மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக சினேகன் எழுதி, தாஜ் நூர் இசையமைத்த ஆல்பத்தை நேற்று அக்கட்சியின் தலைவரான கமல்ஹாசன் வெளியிட்டார். அப்போது அவர் அந்த மேடையில் பேசியது,
நம்மவர் அனைவருக்கும் வணக்கம், நம்மவர் என்பது என்னையும் குறிக்கும் இங்குள்ள அனைவரையும் குறிக்கும். அது தனி பட்டம் அல்ல...
நாங்கள் ஒரு மாற்றத்தை நோக்கி பயணிக்கிறோம் என்று உங்களுக்கு வாக்கு கொடுத்துள்ளோம், அதற்கு முதல் படியாக ‘பழையன கழிதல்’ வேண்டும். இனி வரும் விழாக்களில் நாம் இந்த மாலைகளை தவிர்போம், பொன்னாடைகளையும் தவிர்போம். மலர்கள் செடிகளிலேயே இருக்கட்டும். விவசாயிகள் எல்லாம் கோவணத்துடன் போராடிக்கொண்டிருக்கும்போது இதைகூட அவர்களுக்கு தானமாக கொடுக்க முடியாது. ஆகவே இதுபோன்ற விஷயங்களை தவிர்த்துவிடுவோம்.
மாற்றத்தை நோக்கி செல்கிறோம் என்பதற்கு இதை தவிர்த்து, முதல் கட்ட சமிக்ஞையாக மற்றவர்களுக்கு செய்யலாம். வரும் வழிகளில் சில பேனர்களைப் பார்த்தேன். எனக்கும் ஆசை தான் என் முகத்தை நானே பார்ப்பதில், நிறைய பர்த்துவிட்டேன். எனக்கு நீங்கள் 60 வருடங்கள் இதுபோன்று அன்பு காட்டியுள்ளீர்கள். இப்போது நான் கேட்பது, நம் சாலைகளில் குழி தோண்டாமல், அனுமதியுள்ள இடங்களில் மட்டும் போஸ்டர் ஒட்டிக்கொள்ள வேண்டும். கட்சி தொடங்கிய ஆரம்பத்தில் நம்முடைய மக்கள் நீதி மய்யம் அலுவலகம் முன்பு ஆர்வத்தில் பெரிய போஸ்டர் ஒட்டிவிட்டார்கள். அதை அவ்வளவு விரைவில் அகற்ற நான் அவர்களிடம் கட்டளையிட வில்லை, உத்தரவிடவில்லை, வருத்தப்பட்டேன். உடனடியாக அகன்றுவிட்டது. அதே விஷயத்தைதான் இங்கும் சொல்லி கொள்கிறேன். சந்தோசத்தினால், அன்பினால் செய்ததை என்ன இவர் தட்டிவிடுகிறார் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். நாம் போகும் தூரம் நிறைய இருக்கிறது. இந்த சின்னச் சின்ன சுமைகளைத் தாங்கிகொண்டு செல்லக்கூடாது. நாம் இன்னும் வேறு சுமைகளை அதிகமாக சுமக்க உள்ளோம் இந்த சின்ன சுமைகள் தேவையற்றது.
இந்த பாடல்கள் மக்களின் உணர்வாக எனக்கு தோன்றியது. இதை புரிந்துகொண்டு சினேகன் அதை எழுதியிருக்கிறார். சினேகன் மக்கள் நீதி மய்யத்துக்கு முன்னாடியே அட்வான்ஸ் புக்கிங் செய்துவிட்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே நான் எந்தத் திசையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறேன் என்பதை புரிந்துகொண்டவர். இந்த மேடையில் பாப்புலர் முகங்களும் இருக்கிறார்கள், தெரியாத முகங்களும் இருக்கிறார்கள். ஆனால் இந்த முகங்கள் மறக்கமுடியாத முகங்களாக வருங்காலத்தில் மாறும். அவர்களுக்கு அப்படித்தான் புகழ் வர வேண்டும், நான் சொல்லி வரவேண்டாம் என்று நான் நினைக்கிறன். அப்படித்தான் வரும், அப்படித்தான் வரவேண்டும், வரத்தான் போகிறது. அதற்கும் நீங்கள் வழி செய்வீர்கள் என்று திண்ணமாக நம்புகிறேன்.
இங்கு வந்திருக்கும் கருப்பையா, இந்த அழகிய கற்றை நூலை என் கழுத்தில் போட்டார். நான் ஒற்றை நூல்கூட வேண்டாம் என்று என் பெற்றோர்களிடம் மறுத்தவன். ஆனால், இந்த கற்றை நூலை பெருமையாக அணிந்திருக்கிறேன். காரணம் என்னவென்றால் இந்த நூல் வெள்ளையர் ஆட்சியை பொட்டலம் கட்டி அனுப்பிய நூல். வெவ்வேறு ராஜ்யங்களாக பிரிந்துகிடந்த இந்தியாவை ஒன்று சேர்த்து தைத்த நூல். இது எனக்கு பெருமையே. இது கட்சிக்கு அப்பாற்பட்டது.
நான் பெரியாருடைய எத்தகைய ரசிகனோ, அதேபோன்று காந்தியடிகளின் ரசிகன். இன்னொரு சரித்திர உண்மை என்னவென்றால் பெரியாரே காந்தியின் ரசிகர்தான், விமர்சகர் என்பது வேறு. புகைப்படம் எடுக்கும்போது இந்த நூல் அசிங்கமாக தெரியுமே என்று சொன்னார்கள் நான் பரவாயில்லை தெரியட்டும் என்றேன். நூலை படிக்கத்தான் இல்லை, பார்க்கவாவது செய்யட்டும். அப்படி சிலருக்கு சொல்லலாம். இந்த பாடல்களின் முதல் குறுந்தகுடுகளை பெற்றுக்கொள்ள வந்த மனிதர்கள், பெண்மணிகள் அவர்களைப்போன்றவர்கள்தான் எனக்கு மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பிக்க ஊக்குவித்தவர்கள்.
முன்பு போல அல்ல தற்போது காலமே கெட்டுவிட்டது. இனிமேல் என்ன மஹாத்மா காந்தியா பிறக்க போகிறார்? என்று சொல்பவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். மஹாத்மா காந்தியை நீங்கள் அந்த பச்சை பள்ளத்தில், அந்த பார்லிமென்டில் தேடாதீர்கள். அந்த கிணற்றில் பழைய தவளைகள்தான் இருக்கும். தெருவில் தேடுங்கள் பாதசாரிகளாக திரிந்துகொண்டிருப்பார்கள் என் முன்னோடிகள், என் தோழர்கள். அங்கே தேடுங்கள் மஹாதமாக்கள் கிடைப்பார்கள். மஹாத்மா என்பது மந்திர சக்தியல்ல, மேலிருந்து கொடுக்கப்பட்டதல்ல, நாம் உள்ளிருந்து உணர்ந்து கீழிருந்து வருவது.
நான் மட்டும் நாட்டை திருத்திவிடுவேன் என்று நீங்கள் மல்லாந்து உட்காந்துவிடாதீர்கள், நிமிர்ந்து உட்காருங்கள் இந்த நாட்டை மாற்றும் சக்தி உங்களிடமும் உள்ளது. பணம் கொடுத்து ஒட்டு வாங்கப்படும் இந்த சூழ்ச்சிகளை நீங்கள் எப்படி சமாளிக்க போகிறீர்கள்? என்று கமல் மேடையில் சொல்லிக்கொண்டிருக்கும் போது பர்வையாளர்கள் கூட்டத்தில் இருந்து, "தலைவா நாங்க வாங்க மாட்டோம்" என்று சத்தம் வந்தது.
கமல் உடனடியாக, நீங்கள் வாங்கமாட்டோம் என்று சொல்வது மட்டும் போதாது, வாங்குபவர்களுக்கு அதனால் ஏற்படும் நஷ்டம் என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும். எங்கள் ஏழ்மைக்கு நாங்கள் பணம் வாங்குகிறோம், நாங்கள் வாங்கவில்லையென்றால் நீங்களா கொடுப்பீர்கள் என்றால் ஆமாம் கொடுப்போம், ஆனால் இப்படி கொடுக்கமாட்டோம். உங்களுக்கு சேரவேண்டியது 1 லட்சமோ, 2 லட்சமோ அதைவிட்டுவிட்டு 5000த்துக்கும் 10000த்துக்கும் ஐந்து வருடத்தை அவர்களிடமா அடகு வைப்பது.
அப்போது, பார்வையாளரின் ஒருவரது பேச்சு கமலின் காதில் விழ. நீங்கள் பேசுவது எனக்கு கேட்கவில்லை. ஒரு நாள் பேசுவோம், இந்த மாதிரி குரல்களை கவனிக்கத்தான் நான் நிறைய பலரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். நான் செவியை தரையில் வைத்து கேட்க இருக்கிறேன். அந்த பூமி அதிர்வு எனக்கு செய்தி சொல்லும். அதுவரை எனக்கு அனைத்தும் தெரிந்தாக வேண்டும். இந்த பாடல் எல்லாம் உங்களுடைய உற்சாகத்திற்குத்தான், எனக்கு உற்சாகம் எல்லாம் உங்களிடம் இருந்துதான் வரும். உங்களுடைய கோபம் தெரிய வேண்டும், எனக்கும் கோபம் உண்டு இரண்டையும் சேர்த்து சமையல் செய்வோம். ஒரு ஆளால் தேரை இழுக்கவே முடியாது, நீங்களும் சேர்ந்து இழுக்க வேண்டும். இதை நான் சொல்லவில்லை காந்தியே சொல்கிறார் சத்தியாகிரக போராட்டம் என்பது ஒவ்வொருவருடைய சுய போராட்டம் என்கிறார். அதேபோன்று மக்கள் நீதி மய்யம் என்பது ஒவ்வொருடையது என்று நினைத்து போராட வேண்டும். ஏனென்றால் நாங்கள் உருவாக்குவது தொண்டர்களை மட்டுமல்ல, தலைவர்களையும் தான். இந்த கட்சி மக்களுக்காகவும், ஒரு காரணத்திற்காகவும் ஆரம்பிக்கப்பட்டது. அந்த குறை நீங்கும் வரையில் இந்த கட்சி இருந்தே ஆக வேண்டும். இந்த கறை என்பதை 10 அல்லது 20 ஆண்டுகளில் துடைத்து எடுக்க முடியாது. இந்த சீரழிவிற்கு 50 ஆண்டுகள் ஆகியிருக்கிறது, குறைந்தது 50 ஆண்டுகளாவது மக்கள் நீதி மய்யம் செழிப்பாக இருந்தால்தான் முடியும், அந்த அதிசய மரத்தின் கனியை நான் சுவைக்க முடியுமா என்று தெரியாது. தேவர் மகனில் சொல்வதை போன்றுதான் சொல்லவேண்டும். “விதை நான் போட்டது”.
இந்த மேடையில் இருப்பவர்களை நீங்கள் பட்டியலிட்டு சொல்லும் நாள் வெகுவிரைவில் வந்து சேரும். அதற்கு காரணமாக இருக்கப்போவது நாங்கள் ஓட்டும் போஸ்டரினால் அல்ல, நாங்கள் செய்யப்போகும் வேலையினால்.
மக்கள் நீதி மய்யத்திற்கு நிதியுதவி தந்ததை வாங்கி அதை மக்களுக்கு தூக்கி காட்டிவிட்டு, இது மற்ற கட்சிகளைப்போல் பணத்தை உள்ளே நுழைத்துக்கொள்ளாது. மக்களுக்கு வெளியே காட்டும்" என்றார்.