வசந்தகால சூரியன் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருந்தது. வாட்டசாட்டமான ஒரு நபர் புன்சிரிப்புடன் மொசுமொசுவென்று துணி சுற்றப்பட்டிருந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு டிரையர் நகராட்சி அதிகாரி அலுவலகத்துக்கு வந்தார். அந்த அதிகாரி இம்மாதிரியான சந்தர்ப்பத்தில்தான் வழக்கமாகக் கேட்கும் கேள்விகளைக் கேட்டார். பிறகு தன்னுடைய இறகுப் பேனாவை எடுத்துக் காகிதத்தில் எழுதினார்.
“டிரையர் மாவட்டத்தைச் சேர்ந்த பிறப்பு, இறப்பு, திருமண, பதிவாளராகிய எனக்கு முன்னால் 1818ம் வருடம் மே மாதம் 7ந் தேதியன்று பிற்பகல் 4 மணிக்கு டிரையர் நகர குடியுரிமைச் சான்றிதழ் பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கறிஞரான ஹென்ரிஹ் மார்க்ஸ் தனது ஆண் குழந்தையின் பிறப்பை பதிவுசெய்ய வந்தார். அந்தக் குழந்தை தனக்கும் தனது மனைவி ஹென்ரியேட்டா பிரெஸ்பார்க்குக்கும் மே மாதம் 5 ஆம் தேதியன்று அதிகாலை 2 மணிக்கு டிரையரில் பிறந்ததாகத் தெரிவித்தார். தங்களுடைய குழந்தைக்குக் கார்ல் என்று பெயர்சூட்ட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்”
இதையடுத்து, நகராட்சி பதிவு அதிகாரி பிறப்புச் சான்றிதழில் கையொப்பமிட்டு ஹென்ரிஹ் மார்க்சிடம் கொடுத்தார். அது ஒரு வரலாற்றுச் சிறப்புடைய ஆவணம், வளர்ந்து பெரியவனானதும் சொந்த நாட்டிலிருந்து நாடுகடத்தப்படப் போகிற ஒருவர், மற்ற எவரையும் காட்டிலும் அந்த நாட்டுக்கு அதிகமான புகழைக் கொண்டு வரப்போகிறவரின் சான்றிதழ் அது. ஆனால், அந்த அதிகாரிக்கு அப்போது அது தெரிந்திருக்கவில்லை. ஹென்ரிஹ் மார்க்ஸ் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தார். அவர் டிரையர் நகரில் புரூக்கென் ஹாஸேயில் 664ம் எண்ணுடைய சிறிய, இரண்டு மாடி வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தார். எதிரில் வந்தவர்கள் பணிவோடு தெரிவித்த வணக்கமும் வாழ்த்தும்கூட அவருக்கு புரிபடவில்லை.