சென்னை குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளையில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. தான் பெற்ற இரண்டு குழந்தைகளை கொன்று, கணவனையும் கொல்ல திட்டமிட்டிருந்த அபிராமியின் படு பயங்கரமான கொடூர செயல்தான் அது.
"காதலித்துதான் திருமணம் செய்து கொண்டோம். என் கணவர் எப்போதும் வேலையிலேயே அக்கறையாக இருப்பார். சில நேரம் இரவு வீட்டுக்கு வர மாட்டார். இவ்வாறு கணவர் நடந்து கொண்டதால் அவர் மீது வெறுப்பு வந்தது. இந்த சமயத்தில்தான் பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்தின் பழக்கம் ஏற்பட்டது" என போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார் அபிராமி.
கொலை நடந்த பிறகு அபிராமி சென்ற ஸ்கூட்டி, கொலை நடந்த வீடு, குழந்தைகளுடன் அபிராமி இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தால் அவரது கணவர் எந்த குறையும் வைக்கவில்லை என்பது தெரிகிறது.
'வேலை வேலை என்று பறக்காவிட்டால், அபிராமி இப்படி வசதியாக வாழ்ந்திருக்க முடியுமா? தினமும் பிரியாணி ஆர்டர் செய்திருக்க முடியுமா?' என்ற கேள்வியும் எழுகிறது. தனக்காகத்தான் வேலை வேலை என்று தனது கணவர் பறந்தார் என ஒரு நிமிடம் அபிராமி நினைத்து பார்த்திருக்கலாம்...
டூவீலர், கார், ஏ.சி., ப்ரிட்ஜ், வாஷிங்மிஷின், எல்இடி டிவி, விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்டவைகள் ஒரு காலத்தில் ஆடம்பரமாக இருந்தவைகளெல்லாம் இன்று அத்தியாவசியமாகிவிட்டது. உறவினர்கள், நண்பர்களைப் போல நாமும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் வீடு, நிலம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கணவன் - மனைவி இருவருக்குமே உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை... வேலை வேலை என ஆண்கள் பறப்பதற்கு காரணம் இன்றைய சமூக நிலை. இன்று பெரும்பாலான குடும்பங்களில் கணவன் - மனைவி இருவருமே வேலைக்காக பறக்கின்றனர்.
அதே நேரத்தில் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் குடும்ப விஷயங்கள் உள்பட பல்வேறு விஷயங்களை சந்தோஷமாக பகிர்ந்து கொள்வதற்காக தனது மனைவிக்காக, தனது கணவருக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பதுதான் இத்தகைய சம்பவங்கள் சொல்லும் பாடம்.