செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி வெள்ளைக்காளி தாயார் ஜெயக்கொடி, மனைவி திவ்யா ஆகிய இருவரும் திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஜெயக்கொடியும், திவ்யாவும், காவல் துறையினர் வெள்ளைக்காளியை பொய்ப் புகார் கூறி என்கவுண்டர் செய்யத் திட்டமிடுகிறார்கள். மருத்துவமனை, நீதிமன்றம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்படி அழைத்துச்செல்லும்போது தப்ப முயன்றதாகக் கூறி போலீசார் என்கவுண்டர் செய்யவிருப்பதாகக் கூறினார்கள். அத்தோடு அவரைக் காப்பாற்ற வேண்டுமென நீதிமன்றத்திற்கும் கோரிக்கை வைத்தனர்.
இவர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பதற்கு 15 நாட்களுக்குப் முன் (செப்.4) பெங்களுரிலுள்ள கம்மனஹள்ளி சுக்சாகர் ஓட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த வி.கே.குருசாமி என்பவரை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த வி.கே. குருசாமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெள்ளைக்காளியின் குடும்பத்தினர் திருச்சியில் பேட்டி கொடுக்கும்வரை தீவிர சிகிச்சையில்தான் இருந்தார் குருசாமி.
யார் இந்த வெள்ளைக்காளி, வி.கே. குருசாமி? இவர்களுக்குள் என்ன பகை?
காவல்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது கிடைத்த தகவல், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்தவர்கள் வி.கே குருசாமியும், ராஜபாண்டியும். பிழைப்புக்காக மதுரை வந்தவர்கள். மதுரையிலேயே செட்டிலாகி விட்டார்கள். வி.கே.குருசாமி தி.மு.க.வில் சேர்ந்து மதுரை மாநகராட்சி மண்டல தலைவராகவும், ராஜபாண்டி அ.தி.மு.க.வில் சேர்ந்து மாநகராட்சி மண்டல தலைவராகவும் உயர்ந்தார்.
கடந்த 2003-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ராஜபாண்டி ஆதரவாளரான சின்னமுனுசாமி என்பவர் வி.கே.குருசாமிக்கு பெரும் குடைச்சலாக இருந்துள்ளார். எனவே கீரைத்துறையில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் பிரச்சனை பண்ணி, அதைப் பெரிதாக்கி சின்னமுனுசாமியை அக்டோபர் 30-ஆம் தேதி வி.கே,குருசாமியும் அவருடைய ஆட்களான பாம்பு பாண்டி, மாரிமுத்து, ராமமுர்த்தி, வழுக்கை முனுசு, கணுக்கண் முனியசாமி ஆகியோர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இந்த நிலையில், சின்ன முனுசாமியின் தம்பி காளீஸ்வரன் என்ற வெள்ளைக்காளி, தன் அண்ணனைக் கொன்ற வி.கே.குருசாமியின் குடும்பத்தையே கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். இதற்கிடையில் வி.கே.குருசாமி ஆதரவாளரான வழுக்கை முனுசை, ராஜபாண்டி ஆதரவாளரான சப்பாணி முருகன் கொலை செய்கிறார்.
இதற்கடுத்து இருதரப்பிலும் மாறி மாறி கொலைகள் நடந்தன. 2008-ஆம் ஆண்டு, வி.கே குருசாமி தரப்பில் மாரிமுத்து, ராமமூர்த்தி, 2013-ல் குருசாமியின் தங்கை கணவர் பாம்பு பாண்டியைக் கொன்றனர்.
2015-ஆம் ஆண்டு ராஜபாண்டி ஆதரவாளரான மொட்டை மாரியை குருசாமி தரப்பினர் போட்டுத்தள்ளினார்கள். 2016-ல் வி.கே.குருசாமியின் மருமகன் காட்டுராஜாவை, முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், வெள்ளைக்காளி ஆகியோர் வெட்டிக் கொலைசெய்தனர்.
2017-ல் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ராஜபாண்டியின் மகன் தொப்பி என்ற முனியசாமியை சாம்பலே கிடைக்காதவாறு எரித்துக்கொன்றனர். அதைத் தொடர்ந்து வி.கே.குருசாமி ஆதரவாளரான சடையாண்டியை, முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், வெள்ளைக்காளி ஆகியோர் கொலைசெய்தனர். இந்த வழக்கில் 2018-ஆம் ஆண்டு மதுரை சிக்கந்தர்சாவடியில் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோரை போலீசார் சுட்டுக் கொலைசெய்தனர். இதில் வெள்ளைக்காளி தப்பிவிட்டார். வெள்ளைக்காளி ஆதரவாளர்கள் வி.கே.குருசாமி வீட்டிற்குள் புகுந்து குடும்பத்தையே கொலை செய்ய முயல, வீட்டைப் பூட்டி போலீசாருக்கு தகவல் சொல்ல, போலீசார் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி ரவுடிகளை வெளியேற்றி சிலரை கைதும் செய்தனர்.
குருசாமி மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் வெளியேவந்த குருசாமியும் மகன் மணிகண்டனும் ராஜபாண்டி தரப்பை எதிர்க்க ஆளில்லாததால் சென்னை, பெங்களூரு என்று தலைமறைவாக வாழத்தொடங்கினார்கள்.
பல்வேறு வழக்குகள் இருப்பதால் அதில் ஆஜராவதற்கு அடிக்கடி மதுரை வரும் குருசாமி, வழக்கம்போல் கடந்த செப்.2-ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகி, 3-ஆம் தேதி மதுரையிலிருந்து விமானம் மூலமாக பெங்களூரு சென்றுள்ளார். அதற்கு அடுத்த நாள்தான் அவரை இரண்டு காரில் பின்தொடர்ந்த ராஜபாண்டி தரப்பினர் பெங்களுரில் வைத்து கொலைமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு காரணம் வெள்ளைக்காளியும் அவருடைய கூட்டாளிகளும்தான் என்று சொல்லப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளில் குருசாமி தரப்பில் 10 பேரும், ராஜபாண்டி தரப்பில் 7 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ராஜ பாண்டி இறந்துவிட்டார். இதனால், குருசாமியை பழி வாங்கும் பணியை தற்போது புழல் சிறையிலுள்ள வெள்ளைக்காளி முன்னெடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் வெள்ளைக்காளியை என்கவுன்ட்டரில் போட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் அவரது தாயும் மனைவியும் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்துவருகின்றனர். அதன் ஒரு அம்சமாகத்தான் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஆகியவை நடந்தன.
"வருடக்கணக்கில் தொடரும் பழிக்குப் பழி தொடர் கொலைகளின் பின்னணியில் யார் இருப்பது என்று பார்த்து, அந்தக் கும்பலை சிறையில் தள்ள வேண்டும், அமைதி திரும்ப வேண்டும்' என்கிறார்கள் மதுரைவாசிகள்.