ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் கிடைக்கக்கூடிய அரிய பொருட்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மண் பானை, டம்ளர், ஜக் உள்ளிட்ட கைவினைப் பொருட்கள், இயற்கை தானியங்கள், அழகு பொருட்கள், பொம்மைகள், மரச்செக்கு எண்ணெய், நாட்டு சக்கரை, தேன், செக்கு எண்ணெய், அச்சு முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட நொறுக்குத்தீனிகள், ஓவியங்கள், பெண்களுக்கான ஆபரணங்கள், அணிகலன்கள், அழகு சாதனப்பொருட்கள், நவராத்தி விழாவில் வைக்க வேண்டிய கொலு பொம்மைகள், கையால் நெய்யப்பட்ட பைகள், கைப்பைகள், பாய்கள், தலையணை, போர்வை, பருத்தி ஆடைகள், புடவை, சுடிதார், துண்டு, போர்வை என ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் கிடைக்கக்கூடிய பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சமையலுக்கு பயன்படுத்தும் மண் சட்டி உள்ளிட்டவைகளை விற்பனை செய்யும் அகமகிழ் என்பவர் நம்மிடம் பேசியபோது, கடந்த இரண்டு வருடங்களாக இந்த கண்காட்சியில் விற்பனை செய்து வருகிறோம். மண்ணால் ஆன குழம்பு வைக்கும் சட்டி, தண்ணீர் ஜக், டம்ளர், காபி குடிக்கும் கப், குழந்தைகளுக்கான விசில், குழந்தைகள் விளையாடுவதற்காக மண்ணால் ஆன அடுப்பு உள்ளிட்டவை செட்டாக விற்பனைக்கு உள்ளது. எங்களிடம் மற்ற இடங்களை விட குறைவான விலையில் கிடைக்கும். எந்தவித ரசாயனமும் இல்லாமல் இதனை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம். இந்த மண் சட்டிகளை கேஸ் அடுப்பில் வைத்தும் சமைக்கலாம் விரிசல் விழாது என்றார்.
சென்னையைச் சேர்ந்த கமலா என்பவர் நம்மிடம், 65 வகையான பொருட்களைக்கொண்டு கைகளாலேயே பல்வேறு ஓவியங்களை செய்வேன். விநாயகர், மயில், சங்கு மற்றும் பாரதியார், எம்.ஜி.ஆர். கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களையும் ஓவியங்களாக வரைந்து விற்பனைக்கு வைத்திருக்கிறேன். நீங்கள் எந்த மாதிரி வேண்டும் என்று என்னிடம் போட்டோ கொடுத்தால் அதைப்போலவே ஓவியம் வரைந்து கொடுப்பேன் என்றார்.
கண்காட்சியை சுற்றி வரும்போது அங்கு உணவகமும் உள்ளது. உணவகத்தின் உள்ளே நுழைத்து அங்கே உள்ளவர்களிடம் நீங்க எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்றதும், சிவகங்கையில் இருந்து வந்துள்ளோம் என்றார் இந்திரா.
அவர் நம்மிடம், காளி பிளவர் பக்கோடா, வாழைப் பூ வடை, போண்டா, கொள்ளு வடை, ராகி அடை, சோள அடை உள்பட சிறுதானிய உணவு வகைகளை செய்வோம். மேலும் வரகு, திணை பாயாசம், பருத்தி பால் உள்ளிட்டவையும் கிடைக்கும். சாம்பார், ரசம், காரக்குழம்பு, கூட்டு, பொறியல், அப்பளம் ரூபாய் 50க்கு அன்லிமிடெட் சாப்பாடு மதியத்திற்கு தயாராகும். புளி சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம் ரூபாய் 40க்கும், தயிர் சாதம் ரூபாய் 30க்கும் கிடைக்கும். காலையில் இட்லி, பொங்கல், பூரி, தோசை, வடை, இடியாப்பம் கிடைக்கும். மாலையில் ஸ்னாக்ஸ், டீ, காபியும் கிடைக்கும் என்றார்.
வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இந்தக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் இயக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஊக்குவிக்கும் வண்ணம் இந்த கண்காட்சி கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கப்பட்டது. வரும் அக்டோபர் 18 ஆம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.