பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், பொருளாதாரம் அனைத்திலும் அசுர வளர்ச்சியுடன் உலகையே அசரவைத்துவரும் தென்கொரியாவும், சர்வாதிகாரம், அடிப்படை மனித உரிமைகள் மறுப்பு, வறுமை என துன்பத்தில் உழன்று வரும் வடகொரியாவும் மந்தையிலிருந்து பிரிந்து, சந்தித்துக்கொள்ள முடியா தூரம் கடந்துசென்றுவிட்ட இரு ஆடுகளாகிப்போயுள்ளன. ஒரு நாடு, சர்வதேச அரசியல் குழப்பங்களால், இரண்டு தனித்தனி நாடுகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஆனால், அதில் ஒரு நாடு வளர்ச்சியை நோக்கியும் மற்றொரு நாடு அடிமைத்தனத்தை நோக்கியும் பயணித்தது ஏன்..? கே-பாப், சாம்சங், ஹூண்டாய் என தென் கொரியாவின் புகழ்பாட அடையாளங்கள் ஏராளம் கொட்டிக்கிடக்கையில், வடகொரியாவின் அடையாளமாகச் சர்வாதிகாரம் மட்டும் மாறிப்போனது ஏன்..? வடகொரியாவின் அசைக்கமுடியாத தலைவராக விளங்கும் கிம் ஜாங் உன் அந்நாட்டில் செய்யும் ஆட்சி எத்தகையது..?
இக்கேள்விகளுக்கான பதில்களை அறிந்துகொள்வதற்கு கொரிய தீபகற்பத்தின் பூகோள மற்றும் அரசியல் வரலாற்றைச் சற்று அறிந்துகொள்வது அவசியமாகிறது. கொழித்துக்கிடந்த இயற்கை வளங்கள், தேனீக்களாய் சுழன்றுழைக்கும் மக்கள் என இயற்கையின் அரவணைப்பில் உழைப்பால் வளர்ந்துகொண்டிருந்த ஒருங்கிணைந்த கொரியாவை 1910 ஆம் ஆண்டு ஜப்பான் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. கொரியாவில் கொட்டிக்கிடந்த இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் மெல்லச் சுரண்ட ஆரம்பித்தது ஜப்பான். சுமார் 30 ஆண்டுகள் கொரியாவைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த ஜப்பான், இரண்டாம் உலகப்போரில் தோல்வியைச் சந்தித்துச் சரணடைந்தபோது, கொரியாவின் தெற்குப் பக்கத்தை அமெரிக்காவும், வடக்கு பக்கத்தை ரஷ்யாவும் ஆக்கிரமித்திருந்தன.
போரில் தோல்வியடைந்த ஜப்பான் கொரியாவை விட்டு வெளியேற்றப்பட, 1948 ஆம் ஆண்டு அந்நாடு இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. அமெரிக்கா பிடித்து வைத்திருந்த தெற்குப் பக்கத்தில் ஐநா உதவியுடன் தேர்தல் நடத்தப்பட்டு மக்களாட்சி நிறுவப்படுகிறது. அதேநேரம், ரஷ்யா பிடித்துவைத்திருந்த வடக்கு பக்கத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி நிறுவப்பட்டு கிம் இல் சங் அந்நாட்டின் தலைவராக நியமிக்கப்படுகிறார். அன்று தொடக்கி இன்று வரை வடகொரிய மக்களின் மூச்சுக்காத்துக்கூட வெளியே வரமுடியாத அளவு அந்நாட்டைக் கட்டிக்காத்துவருகிறது (!) கிம் பரம்பரை. கிம் இல் சங், அவரது மகன் கிம் ஜாங் இல், பேரன் கிம் ஜாங் உன் என மூன்று தலைமுறைகளின் அரசாட்சியில் மக்களின் பிணக்குவியல்களுக்கு மேல் கட்டமைக்கப்பட்ட கல்லறை தேசமாக உலகை மிரட்சியுற வைக்கிறது வடகொரியா. அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத அந்நாட்டு மக்கள், அவற்றைக் கேட்பதற்காகக் கூட தங்கள் ஆட்சியாளரை நோக்கிக் குரலெழுப்ப முடியாத சூழலிலேயே இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர்.
ஒற்றைப் பட்டனை வைத்துக்கொண்டு அமெரிக்காவிற்கே சவால்விட்டு உலக நாடுகளையே உருட்டிமிரட்டிய வடகொரியாவின் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டு மக்களையும் இதே பாணியில் தான் பயமுறுத்தி அடக்கி வைத்திருக்கிறார். அரசாங்கம் குறித்து மக்கள் விமர்சிக்க முடியாது, நாட்டின் தலைநகரைத் தவிர வேறெங்கும் முறையான மின்சார வசதி கிடையாது, குறைந்தபட்ச வேலை நேரம் என்றோ, குறைந்தபட்ச ஊதியம் என்றோ எதுவும் கிடையாது, பொழுதுபோக்கிற்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்க்க முடியாது, சாதாரண மக்கள் கார் வாங்குவதைப் பற்றி கனவுகூட காண முடியாது, பொதுமக்கள் இணையசேவை பயன்படுத்துவது என்பது கூட எட்டாக்கனியே. இப்படி வடகொரியாவில் 'முடியாதது, கிடைக்காதது' என பல இருந்தாலும், அந்நாட்டில் அனைவருக்கும் 'கிடைப்பவை' என்றும், அனைவரிடமும் 'இருப்பவை' என்றும் சில விஷயங்களும் உள்ளன.
பள்ளிக்குழந்தைகளுக்கு கட்டாய விவசாயப் பணிகள், 24 மணிநேரமும் ஒட்டுக்கேட்கப்படும் தொலைப்பேசிகள், நாள் முழுவதும் ஆட்சியாளரின் புகழ்பாடும் அரசின் தொலைக்காட்சி சேனல்கள், ஆட்சியாளர்கள் ஆதரவாகத் திரிக்கப்பட்ட வரலாறுகளைக் கொண்ட பள்ளி பாடப்புத்தகங்கள், ரகசிய மைக், கேமராக்கள் பொருத்தப்பட்ட பொது இடங்கள், அரசை எதிர்ப்போருக்குத் தடுப்பு முகாம்கள், மனித கடத்தல் சந்தைகள், அனைத்து வீடுகளிலும் கட்டாயம் வைக்கப்பட்டிருக்க வேண்டிய கிம் இல் சங், அவரது மகன் கிம் ஜாங் இல் ஆகியோரின் புகைப்படங்கள், மனித உரிமைக்காகக் குரல் கொடுப்போருக்கு மரண தண்டனைகள், அரசுக்கு கும்பிடு போடுபவர்களுக்கு உயிர், கோடீஸ்வரர்களிடம் கார்கள், ஏழைகளிடம் பசி என நாடு முழுவதும் 'இருப்பவை' என்பது ஏராளம்.
மூன்றுவேளை உணவு என்பது பல லட்சம் மக்களுக்கு இன்னும் கனவாகவே இருக்கும் இந்த தேசத்தில், ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அரசுக்கு எதிராகப் பேசியதற்காகத் தடுப்பு முகாம் எனும் நரகக்குழிகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இப்படியான முகாம்களிலிருந்து தப்பித்த சிலர் கூறுகையில், "இந்த முகாம்களில் மக்கள் அடித்து, கல்லெறிந்து கொல்லப்படுகிறார்கள், சாகும்வரை பட்டினி போடப்படுகிறார்கள். பாலின பாகுபாடின்றி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள், சிலர் நாய்களை வைத்துக் கடிக்கவைக்கப்படுவார்கள். சில நேரங்களில் காவலர்களை மகிழ்விக்க யாரேனும் சில கைதிகள் சாகும்வரை அடித்துக்கொள்ள வேண்டியிருக்கும். சரியான உணவு இல்லாத அந்த நரகத்தில் கைதிகள் உயிருடன் இருக்க எலிகள் மற்றும் பூச்சிகளைச் சாப்பிடும் நிலை அடிக்கடி ஏற்படும்" எனத் துன்பம் தோய்ந்த கதைகளை அடுக்குகின்றனர். உயிர் பிழைப்போமா என்ற அச்சத்துடன் முகாம்களில் வசிக்கும் கைதிகள் திடீரென என்றாவது ஒருநாள் கொல்லப்படலாம் அல்லது பசியாலோ, நோயாலோ இறக்கலாம், ஆனாலும் அவருடன் இருந்த சக நபரால் இதற்குக் கதறிக்கூட அழ முடியாது. இதுவே அந்நாட்டின் தடுப்பு முகாம்களில் நிலவும் நிலை.
சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறைகள், மோசமான கல்வி கட்டமைப்பு, மக்கள் வாழ்வாதார சுரண்டல்கள், கருத்துச் சுதந்திரமின்மை, போதுமான மருத்துவ வசதி இல்லாமை என மக்களின் அடிப்படை உரிமைகள் பறிப்பு தொடர்கதையாகி வந்தாலும், தனது ஒடுக்குமுறையை வெளி உலகம் முழுமையாக அறியாத வண்ணம் மக்களின் அச்சத்தை அரணாகக் கொண்டு ஆட்சியை நடத்தி வருகிறது கிம் அரசு. வெளி உலகத்திலிருந்து வரும் அனைத்து தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டு, அறியாமை மற்றும் அரசாள்பவர் மீதான அச்சத்தின் பிடியில் சிக்கித்தவிக்கும் அந்நாட்டு மக்களுக்கு, போராடுவதற்கான துணிவைத் திரட்டுவதென்பதே இயலாக்காரியமாக இருந்த சூழல் தற்போது மெல்ல மாறத்தொடங்கியுள்ளது. உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான வழிகளைக் கடந்து அந்நாட்டை விட்டுத் தப்பிச்சென்ற பல சுதந்திர விரும்பிகள் தங்கள் நாட்டிலுள்ள சக குடிமகன்களுக்கான சுதந்திரத்தை உறுதிசெய்வதற்கான முயற்சிகளிலும் தற்போது ஈடுபடத் துவங்கியுள்ளனர். இவர்களின் முயற்சிக்கு அடுத்த மாதத்திலோ அல்லது அடுத்த வருடத்திலோ பலன் கிடைத்துவிடுமா என்றால் சந்தேகம்தான். ஆனால், "சிறுதுளி பெருவெள்ளம்" என்பதுபோல இந்த முயற்சிகளின் முடிவில், மக்களின் அறியாமை மற்றும் அச்சத்தால் வடகொரிய அரசு ஏற்படுத்திவைத்துள்ள அரண் தகர்க்கப்படும் என்பது மறுக்கமுடியாதது.