Skip to main content

சீனாவில் இருந்து வந்த 117 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள்..? தமிழக இளைஞர்கள் அடுத்த இலக்கு..?

Published on 21/06/2020 | Edited on 21/06/2020

 

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கடற்கரையில் சில தினங்களுக்கு முன் கடலில் மிதந்து வந்த டிரம் கரை ஒதுங்கியது. அதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் எண்ணை பீப்பாய் என்று நினைத்து திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதனுள் சைனீஸ் மற்றும் ஆங்கிலத்தில் ரீபைன்ட் சைனீஸ் டீ என அச்சிடப்பட்ட 78 பொட்டலங்கள் அதனுள் இருந்தன. உடனே போலீசுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த கடலோர காவல் படை காவல் கண்காணிப்பாளர் சின்னசாமி, மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் வடிவேல் முருகன் மற்றும் கடலோர காவல் படை  ஆய்வாளர் முனியசாமி அந்த மர்ம பொருளை கைபற்றி முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர்.

அந்த பண்டலின் கவரின் மேல், ரீபைன்ட் சைனீஸ் டீ என சைனீஸிலும், ஆங்கிலத்திலும் அச்சடிக்கப்பட்டு இருந்தது. ஒரு பண்டல் பொருளை பிரித்து போலீசார் சோதனை செய்தபோது போதை பொருட்கள் ஆக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

கடலோர காவல் படை போலீசாரால் கைபற்றப்பட்ட 78 பொட்டலங்களை பரிசோதனைக்காக, சென்னையில் உள்ள ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்தபின் அது, ஹெராயின் எனப்படும் போதை பொருள் ஆன ‘மெத்தாம்பிடைமின்’ என்ற உயர் வகை போதை பொருள் என்று தெரிய வந்தது. இந்த போதை பொருளை தண்ணீரில் கலந்து ஊசி மூலமாகவும் உடம்பில் செலுத்தி ஒரு வகை போதை ஏற்றி கொள்ளலாம் என்றும், வாய் வழியாக தின்று போதை ஏற்றி கொள்ளலாம் என்றும், பவுடராக்கி மூக்கு வழியாக சுவாசித்தாலும் போதை ஏறும் என்றும் கூறப்படுகிறது. 

கைபற்றப்பட்ட 78 பொட்டங்களின் மொத்தம் எடை 78 கிலோ ஆகும், தற்போதைய இதன் இந்திய மதிப்பு ரூ.117 கோடி ரூபாய் என்று, காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும் அடுத்தகட்ட விசாரணைக்காக, கொக்கிலமேடு மீனவர் பகுதிக்கு சென்ற, மாமல்லபுரம் உதவி காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் போலீசார் மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது மீனவர்கள் அவரிடம், டீசல் அல்லது பெட்ரோல் நிரப்பப்பட்ட டிரம் என நினைத்து அதனை உடைத்து பார்த்ததாக தெரிவித்தனர். பின்னர் அவர்களிடம்  உதவி கண்காணிப்பாளர் கடலில் ஏதாவது மர்ம பொருள் மிதந்து வந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தவிற, போலீஸ்சார் வருவதற்குள் அதனை திறந்து பார்க்கக்கூடாது, ஒருவேளை வெடிகுண்டாக இருந்திருந்தால் என்ன ஆயிருக்கும் என்று அறிவுரை வழங்கினார். பின்னர் கடற்கரை பகுதி முழுவதும் நடந்து சென்று சந்தேக நபர்கள் யாராவது படகில்வந்து 117 கோடி மதிப்புள்ள இந்த போதை பொருட்களை வீசிவிட்டு சென்ற காரணம் பற்றி சந்தேக நபர்கள் யாராவது நடமாடுகிறர்களா அல்லது சந்தேக நபர்கள் யாராவது மர்ம படகில் கடலில் உலாவுகின்றனரா?  என ஆய்வு செய்தார்.

தற்போதுள்ள சூழலில் போதை பொட்டலத்தில் சீன எழுத்து காணப்பட்டதால் இது சர்வதேச போதைபொருள் கடத்தல்காரர்களின் வேலையாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். போதை பொருள் கைப்பற்றப்பட்ட பகுதியான ஈ.சி.ஆர். சாலையில் அடிக்கடி உயர்வகை போதை பார்ட்டி நடப்பது நமது நக்கீரனில் பலமுறை ஆதாரத்துடன் செய்தியாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு நாட்டின் மீது போர் செய்து நாசம் செய்யும்போது ஏற்படும் விளைவைவிட, இதுபோன்ற போதை கலாச்சாரத்தை பரப்புவதால் போரைவிட மோசமான விளைவை ஏற்படும். இந்த உயர் வகை போதை பொருட்களின் கலாச்சாரம் தற்போது சென்னை சுற்றுவட்டாரத்தில் பரவலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆக காவல்துறையும், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் வடிவேல்முருகனை சந்திக்க நேரில் சென்றபோது "அய்யா கரோனா ஊரடங்கு வாகன சோதனை முடித்துவிட்டு ரெஸ்ட்டில் உள்ளார். நாளைக்கு வாங்க என்று ஸ்டேசன் முன் இருந்த காவலர் தடுத்து பதில் கூறினர்.

இது தொடர்பாக மாமல்லபுரம் டி.எஸ்.பி சுந்தரவதனம் நம்மிடம், சில மாதங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில், அந்த பொருள் கரை ஒதுக்கியிருக்கிறது ஆனால் யாரும் பார்க்காமல் இருந்துள்ளனர். நேற்று யாரும் கடலுக்கு போகவில்லை என்பதால் மீனவர்கள் கண்ணில் பட்டுள்ளது. அதனை பார்த்தும் அவர்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணை நடத்தி வருகிறோம். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். இதேபோல் சீன மொழியில் எழுதப்பட்ட போதை பொருள் பாக்கெட், ஆஸ்திரேலியாவின் கடற்கரை பகுதியில் ஒதுங்கியதும் குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்