"இன்று நான் மீண்டும் உறுதிகூறுகிறேன். என் கடைசி மூச்சுள்ள வரை கோவாவுக்காக உண்மையுடனும் அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பணி செய்வேன்"... இவை கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி கோவாவின் பட்ஜெட்டை வெளியிட்ட முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறிய வார்த்தைகள். இன்று தன் கடைசி மூச்சை விட்டிருக்கிறார் மனோகர்.
அவர் பட்ஜெட் வெளியிட்டு பேசும்பொழுது இருந்த நிலையில் வேறு எந்த முதல்வருமோ மாநில நிதி அமைச்சருமோ பட்ஜெட் வெளியிட்டுப் பேசியதில்லை. கணைய புற்று நோயின் முற்றிய நிலையில் அவதிப்பட்டு வந்த மனோகர் அந்த நிலையில் வந்துதான் பட்ஜெட் அறிக்கையை வெளியிட்டார். கோவாவின் செலவுக்கு மிஞ்சிய வருமானம் 2018-19 ஆண்டை விட 2019-20 ஆண்டில் இரு மடங்குக்கும் மேல் அதிகரிக்கும் என்ற உறுதிமொழியுடன் பட்ஜெட்டை வெளியிட்டார் மனோகர். புற்று நோய்க்காக தீவிர சிகிச்சை பெற்று வந்த போது அவர் பதவிவிலக விரும்பியதாகவும் ஆனால், பாஜக தலைமை அதை விரும்பவில்லையென்றும் பேச்சுகள் நிலவின. ஏன்... இவர் உயிருக்கு பாஜகவினராலேயே ஆபத்து ஏற்படலாம் என்று கூட கோவா காங்கிரசார் பேசினர், இவருக்குப் பாதுகாப்பை அதிகரிக்கவேண்டுமென்று கடிதமும் எழுதினர். அந்த அளவுக்கு இவரது இறுதிக்காலத்தில் சர்ச்சைகள் இவரை சுற்றியிருந்தன.
கோவாவின் மாபுஸா பகுதியைச் சேர்ந்த இவர், மும்பை ஐஐடி மாணவராவார். ஐஐடி என்பது இந்தியாவின் பெருமைமிகு பொறியியல் கல்வி நிறுவனங்களில் முதன்மையானது. டெல்லி, மும்பை, சென்னை உள்பட 23 இடங்களில் இன்று இருக்கும் இக்கல்வி நிறுவனம் இவர் படித்த காலகட்டத்தில் வெகுசில இடங்களில் மட்டுமே இருந்தன. 1994இல் இவர் முதல் முறை எம்.எல்.ஏவான போது இந்தியாவின் முதல் ஐ.ஐ.டியில் படித்த எம்.எல்.ஏ இவர்தான். 2000ஆம் ஆண்டில் முதன்முறையாக கோவா முதல்வரானார் இவர். ஆர்.எஸ்.எஸ். வார்ப்பான இவர் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தவர்களில் ஒருவர். மோடியின் ஆட்சி அமைந்தபோது முதலில் அருண் ஜெட்லி வகித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவிக்கு 2014ஆம் ஆண்டு இவர் வந்தார். 2017 வரை அந்தப் பதவியில் இருந்த இவர், ஆக்டிவானவர், வெளிப்படையாக செயல்படுபவர் என்ற பெயரை ஆரம்பத்தில் பெற்றார்.
பின்னர் 2017ஆம் ஆண்டில் கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரசை விட குறைவான தொகுதிகளை வென்ற போதிலும் பிற கட்சிகளின் ஆதரவோடும் ஆளுநரின் ஒத்துழைப்போடும் பாஜக ஆட்சியைப் பிடித்த போது, மீண்டும் பாஜக தலைமையால் முதல்வராக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இவருக்கு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அப்போதிருந்தே தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார். சிகிச்சைக்காக அமெரிக்காவும் சென்று வந்தார். இவர் சிகிச்சையில் இருந்தபொழுது மூத்த அமைச்சர்கள்தான் ஆட்சிக்கு பொறுப்பாக இருந்தனர். முழுநேர முதல்வர் வேண்டுமென எதிர்க்கட்சிகளும் மக்களும் கேட்டும் பாஜக தொடர்ந்து இவரையே முதல்வராக வைத்திருந்தது.
2000 ஆண்டில் தொடங்கி தற்போது வரை நான்கு முறை முதல்வராகப் பதவியேற்ற மனோகருக்கு ஒரு முறை கூட முழுமையாக ஐந்து ஆண்டுகள் முதல்வராக நீடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. தேவையான ஆதரவு இல்லாததால் இருமுறை, மத்திய அமைச்சராகப் பதவியேற்க ஒருமுறை என மூன்று முறை முதல்வர் பதவியை இழந்த இவர் நான்காம் முறை மரணத்தால் பதவியை இழந்துள்ளார். மெத்த படித்தவர், திறன்பட செயல்படுபவர் என்று நேர்மறை பெயரெடுத்து இருந்தாலும் பாஜகவுக்கே உரிய சர்ச்சை பேச்சிற்கு இவரும் விதிவிலக்கில்லை. 2015ஆம் ஆண்டில் நடிகர் அமீர்கான், இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்துவருவதாகவும் அதனால் தனது மனைவி இந்தியாவை விட்டு வெளியேறுவது குறித்துப் பேசியதாகவும் கூற, அதைக் கண்டித்து 'இத்தகையவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கவேண்டுமென' கடுமையாகப் பேசினார் மனோகர். 'பாகிஸ்தானுக்குப் போவதும் நரகத்துக்குப் போவதும் ஒன்றுதான்' என்று இவர் பேசியதாகவும் சர்ச்சை எழுந்தது. இவர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது கையெழுத்தான ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தபொழுது அதில் இவருக்கு இருக்கக்கூடிய பங்கு குறித்து பல்வேறு கருத்துகள் உள்ளன. ரஃபேல் ஒப்பந்தத்தை பிரதமர் மோடி நேரடியாகக் கையாண்டார் என்பதும் குற்றச்சாட்டுகளுள் ஒன்று.
சர்ச்சைகள் இருந்தாலும் கோவா மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க ஆதரவு கொண்ட முதல்வராகத்தான் திகழ்ந்தார் மனோகர் பாரிக்கர். எளிமையான முதல்வராகப் பார்க்கபட்ட இவர் திடீரென பொதுமக்களுடன் பைக்கில் போவார், சிறிய கடைகளில் அம்ர்ந்து உணவருந்துவார். இவரது மனைவியும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்தான். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக கிளம்பிய போது கோவா மக்களுக்கு ஒரு செய்தி வெளியிட்டார். 'எனக்காகப் பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி. உங்களால் என் உடல்நிலை சீரடைந்து மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' என்று கூறிச் சென்றார். மக்களின் பிரார்த்தனை அவரை மீண்டும் சட்டமன்றம் வரை அழைத்துவந்தது. ஆனால், அனைத்தையும் தாண்டிய இயற்கை இப்போது அவரை அழைத்துக்கொண்டது.