போலியான பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் விதமாகவும், பொருளுக்கு சிறப்பு மதிப்புக்கூட்டும் விதமாகவும் இந்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை சார்பில் வழங்கப்படும் புவிசார் குறியீடு இந்த முறை கிடைத்திருப்பது மண் மணம் சார்ந்த, நஞ்சற்ற ரசாயனமற்ற கரிசல் மண் கடலை மிட்டாய்க்காக.!!!
“புள்ளைக வந்துருக்கு.! ஏதாவது இனிப்புக் கொடுக்கலாம்னு நினைக்கின்றேன்." என தான் கொண்டு வந்த பனைவெல்லத்துடன் நிலக்கடலைப் பருப்பை உடைத்து பனை ஓலைக் கொட்டானில் கொட்டிக் கிளறிக் கொறித்த வேளையில் உருவானது தான் இந்த கடலை மிட்டாய் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
1920ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பொன்னம்பல நாடாரால் தொழிற் முறையாக அறியப்பட்ட இந்தக் கடலை மிட்டாய் தொழில் இன்று 200க்கும் அதிகமான தொழிற்கூடங்களாக பெருகி 5000 தொழிலாளர்களுடன் பல்கி பெருகி தனி அடையாளமாகியுள்ளது, .எனினும், மண்ணில் விளையும் பொருட்களை கொண்டே தயாரிக்கப்படும் இனிப்பு தின்பண்டமான இந்த கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறீயீடு இருந்தால் நன்றாக இருக்குமே.? என்ற கோரிக்கைகள் எழுந்தன.
இதனால் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வேண்டுமென கடந்த 3.7.2014 கோவில்பட்டி சப்- கலெக்டராக இருந்த விஜய கார்த்திகேயன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் அவ்விண்ணப்பம் தேக்க நிலை அடையவே, சில மாற்றங்களை செய்து கோவில்பட்டி வட்டார கடலைமிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் நலச்சங்கம் என்ற பெயரில் மீண்டும் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இந்நிலையில், 100 வருடங்களுக்கு பின்பு 30-04-2020 அன்று தனித்துவமிக்க புவிசார் குறீயீட்டைப் பெற்றிருக்கின்றது கரிசல் மண்ணின் மாசற்ற இனிப்பான கடலை மிட்டாய்..
“தாமிரபரணி தண்ணீர், மண்டை வெல்லம், கரிசல் மண்ணில் விளையும் நிலக்கடலை, மண்ணின் ஈரப்பதம் இவைதான் கோவில்பட்டி கடலை மிட்டாய்.! இந்த கடலை மிட்டாய்க்கென வரையறுக்கப்பட்ட பகுதிகளிலிருந்துதான் நிலக்கடைலையையும், வெல்லத்தையும் கொள்முதல் செய்கின்றார்கள்.
மாறாக புதிய இடத்திலிருந்து வரும் எந்த பொருளையும் ஏற்பதில்லை இவர்கள். கடலை மிட்டாய்க்கென தேவைப்படும் முதல்ரக வேர்க்கடலை பருப்பை இவர்கள் கொள்முதல் செய்வது கரிசல் மண் பூமியான கோவில்பட்டி மற்றும் அதனின் சுற்று வட்டாரப் பகுதிகளான அருப்புக்கோட்டை, சங்கரன்கோவில் மற்றும் கழுகுமலை ஆகிய பகுதிகளில் விளைவிக்கப்படும் கடலைகளையே.! மிட்டாய்க்காக தேர்ந்தெடுக்கப்படும் உயர்தர வேர்க்கடலைகள் முதலில் தோல் பகுதி எடுக்கப்பட்டு, இரண்டாக உடைக்கப்பட்டு அதன் பின் மீண்டும் சுத்தம் செய்யப்பட்டு, அதனின் பொக்குகளை நீக்கிய பின்னரே கடலை மிட்டாய்க்கு தயாராகின்றது.
இதனுடன் சேரும் இனிப்பு முதல் தரமான மண்டை வெல்லமே.! மாறாக எக்காலத்திலும் அச்சு வெல்லத்தை சேர்ப்பதில்லை என்கிறார்கள். இந்த இரண்டுடன் சேரும் தாமிரபரணி தண்ணீரும், கோவில்பட்டி காற்றின் ஈரப்பதமுமே இதனின் சுவைக்கும், தரத்திற்கும் அடையாளம். இதனாலேயே கோவில்பட்டி கடலைமிட்டாய் சுவைக்கு உலக அளவில் விற்பனை சந்தை உள்ளது. தற்பொழுது கிடைத்துள்ள புவிசார் குறியீட்டால் தொழில் வளம் பெருகி எங்களை மென்மேலும் உயர்த்தும்." என்கின்றனர் இதனின் தயாரிப்பாளர்கள்.