மகாத்மா காந்தி வீரமரணம் அடைந்த ஜனவரி 30, தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. மக்களிடம் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், தொழுநோயால் இன்னலுக்கு ஆளாவோர் மத்தியில் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதுமே இந்நாள் கடைப்பிடிக்கப்படுவதன் நோக்கமாகும்.
அன்னை தெரசா இப்படிச் சொல்கிறார் –
“தொழுநோய் என்பது பெரிய வியாதி அல்ல. ஆனால், அது குறித்த எண்ணம்தான் மனிதர்களைத் தேவையில்லாமல் கவலைகொள்ள வைக்கிறது.”
மகாத்மா காந்தியின் மனிதநேயக் கருத்து இது –
“குஷ்டரோகி என்ற வார்த்தையே துர்நாற்றம் தருகிறது. நம்மிடையே மிக உயர்ந்தவர்கள் எப்படி நம்மில் ஒருவரோ, குஷ்டரோகிகளும் அப்படியேதான். அவர்களும் நம்மைச் சார்ந்தவர்களே. உயர்ந்த மனிதர்கள் என்று சொல்லப்படுபவர்கள், மற்றவர்களின் கவனத்துக்கு ஏங்கி நிற்பவர்கள் அல்ல. ஆனாலும், அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடியவர்கள். அதேநேரத்தில், சிறப்புடன் கவனிக்கப்பட வேண்டிய குஷ்டரோகிகளோ, மனமறிந்து ஒதுக்கப்படுகிறார்கள். இவ்வாறு நடந்துகொள்வது இதயமற்ற செயல் என்றே குறிப்பிடத் தோன்றுகிறது.”
ரத்தக்கண்ணீர் திரைப்படத்திலோ ‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது’ என, தொழுநோயாளி வேடம் ஏற்று நடித்த எம்.ஆர்.ராதாவுக்கு, சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமனைப் பாட வைத்தனர். அப்பாடலால் தவறான புரிதலே ஏற்பட்டது. இதற்குக் காரணம் – பாவம் செய்பவர்களுக்குத்தான் தொழுநோய் வரும் என்ற நம்பிக்கை மக்களிடம் காலம் காலமாக இருந்து வந்ததுதான். கி.மு. 600-ஆம் ஆண்டுக்கு முன்பே, இந்தியாவில் தொழுநோய் இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் தொழுநோய்க்கான சிகிச்சை என்பது ரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டது.
தொழுநோய் என்றால் என்னவென்று பார்ப்போம்!
மைக்ரோ பேக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியாவால் உண்டாகும் ஒரு தொற்று நோயே தொழுநோய் ஆகும். எம்.லெப்ரே, மிக மெதுவாகப் பெருகக்கூடியது. அதனால், தொற்று ஏற்பட்டு குறைந்தது ஐந்து ஆண்டுகள் கழித்தே நோயின் அறிகுறிகள் தென்படும். பொதுவாக இந்த நோய், தோல், நரம்பின் விளிம்புகள், மேல் மூச்சு மண்டலத்தின் சளி சவ்வுகள் மற்றும் கண்களையே அதிகம் பாதிக்கின்றன.
தொழுநோயானது, பாசிபெசில்லரி அல்லது மல்டி பெசிலரி என, நீள்நுண்ணியிரிகளின் தொகையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது. பாசிபெசில்லரி வகையில், அதிகபட்சமாக ஐந்து தோல்புண்கள் வரை காணப்படும். மல்டி பெசிலரி (வெளிறிய மஞ்சள் அல்லது சிவப்பு) வகையில், ஐந்துக்கும் மேல் கூடுதலாகத் தோல் புண்கள், முடிச்சுகள், காறைகள், தோல் தடிப்புகள் அல்லது தோல் ஊடுருவிகள் காணப்படும்.
1873-இல் டாக்டர் கெரார்ட் ஹேன்சன் என்பவர்தான் தொழுநோயை உண்டாக்கும் நோயுயிரியை முதலில் கண்டறிந்தார். அதனாலே, இது ஹேன்சன் நோய் என்றழைக்கப்படுகிறது. புறநரம்பு பகுதிகளிலும் மற்றும் சுவாசக்குழாயில் காணப்படும் கோழைகளில் ஏற்படும் குருமணி நோயே தொழுநோய் ஆகும். தோலில் காணப்படும் சீழ்தான், நோயின் முதல் அறிகுறியாகும். ஆரம்ப நிலையில் சிகிச்சை அளிக்காவிட்டால், நோயின் தீவிரம் அதிகரித்து, தோல், நரம்பு, விரல்கள் மற்றும் கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்திவிடும். பெரும்பாலும், நோய் எதிர்ப்பாற்றல் குன்றியவர்களையே இந்நோய் தாக்குகிறது.
முகம், மூக்கு சப்பையாவது, கண்ணிமைகளை மூட முடியாமல் போவது, கை மற்றும் விரல்கள் மடங்கிப் போவது, விரல்களின் எண்ணிக்கை குறைவது, மணிக்கட்டு துவண்டுவிடுவது, கால் விரல்கள் மடங்கிப்போவது, விரல்கள் மழுங்குவது, பாதம் துவண்டுவிடுவது, பாதத்தில் உணர்ச்சி இல்லாமல்போய், குழிப்புண்கள் ஏற்படுவதெல்லாம் தொழுநோயினால் ஏற்படும் பாதிப்புக்கள் ஆகும்.
தொழுநோயானது, குட்டம், குஷ்ட நோய், பெருவியாதி, மேகநீர், மேகநோய் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. தொழுநோய் குணப்படுத்தக் கூடியதே. முதற்கட்ட சிகிச்சையின் மூலமாக ஊனத்தைத் தவிர்க்கலாம். பிரேசில், இந்தோனேசியா மற்றும் இந்தியா ஆகியவை, அதிக நோய்ப்பளு உள்ள நாடுகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.
தொழுநோயின் அறிகுறிகள் தென்பட்டால், ஆஷா அல்லது ஏ.என்.எம். பணியாளரையோ அல்லது அருகில் உள்ள மருத்துவமனையையோ அணுக வேண்டும். இந்தியாவில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தொழுநோய்க்கு இலவச சிகிச்சை கிடைக்கிறது. தொழுநோயாளிகளுக்கு இச்சமூகம் ஆதரவு அளித்தால், அவர்களும் சந்தோஷமாக வாழமுடியும்.
தொழுநோயாளிகள் அதிகமாக இருப்பது இந்தியாவில்தான்!
இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் மத்திய நிதி ஆதாரத்தின் உதவியால் தொடங்கப்பட்டதே தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் ஆகும். இத்திட்டமானது, இந்திய அரசின் பொது சுகாதார சேவைகள் இயக்ககத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. 1955-இல் இந்திய அரசால் தொழுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் துவங்கப்பட்டது. WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்தபடி, பன்மருந்து சிகிச்சை 1982-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, இத்திட்டமானது, NLEP எனப்படும் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டமாக மாற்றப்பட்டது. என்னதான் தொழுநோய் ஒழிப்பில் இத்திட்டத்தின் மூலம் தீவிரம் காட்டினாலும், உலகத்திலுள்ள தொழுநோயாளிகளில் 57 சதவீதம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர். முற்றிலும் தொழுநோய் இல்லாத தேசத்தை உருவாக்குவது நம் கடமையாகும்.