான "புரோ நோட்டு' உள்ளிட்ட எல்லா ஆதாரங்களும் இருக்கின்றன. அரசியலை வைத்து நான் பணம் சம்பாதிக்கவில்லை. ஆனால் நாகராஜனின் பொய்யான புகாரால் எங்கள் குடும்பமே நிம்மதி இழந்து தவிக்கிறோம்'' என உடைந்த குரலில் சொன்னார்.
நாகராஜன் நடத்தி வந்த பேக்கரி கட்டடத்தின் உரிமையாளரான செல்வமணியோ ''என்னுடைய கட்டடத்தில்தான் அவர் பேக்கரி கடையும், கார் சர்வீஸ் ஸ்டேஷனும் நடத்தி வந்தார். இதற்கே அவர் இன்னும் 2.50 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருக்கிறார். எனக்குச் சொந்தமான ஒரு ஜீப், ஒரு சுமோ கார் ஆகியவற்றை சினிமா ஷூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம் என்று கூறி வாங்கிச் சென்று, அதை அடகு வைத்து 9 லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டார்'' என்றார்.
"அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அறிவாலயத்தில் உள்ள "ஜெயமான' ஒருவர், ஐபேக் டீம் ஆட்கள் சிலருடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாக சக கட்சியினரையே நாகராஜன் நம்ப வைத்திருக்கிறார். இந்த வலையில் அயோத்தியாபட்டணம் விஜயகுமாரும் வீழ்ந்ததுதான் ஆச்சரியம்'' என்கிறார்கள் கட்சியினர்.
இதற்கிடையே, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக நாகராஜனை சஸ்பெண்ட் செய்திருக்கிறது தி.மு.க. இந்த வழக்கை விசாரித்து வரும் அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கணேசனிடம் கேட்டபோது, "விஜயகுமார் மிரட்டியதாக நாகராஜனிடம் இருந்து இன்னும் எங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை. விஜயகுமார் உள்ளிட்ட சிலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீதுதான் புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து உதவி கமிஷனர் நேரடியாக விசாரித்து வருகிறார்'' என்றார்.
தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் குரலிலேயே மிமிக்ரி செய்து, அக்கட்சியின் ஒன்றியச் செயலாளரிடமே பணம் சுருட்டப்பட்ட விவகாரத்தால், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.வே பரபரத்துக் கிடக்கிறது.