Skip to main content

நான் வக்கீல் குமாஸ்தா, நான் டாக்டரை பார்க்க வந்தேன்... ஆசிரியர் நக்கீரன் கோபாலைக் காண தலைவர்கள் சொன்ன காரணங்கள்

Published on 11/10/2018 | Edited on 11/10/2018
nakkheeran gopal


 

கடந்த ஒன்பதாம் தேதி (09.10.2018) காலை ஆசிரியர் நக்கீரன் கோபால் சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுக்க எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள், என அனைவரும் ஒன்று திரண்டனர். மாலை நீதிபதி கோபிநாத் வழக்கில் முகாந்தரம் இல்லை எனக்கூறி விடுதலை செய்தார். ஆசிரியர் கைது செய்யப்பட்டது முதல் விடுதலை செய்ததுவரை பலரும் அவரை சென்று சந்தித்தனர்.  ஆசிரியரை சந்திக்க தாங்கள் என்னென்ன காரணங்கள் கூறினோம் என, விடுதலை நாளேட்டின் சார்பில் நடந்த பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும் - பாராட்டும் என்ற பாராட்டு விழாவில் நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டனர்.
 

ஆசிரியர் கைதுசெய்யப்பட்டவுடன் முதலில் எதிர்வினையாற்றிவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது கண்டனத்தை தெரிவித்ததுடன், சிந்தாரிப்பேட்டை காவல்நிலையத்திற்கு ஆசிரியரைக்காண சென்றார். அவரை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. அப்போது அவர் நான் இங்கு அரசியல் கட்சி தலைவராக வரவில்லை. ஒரு வழக்கறிஞராகதான் வந்துள்ளேன். என்னை அனுமதியுங்கள் எனக் கேட்டார். அப்போதும் அவரை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை இதனால் அவர் தர்ணாவில் ஈடுபட்டார். அவரை காவல்துறையினர் கைது செய்து மாலையில்தான் விடுவித்தனர்.
 

அடுத்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் ஆசிரியரை சந்திக்க மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவரையும் அனுமதிக்கவில்லை. அவர் உடனே நான் மருத்துவரை பார்க்க வந்தேன். என்னை அனுமதியுங்கள் எனக்கூறி சென்றுள்ளார். 
 

ஆசிரியரை எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தி ஹிந்து ஆசிரியர் ராம் ஆகியோர் சென்றனர். 
 

அப்போது நீதிமன்றத்திற்குள் தி இந்து ஆசிரியர் ராமை அனுமதித்தனர். திருமாவளவனை விசாரித்தபோது அவர் நான் அரசியல் கட்சி தலைவராக வரவில்லை. நானும் ஒரு வழக்கறிஞர்தான், அரசியல் சாசனம் படி எனக்கு உள்ளே செல்ல உரிமையுண்டு எனக்கூறியுள்ளார். உடனே அவரை அனுமதித்த காவல்துறையினர், முத்தரசனை நீங்கள் ஏன் உள்ளே செல்கிறீர்கள் எனக் கேட்டுள்ளனர் காவல்துறையினர். அதற்கு அவர் நான் இந்த வக்கீலுடைய (திருமாவளவனை குறிப்பிட்டு) குமாஸ்தா, நான் இல்லாமல் இவர் எங்கும் செல்லமாட்டார். அதனால் நானும் உள்ளே செல்ல வேண்டும். எனக்கூறியுள்ளார்.