கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சாரதா நிதி மோசடி வழக்கிலும் ரோஸ் வேலி மோசடியிலும் விசாரிக்க சிபிஐ குழு சென்றதை தடுத்து, பின்னர் தர்ணாவில் இறங்கினார் மம்தா பானர்ஜி. எதிர்க்கட்சிகள் பல மம்தாவின் தர்ணாவுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்திருக்கின்றனர். பாஜக, ஊழலை மறைக்க திரிணாமுல் காங்கிரஸ் இதுபோன்ற நாடகத்தை நடத்துகிறது அதற்கு மற்ற எதிர் கட்சிகளும் துணை போகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியோ, பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இதில் நாடகமாடுகிறார்கள். மேற்கு வங்கத்திலிருந்து திரிணாமுல் காங்கிரஸை தூக்குவதே எங்களின் லட்சியம், இந்த மோசடி குறித்து ஞாயிற்றுக்கிழமை கம்யூனிஸ்ட் நடத்திய மாபெரும் பேரணியை மறைக்கதான் இதுபோல நாடகமாடுகிறார் மம்தா என்று குற்றம்சாட்டி இருக்கிறார்கள் கம்யூனிஸ்ட் தலைவர்கள். மம்தாவோ நான் என்னுடைய உயிரை தியாகம் செய்யவும் தயாராக உள்ளேன். ஆனால், சமரசமாக செல்ல மாட்டேன். முதலில் இந்த குற்றச்சாட்டில் பல திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை சீண்டினார்கள் நான் அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால், இப்போது கொல்கத்தாவின் தலைமை காவல் ஆணையரையே சீண்டுகிறார்கள். அவர் ஒரு அரசாங்க அமைப்பின் தலைவர். இனி இதை பொருத்துக்கொள்ள மாட்டேன் என்று நேற்று தர்ணாவில் போராட்டம் குறித்து பேசினார் மம்தா.
என்னதான் இதற்குள் பல அரசியல்கள் இருந்தாலும், சாரதா நிதி மோசடி பற்றியும் ரோஸ் வேலி நிதி மோசடி பற்றியும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய மோசடிகளில் இவை இரண்டுமே வரும். பல ஆயிரம் கோடிகளை சுறுட்டிக்கொண்டு, இந்த நிதி நிறுவனத்தில் பணம் போட்டவர்களின் வாழ்க்கையை கேள்வி குறியாக்கிவிட்டு சென்றன.
சாரதா நிதி மோசடி இந்தியாவின் மிகப்பெரிய மோசடியில் ஒன்று, 17 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டிருந்த சாரதா நிதி குழுமம் சுமார் 1500 கோடியை ஏமாற்றிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் சில ஆவணங்களில் 4000 கோடி வரை ஏமாற்றிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. கடந்த ஏப்ரல் 2013ல் இந்த நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டது.
இந்த சிட் ஃபண்ட் நிறுவனத்தின் தலைவராக இருந்த சுதிப்தா சென்னும் மேற்குவங்க முதல்வர் மம்தாவும் நட்புறவில் இருந்தனர். இந்த நட்புறவினால் நிறுவனத்திற்கு நிறைய வாடிக்கையாளர்கள் மற்றும் முகவர்கள் சேர்ந்தனர். திரிணாமுல் காங்கிரஸின் ராஜ்யசபா எம்பி குணால் கோஷ் சாரதா நிறுவனத்தின் ஊடக துறையை தலைமை தாங்கினார். சாரதா நிறுவனத்தின் புரோமோஷனுக்கு அப்போது திரிணாமுல் காங்கிரஸில் இருந்த ஷதாப்தி ராய் உதவினார் என்று பல குற்றச்சாட்டுகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகாரர்கள் மீது வைக்கப்படுகிறது. மம்தாவே இரண்டு சாரதா நிறுவன அலுவலகங்களை திறந்து வைத்திருக்கிறார் என்றும் குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
இந்த குழுமம் பல விதங்களில் அரசாங்கத்தின் உதவியுடன் தங்களது நிறுவனத்தை மக்களிடம் விளம்பரப்படுத்தியிருக்கிறது. கால்பந்து சங்கங்களில் தொடங்கி மேற்கு வங்கத்தில் கோலாகலமாக நடக்கும் துர்கா பூஜைகள் வரை இவர்கள் விளம்பரங்கள் இருந்திருக்கிறது. குறிப்பிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் சாரதா குழுமத்திடம் லஞ்சம் பெற்றிருக்கின்றனர். மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகளும் இவர்களால் பயனடைந்திருக்கிறார்கள். சாரதா நிதி மோசடியால் மேற்குவங்கம், ஒடிஷா, அஸ்ஸாம், ஜார்கண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் பணம் சுறுட்டப்பட்டதை அடுத்தும், பல அரசியல் நெருக்கடிகளை அடுத்தும் இந்த வழக்கு சிபிஐக்கு உச்சநீதிமன்றத்தால் மாற்றப்பட்டது. சாரதா நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் நிதி நிறுவனம் திவாலானவுடன் மாயமானார். ஏப்ரல்13 2013ல் இருந்து அவரை யாராலும் தொடர்புக்கொள்ள முடியவில்லை, நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட காசோலைகள் அனைத்தும் பவுன்ஸாகின. பல நாட்கள் கழித்து சென்னுடைய வலது கை என்று சொல்லப்பட்ட பெண், ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லையை கடக்கும்போது மாட்டிக்கொண்டார்.
சாரதா நிதி மோசடியை விட பெரிய மோசடி என்றால் ரோஸ் வேலி நிதி மோசடிதான். அமலாக்கத்துறை சார்பில் சுமார் 15,000 கோடிக்கு மோசடி நடந்துள்ளது. மேற்குவங்கம், பிஹார், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் பல வாடிக்கையளார்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்ததால் இவர்களின் நிதி நிறுவனம் எந்தவித கெடுபிடியும் இல்லாமல் நடந்திருக்கிறது. இந்த நிறுவனத்தில் பணம் செலுத்துவதன் மூலம் மிகப்பெரிய பணம் நமக்கு திரும்பி வரும் என்று மனக்கோட்டையை கட்டிக்கொண்டு பணம் செலுத்தியவர்களை ஏமாற்றியது ரோஸ் வேலி.
சாரதா நிறுவனம் மோசடியை அடுத்து, மக்கள் அனைவரும் கொந்தளிக்க ஆரம்பித்தனர். அதனையடுத்து ரோஸ்வேலி நிறுவனம் செய்தித்தாள்களில் ‘மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்’ என்று விளம்பரப்படுத்தியது. சாரதா நிறுவனம் ஊடக துறையில் எவ்வளவு வலுவாக இருந்ததோ அதைபோலவே ரோஸ்வேலி நிறுவனமும் நான்கு டிவி சேனல்களை வைத்திருந்தது.
ரோஸ்வேலி நிறுவனத்தில் பணம் செலுத்துவோருக்கு திரும்பி தரப்படும் பணம் கண்டிப்பாக 8-28 சதவீதம் வரை அதிகமாக கிடைக்கும் என்று ஸ்கீம்கள் வைத்திருந்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. தங்கள் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களை பணம் செலுத்த வைத்ததும் மட்டுமன்றி மேலும் அந்த நிறுவனத்தின் கீழுள்ள சிறிய நிதி நிறுவனங்களிலும் வாடிக்கையாளர்களை பணம் செலுத்த வைத்துள்ளது. இது போல சட்டத்தை மீறி பல மோசடிகளை செய்ததால் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு வழக்கு தொடங்குவதற்கு முன்பே செபி இது தொடர்பாக விசாரணை நடத்தியது.
அமலாக்கத்துறை இந்த நிறுவனத்தின் மீது எஃப் ஐ ஆர் தாக்கல் செய்தது. 2014ஆம் ஆண்டில் ரோஸ் வேலி தலைவர் மேலும் மற்ற நிர்வாகிகள் மேலும் பிஎம்எல்ஏ கீழ் வழக்கு தொடரப்பட்டது. கௌதம் குன்டு கடந்த 2015ஆம் ஆண்டு கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை இவர் மீது கொல்கத்தாவிலும் புவனேஷ்வரிலும் பல வழக்குகள் பதிவு செய்துள்ளது.
கிழக்கு இந்தியாவிலுள்ள மிகப்பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருந்த ஷ்ரிகாந்த் மோஹ்தா ரோஸ்வேலி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். ரோஸ் வேலி குழுமத்தின் பணத்தை வைத்து பல படங்களை இவர் தயாரித்திருக்கிறார். கௌதம் குன்டு பெற்ற பணத்தை திருப்பி தருமாறு கேட்டதற்கு இவர் அரசியல்வாதிகளை வைத்து மிரட்டியிருக்கிறார்.
உச்சநீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கு முன்பே சாரதா சிட் ஃபண்ட் மற்றும் ரோஸ் வேலி ஆகிய நிதி மோசடிகளில் ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமாருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்கு உள்ளான ஆவணக் கோப்புகளை ராஜீவ் குமார் அழித்து வருகிறார் என்று சிபிஐ சொல்கிறது. இதனை அடுத்துதான் மம்தா பானர்ஜி விசாரிக்க வந்த சிபிஐயை தடுத்து, தர்ணாவில் இறங்கினார்.
இந்த நிறுவனம் முதலீடாக பெற்ற பணத்தை காலக்கெடு முடிந்ததால் ஏராளமானோர் திருப்பி தருமாறு கேட்டனர். அப்போதுதான் இந்த நிறுவனம் தடுமாற தொடங்கியது. ஒரு கட்டத்தில் பணம் இப்போது இல்லை என்று கூற தொடங்கியது. இதனால் பொது மக்களும் பணியாற்றிய ஊழியர்களும் போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து இந்த நிறுவனம் மூடப்பட்டது. முதலீடு செய்த பணம் பறிப்போய்விட்டதே என்ற ஏக்கத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதுமட்டுமின்றி சிபிஐ விசாரணைக்கு பயந்து பல அதிகாரிகளும் தற்கொலை செய்தனர். சாரதா நிதி நிறுவனத்தால் அரசின் கணக்குபடி 210 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை மிக குறைவு என்றும் கூறுகின்றனர்.