ஊடகங்களுக்குத் தகவல் அளித்து, அதன் நம்பகத்தன்மை ஆராயப்பட்டு, நிருபர்கள் விசாரித்தறிந்து செய்தியாக வெளிவருவது வரைக்கும், பொறுத்திருக்க முடியாதவர்களுக்கு, இருக்கவே இருக்கின்றன, வாட்ஸ்-ஆப், பேஸ்புக் போன்ற வலைத்தளங்கள். அத்தகையோரால், யார் மீதும் எந்தக் குற்றச்சாட்டும் சுமத்திவிட முடியும். உண்மையோ, வதந்தியோ, விறுவிறுவென்று பரவிவிடும். ‘சைபர் கிரைம்’ என்று காவல்துறை நடவடிக்கையில் இறங்கினாலும், அந்த வதந்தி உயிரோட்டமாக உலவிக்கொண்டே இருக்கும்.
மதுரையிலும் வில்லங்கமான ஒரு தகவல் வாட்ஸ்-ஆப் மூலம் பரப்பப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 1,235 பள்ளிகளில் ஒன்று மதுரையிலும் இயங்கி வருகிறது. தென்மாவட்டத்தில், முதன் முதலில் தொடங்கப்பட்ட கல்லூரி ஒன்றும் மதுரையில் உள்ளது. இந்த இரு கல்வி நிறுவனங்களில் படிக்கின்ற மாணவிகளைக் குறிவைத்துள்ள மூன்று பேர், கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் தொழில் செய்து வருவதாக, ’பகீர்’ தகவல் ஒன்றை யாரோ வாட்ஸ்-ஆப் மூலம் பரப்ப, மதுரை மாநகர மக்கள் “அப்படியா? இது உண்மையா?” என்று ஒருவருக்கொருவர் பதற்றத்துடன் விசாரித்தபடி இருக்கின்றனர்.
புகைப்படங்களோடு அந்த 3 பேரின் பெயர்களையும், அவர்கள் பார்த்துவரும் வியாபாரத்தையும் மொபைல் எண்களோடு குறிப்பிட்டு, எந்தெந்த வழிகளில் மாணவிகளிடம் தொடர்புகொண்டு வலை விரித்தார்கள் என்று, வாட்ஸ்-ஆப் மூலம் விவரித்த அந்த மர்ம நபர், ‘மதுரை நகரில் உங்கள் குழந்தைகள், பள்ளியிலோ, கல்லூரிகளிலோ படிப்பவர்களாய் இருந்தால், அவர்களின் மொபைல் போனில் இந்த மூவரின் மொபைல் எண்களோ, கடை எண்களோ பதிவு செய்யப்பட்டிருந்தால், தயவு செய்து கண்காணித்துக் காப்பாற்றிக்கொள்ளவும்.’ என்று பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான அந்த மூவர் தரப்பிலிருந்தும் வாட்ஸ்-ஆப் மூலம் பதிலளிக்கப்பட்டது. ‘எங்களைப் பற்றியும், எங்கள் நிறுவனத்தைப் பற்றியும் மேலே வந்துள்ள செய்திகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை. தொழில் போட்டியினால் நயவஞ்சகர் கூட்டம் எங்கள் நிறுவனங்களின் பெயரைக் கெடுப்பதற்காகவே அவதூறு பரப்பும் நோக்கத்தில், சமுக வலைத்தளங்களில் தவறான தகவலை வெளியிட்டுள்ளனர். மேற்கண்ட தகவலைப் பரப்பிய நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளோம்.’ என்று தெரிவித்திருந்தனர்.
புகார் அளித்த மூன்று இளைஞர்களும் மதுரை – தல்லாகுளம் காவல்நிலையத்தில் தீவிரமாக விசாரிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரைத் தொடர்புகொண்டோம். “ஆமாம் சார்.. லாக்-டவுன் நேரத்துல அனுமதிபெற்று நாங்க கடையைத் திறந்து வைத்தோம். தொழில் போட்டியில் அவதூறா தகவல் பரப்பிட்டாங்க. காலேஜ்லயும் என்ன இந்த மாதிரி வந்திருக்குன்னு கேட்டாங்க.” என்றவரிடம், ‘உங்கள் மீது பெண் ஒருவர் புகார் தந்திருக்கிறாராமே?’ என்று கேட்க, “அது எங்ககூட நல்லா பழகிய பெண்தான். 2013-இல் பழக்கத்தை நிறுத்திட்டோம். மற்றபடி அவங்க எந்தப் புகாரும் தரல..” என்றார்.
ரீசார்ஜ் செய்ய வரும் மாணவிகளின் மொபைல் எண்களைக் குறித்துக்கொண்டு, பிறகு தொடர்பு ஏற்படுத்தி நெருங்கியதாகவும், விடுதி மாணவிகளுக்கு பார்சல் டெலிவரி செய்யும்போது மதுபாட்டில்களைக் கொடுத்ததாகவும், அந்தப் பழக்கத்தில், அவர்களை ஊர் சுற்ற வெளியில் அழைத்துச்சென்று, குளிர்பானத்தில் போதை மருந்து கலந்துகொடுத்து அத்துமீறி, அதனை வீடியோ எடுத்து மிரட்டி, பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தினார்கள் என்றும் அந்த வாட்ஸ்-ஆப் தகவலில் அத்தனைக் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன.
பொய்யான குற்றச்சாட்டு என்றால் வதந்தி பரப்பியவர்கள் மீதும், குற்றச்சாட்டு உண்மையென்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.