உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 48 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 3,000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்குக் கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இந்திய அளவில் மராட்டியத்திற்கு அடுத்து தமிழகத்தில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து காணப்படுகின்றது. இதுவரை 11,760 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4,406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களைத் தவிர 7,270 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் சில நாட்களாக குறைவான அளவு கரோனா சோதனை செய்யப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட சிலர் குற்றம் சாட்டி வந்தனர். இந்த மாதம் தொடக்கத்தில் 14,000க்கும் அதிகமான சோதனைகள் செய்யப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு 9,000க்கும் குறைவான சோதனை செய்ய்பட்டது. இதனால் தமிழக அரசு சோதனைகளைக் குறைத்து, நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்காட்ட பார்க்கிறது என்று குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்நிலையில் நேற்று 11 ஆயிரத்துக்கும் அதிகமான சோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை 3,37,841 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 3,22,508 பேருக்கு கரோனா சோதனை நடத்தி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் செய்யாத ஒன்று என்று தமிழக அரசு கூறி வருகின்றது. மாநிலம் முழுவதும் 61 சோதனை மையங்கள் இருக்கின்ற நிலையில் குறைவாகச் சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்ற கேள்வி இயல்பாக எழுகின்றது. ஆனால் மாநில அரசு பல பகுதிகளில் கரோனை தொற்று குறைய தொடங்கி உள்ளதே இந்த எண்ணிக்கை குறைவிற்குக் காரணமாகக் கூறி வருகின்றது.
குறிப்பாக கொங்கு மண்டல பகுதிகளான கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு என்பது கடந்த சில வாரங்களாக இல்லை. இங்கு 5க்கும் மேற்பட்ட சோதனைக் கூடங்கள் இருக்கின்றது. அதையும் தாண்டி நாமக்கல், சேலம் மாவட்டங்களிலும் கரோனா எண்ணிக்கை ஒன்றிரண்டு என்று உள்ளது. இதனால் அங்கு சோதனை செய்வது பெரிய அளவில் குறைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே கரோனா பாதிப்பு என்பது பெரிய அளவில் இருந்து வருகின்றது. அங்கெல்லாம் முறையாகச் சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். மேலும் சோதனை செய்வற்கு என்று சில வழிமுறைகள் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அதன்படி கரோனா அறிகுறி உள்ளவர்கள், இந்த நோய் பாதித்தவர்களுடன் தொடர்பு, காண்டாக்ட் டிரேசிங்கில் கண்டுபிடிக்கப்படுபவர்களுக்கு மட்டுமே தற்போது வரை இந்தக் கரோனா சோதனை செய்யப்படுகின்றது. இந்த எண்ணிக்கை குறையும் போது டெஸ்ட் எண்ணிக்கையும் குறையும் தானே என்று எதிர்கேள்வி எழுப்புகிறார்கள் அதிகாரிகள்.