Skip to main content

எங்கே போனார்கள் தமிழர் உரிமை பாதுகாப்புப் போராளிகள்?

Published on 30/03/2018 | Edited on 30/03/2018

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தை காவிமயமாக்கும் முயற்சியில் அ.தி.மு.க. அரசாங்கத்தை மிரட்டிப் பணியவைத்திருக்கிறது பா.ஜ.க.

 

ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் அவருடைய அமைச்சர்களையும் ரெய்டு பயத்தைக் காட்டியும், ஆட்சிக்கலைப்பு அச்சுறுத்தலை பயன்படுத்தியும் மோடி தமிழக அரசை ஆட்டிப் படைக்கிறார்.

 

ADMK

 

பா.ஜ.க. அரசுக்கு எடப்பாடி அரசு அடிமைச் சேவகம் செய்வதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக பேசிவருகிறார். இதைப்பற்றியெல்லாம் முதல்வர் பழனிச்சாமி கண்டுகொள்வதாக இல்லை.

 

ஆட்சியில் நீடிப்பதையே நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களையெல்லாம் எதிர்க்காமல் வேடிக்கை பார்க்கிறது தமிழக அரசு.

 

ஜெயலலிதாவே எதிர்த்த உணவுப்பாதுகாப்புச் சட்டத்தையும், உதய் மின்சார பகிர்மான திட்டத்தையும், தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வியை நாசப்படுத்தும் நீட் தேர்வையும் அனுமதித்தது அதிமுக அரசு. இவற்றின் பலன் ரேசன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு, பருப்பு தட்டுப்பாடு, மண்ணெண்ணை தட்டுப்பாடு, சீனி தட்டுப்பாடு என்று தொடர்கிறது. நீட் தேர்வு இரண்டாம் ஆண்டாக இந்த ஆண்டும் தமிழக மாணவர்களை மருத்துவக் கல்விக்குள் நுழைவதைத் தடைசெய்யப் போகிறது.

 

இதுதவிர, தஞ்சை டெல்டா பிரதேசத்தை பாலைவனமாக்கும் தொடர் முயற்சியையும் பா.ஜ.க. அரசு பிடிவாதமாக கடைப்பிடிக்கிறது. மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் ஆகியவற்றை மக்களின் தொடர்போராட்டங்களை மீறி நிறைவேற்றத் துடிக்கிறது. இதையும் அ.தி.மு.க அரசு தடுக்க முடியாமல், கையாலாகாத அரசாக வேடிக்கை பார்க்கிறது.

 

இந்நிலையில்தான், காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கி, எரிவாயு எடுக்கவும், எண்ணெய் எடுக்கவுமான பகுதியாக மாற்றி, விவசாயத்தை அழித்தொழிக்க பா.ஜ.க. வேறுவகையில் திட்டமிடுகிறது. காவிரியில் தமிழகத்துக்கு உரிய உரிமைகளை காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியும், அந்த உரிமைகளை தமிழகத்துக்கு உத்தரவாதப்படுத்த மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மறுக்கிறது.
 

தமிழகத்துக்கு உரிய தண்ணீரை ஆண்டுதோறும் வழங்குவதை உறுதிப்படுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடுவிதித்திருந்தது.

 

அந்தக் கெடு மார்ச் 29ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் எந்த யோசனை சொன்னாலும் அதை இந்த அடிமை அ.தி.மு.க. அரசு ஏற்கவில்லை. கெடு முடியும்வரை பொறுத்திருப்போம் என்று எடப்பாடி சொன்னார்.

 

நாடாளுமன்றத்தில் அவையை நடத்தவிடாமல் முடக்குவோம் என்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஒரு தொடர் நாடகத்தை நடத்தினார்கள். முடிவாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக தற்கொலை செய்யக்கூட தயாராக இருக்கிறோம் என்று அ.தி.மு.க. எம்பி நவநீதிகிருஷ்ணன் மக்களவையிலேயே பொங்கினார். எல்லாமே நாடகம் என்பதும், இதையெல்லாம் மோடி அரசு விளையாட்டாகவே எடுத்துக்கொண்டது என்பதும் 29ஆம் தேதி தெரிந்துவிட்டது.

 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானவுடன் அதில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்கவேண்டும் என்ற சிந்தனை வராமல், கெடு முடிந்தபிறகு, அந்த வார்த்தைக்கு விளக்கம்கேட்க மத்திய அரசு முடிவு என்று செய்தி வருகிறது.

 

அதுபோல, கெடு முடிந்தபிறகு, தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக வழக்கு என்று அதிமுக அரசு நாடகம் நடத்துகிறது. அதிலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கா வேறு எந்தமாதிரி வழக்கு என்பதைக்கூட இன்னும் முடிவெடுக்கவில்லை என்கிறது எடப்பாடி அரசு.

 

2009 ஆம் ஆண்டு இலங்கையில் அந்த நாட்டு ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த சண்டையை தமிழக அரசு நிறுத்தவேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. அந்தப் போராட்டங்களுக்கு அன்றைய தி.மு.க. அரசு அனுமதி கொடுத்தது. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்வோம் என்ற முடிவை எடுத்தது.

 

அந்த முடிவுப்படி தி.மு.க. எம்.பி.க்கள் தங்கள் ராஜினாமாக் கடிதங்களை தி.மு.க. தலைவர் கலைஞரிடம் ஒப்படைத்தனர். ஆனால், அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தரப்பில் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

அதாவது, தி.மு.க. எம்பிக்கள் மட்டும் ராஜினாமா செய்யவேண்டும் என்பதுபோன்ற நிலையை அன்றைக்கு ஈழ ஆதரவுப் போராட்டக்காரர்கள் எடுத்தார்கள். கடைசியில் அந்த முயற்சி நின்றுபோனது.

 

ஆனால், இப்போது சொந்த தமிழ் மண்ணில் விவசாயிகளின் வாழ்க்கையை நாசப்படுத்தி, மாநிலத்தையே மயானமாக்கும் ஒரு சூழ்நிலையை பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க. அரசும் இணைந்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதைக் கண்டித்து வலிமையான போராட்டங்களோ, அரசுகளுக்கு எதிரான குரலோ ஒலிக்கவில்லை.

 

ADMK

 

அன்றைக்கு சாத்தியமே இல்லாத ஒரு காரியத்துக்காக தி.மு.க.வை தூற்றிய மீடியாக்கள் முழுவதும் இப்போது மத்திய பா.ஜ.க. அரசுக்கும் அ.தி.மு.க. அரசுக்கும் முட்டுக்கொடுக்கும் வகையிலான செய்திகளை உலவவிட்டு வருகின்றன.

 

கர்நாடகத்தில் பா.ஜ.க. அரசு ஜெயித்தால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்றும், அதனால் தமிழர்கள் அனைவரும் பா.ஜ.க. வெற்றிக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் எச்.ராஜா சொல்கிறார்.

 

ஒரே ஒரு எம்.பி.யை கொடுத்துவிட்டு காவிரிப் பிரச்சனையில் பா.ஜ.க.வை குறைசொல்ல தமிழர்களுக்கு உரிமையில்லை என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறுகிறார். தமிழகத்தில் இருந்துகொண்டே தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் வகையில் பேசுகிற இவர்களை தமிழர்கள் உரிமை பாதுகாப்பு என்ற போர்வையில் இயங்கும் அமைப்புகள் சும்மா விடலாமா?

 

மோடி தலைமையிலான அரசின் தமிழக விரோத போக்கிற்கு எதிராக இந்நேரம் பொங்கியிருக்க வேண்டாமா? வெளிநாடுகளில் தமிழர்கள் பாதிக்கப்படும்போதுதான் இங்கே போராட்டங்கள் வெடிக்குமோ என்று சாமானிய தமிழர்கள் கிண்டல் செய்கிற அளவுக்கு தமிழர்கள் சொரணையற்றவர்களாக மாறிப்போனார்களா என்பதுதான் தெரியவில்லை.

 

ஈழப்பிரச்சனையா தி.மு.க. மீதுதான் குற்றம்சாட்டவேண்டும். காவிரி பிரச்சனையா தி.மு.க. மீதுதான் குற்றம்சாட்டவேண்டும் என்பது என்னமாதிரி மனநிலை என்பதுதான் இப்போது ஆராய்ச்சிக்குரிய விஷயமாக மாறியிருக்கிறது.