'மெட்டி ஒலி' தொலைக்காட்சித் தொடர் மூலம் தமிழக இல்லங்களிலும் இதயங்களிலும் இடம் பிடித்த போஸ் வெங்கட், பின்னர் வெள்ளித்திரையிலும் ஜொலித்தார். நடிகராகத் தடம் பதித்த வெங்கட், தான் விரும்பிய சினிமாவில் இயக்குனராக அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளார். போஸ் வெங்கட் இயக்கிய படமென்றதும் நமக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்கும்? ஒரு குடும்பப்படம் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். 'கன்னி மாடம்' என்ற தலைப்பை பார்த்ததும் எதிர்பார்ப்புகள் கொஞ்சம் மாறலாம். ஆனால், முதல் காட்சியிலிருந்தே ஆச்சரியம் தருகிறார் போஸ் வெங்கட்.
"என்னய்யா... உங்க ஆட்டோ ஸ்டாண்டு போர்டுல எல்லார் பேர்லயும் தலைவர்னு போட்டுருக்கு?" என்று ஒருவர் கேட்க "இது பெரியார் ஆட்டோ ஸ்டாண்டு, இங்க எல்லாரும் தலைவர்தான்" என்கிறார் ஆட்டோ ஓட்டுனர். தொடக்கத்திலிருந்து இறுதிவரை முற்போக்குக் கருத்துகளை, திராவிட சிந்தனையை, எளிய மக்களின் வாழ்க்கையை படமாக உருவாக்கியுள்ளார் போஸ் வெங்கட். இதிலென்ன ஸ்பெஷல் என்றால் எந்தக் கருத்தும் பிரச்சாரமாகவோ அலுப்பூட்டும் வசனங்களாகவோ, குறிப்பிட்ட சமூகங்களின் மீதான வன்மமாகவோ இல்லாமல் கதையாகவும் சுவாரசியமான காட்சிகளாகவும் இருப்பதுதான். 'இந்த காலத்திலயுமா சாதி பாக்குறாங்க?' என்று படத்திலேயே ஒரு பாத்திரம் கேட்க, அதற்கு பதிலாக தன் படத்தையே தந்திருக்கிறார் போஸ்.
"நம்ம உசந்த சாதின்னாலும் எண்ணிக்கையில கம்மியா இருக்கோம். அதுனால நாம ஒட்டி இருந்தாதான் நமக்கு நல்லது" என்று உறவினருக்கு அட்வைஸ் செய்யும் சாதிப் பற்றுடைய தந்தை, தங்கள் தொகுதி எம்.எல்.ஏவாகவே இருந்தாலும் தங்களை விட குறைவு என்று கருதப்படும் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது மகனுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார். ஆனால் அவரது மகளோ எம்.எல்.ஏவின் சமூகத்தை சேர்ந்த இன்னொரு இளைஞனை காதலித்து, குடும்பத்துக்குத் தெரியாமல் வெளியேறி திருமணம் செய்துகொண்டு வாழ, குடும்பத்தில் பூகம்பம் உண்டாகிறது. அவளது தாய் தற்கொலைக்கு முயன்று கோமாவுக்கு செல்கிறார். கோபம், வெறியாக மாற தனது மகளையும் அவளது கணவனையும் கொலை செய்துவிட்டு சிறை செல்கிறார். குடும்பமே சிதைந்து போக, அவரது மகன் சென்னை வந்து ஆட்டோ ஓட்டுனராகிறான். 'பெரியார் ஆட்டோ ஸ்டாண்'டில் உறுப்பினராகி சாதியை விட சகமனிதனே மேல் என்னும் மனநிலையோடு வாழ்கிறான் நாயகன் அன்பு.
அந்த சமயத்தில் மதுரை பக்கமிருந்து ஒரு பணக்கார இளைஞன், ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு எளிய பெண்ணை காதல் செய்து அவளுடன் வாழ்வதற்காக அழைத்துக்கொண்டு சென்னை வர, அவர்களுக்கு உதவியாக இருக்கிறான் அன்பு. திடீரென அவர்களை கொல்ல வேண்டுமென்ற வெறியோடு அந்த இளைஞனின் குடும்பத்தினர் தேட, இருவரும் எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் தங்கள் வாழ்க்கையை தொடங்குகின்றனர். காலம் அப்படியே செல்லுமா? திடீரென ஒரு விபத்தில் அந்த இளைஞன் உயிரிழக்க, அந்தப் பெண் தனித்து நிற்கிறாள். அவளுக்கு ஒரு கண்ணியமான துணையாகிறான் அன்பு. ஆனாலும் சாதி உணர்வு சும்மா இருக்குமா? சிறையில் இருந்து பரோலில் வரும் தந்தை மீண்டும் ஒரு வெறியாட்டம் ஆட 'சாதி மனிதனை சாக்கடையாக்கும்' கதை சொல்லி முடிகிறது படம். பொதுவாக ஆதிக்க சாதிப் பெண்ணை காதல் செய்யும் ஒடுக்கப்பட்ட சமூக இளைஞனை நம் திரைப்படங்கள் படமாக்கியுள்ளன. ஆனால், அது அப்படியே பால் மாற்றி நிகழ்ந்தாலும் சாதி, காதலை அணுகும் விதம் மாறாது என்பதை உணர்த்துகிறது 'கன்னி மாடம்'.
படத்தின் முக்கிய கதை இதுவென்றால், பல முற்போக்கான பாத்திரங்களையும் காட்சிகளையும் போகிற போக்கில் காட்டி மகிழ்விக்கிறார் போஸ் வெங்கட். ஆண்களோடு ஆண்களாக ஆட்டோ ஓட்டும் அந்தப் பெண், அவளுடனான சக ஆட்டோ ஓட்டுனர்களின் நட்பு, தன் மீது அன்பு கொண்டவரை அவரது தோற்றம் குறித்து கவலை கொள்ளாமல் திருமணம் செய்ய எடுக்கும் முடிவு, மத பேதம் இல்லாமல் ஒருவரின் தெய்வத்துக்கு இன்னொருவர் தரும் மதிப்பு என ஒரு சின்ன கனவு சமூகத்தை கண் முன் நிறுத்தியிருக்கிறார் போஸ். பணம், போட்டி, சாதி என எதையும் தூக்கி சுமக்காமல் சக மனிதர்கள் மீது அன்பு செலுத்தும் எளிய மனிதர்களின் வாழ்க்கை நம்மை மகிழ்விக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது கருத்து சொல்லி 'போர்' அடிக்கும் படமா என்று எண்ண வேண்டாம். அடிக்கடி நம்மை சிரிக்க வைக்கின்றன 'ஆடுகளம்' முருகதாஸின் ஆரோக்கியமான காமெடிகள், சுவாரசியம் குறையாமல் பார்த்துக்கொள்கிறது திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை.
படத்தின் காட்சிகள் நடக்கும் ஒவ்வொரு இடமும் உண்மையான இடங்கள், அங்கு நிகழ்பவை நிதர்சனமான சம்பவங்கள்... எதுவுமே செயற்கையாகத் தெரியாத ஒரு நிஜ வாழ்வை படமாக்கிய வகையில் ஒரு இயக்குனராக முழு வெற்றியடைந்திருக்கிறார் போஸ் வெங்கட். நாம் பார்க்கும் நிஜமான சென்னை, ஒரு சின்ன அறைக்குள் அத்தனை அழகான கோணங்கள், வித விதமான காட்சிகள் என காட்சிப்படுத்தியதில் தொழில்நுட்ப ரீதியிலும் படம் வலுவாகவே இருக்கிறது. பக்குவமான நடிப்பை கொடுத்திருக்கும் நாயகன், திராவிட அழகியாக ஈர்க்கும் நாயகி, உள்ளே சாதி வெறியை மறைத்து வைத்திருக்கும் மௌன மிருகமாக கஜராஜ் என நடிகர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.
மிகப்பெரும் போராட்டத்திற்குப் பிறகு நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட். இன்று இயக்குனராகவும் அதே போராட்டம் இருந்திருக்கும். அப்படி பெற்ற ஒரு வாய்ப்பை, முற்போக்குக் கருத்துகளை, பெரியாரின் சிந்தனையை, மக்கள் ரசிக்கும்படி சொல்லப் பயன்படுத்திய போஸ் வெங்கட்டுக்கு ஒரு சல்யூட். படத்தின் முடிவில் 'சாதி மனிதனை சாக்கடையாக்கும், மதம் மனிதனை மிருகமாக்கும்' என பெரியாரின் வார்த்தைகள் சொல்லி முடிக்கிறார். அந்த வார்த்தைகளுக்கான இரண்டு மணிநேர சுவாரசியமான, உயிர்ப்பான ஒரு கதை விளக்கமாக நடந்து நிறைவடைகிறது 'கன்னி மாடம்'.