கடந்த 2014 ஆம் ஆண்டு வடஇந்தியா முழுவதையும் வசமாக்கிய மோடி அலை இந்தியாவின் தென்கோடியான தமிழகம் மற்றும் கேரளாவை மட்டும் அசைக்க முடியவில்லை. 5 ஆண்டுகள் கழித்தும் பாஜக -விற்கு அதே நிலை தான் இப்போதும் நீடிக்கிறது தென்னகத்தில்.
தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு காரணிகளாக திராவிடம், மதசார்பின்மை என பல கூறப்பட்டாலும், இந்துத்துவ கொள்கைகள் போற்றப்படும் கேரளாவிலும் இதே நிலை நீடிப்பது தான் ஆச்சரியமானது. கேரளாவை பொறுத்த வரை அங்கு இரண்டே கூட்டணிகள் தான் ஆள்வது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, மற்றொன்று இடதுசாரி கட்சிகளின் கூட்டணியான இடதுசாரி ஜனநாயக முன்னணி. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ் கட்சியுடன் சேர்த்து ஆறு கட்சிகளும், இடதுசாரி ஜனநாயக முன்னணியில் 12 சிறிய கட்சிகளும் உள்ளன.
கேரளாவில் பாஜக காலூன்ற முடியாமல் இருப்பதற்கு இந்த இரண்டு கூட்டணிகளுமே ஒரு வகையில் காரணம். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் பாஜக சேர முடியாத அதே நேரத்தில் மற்றொரு வலிமையான கூட்டணியாக உள்ள இடதுசாரி கூட்டணியும் பாஜகவின் கொள்கைகளை தொடர்ந்து எதிர்த்து வருவதால் அவர்களுடன் பாஜக இணைய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சுதந்திர காலம் முதல் கம்யூனிஸ்டையும், காங்கிரஸ் கட்சியையும் ஆட்சியில் அமர்த்திய கேரள மாநிலம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினரையும் கூட முதல்வராக அமர்த்தியுள்ளது. ஆனால் இதுநாள் வரை பாஜக அங்கு சொல்லிக்கொள்ளுமளவுக்கு வெற்றிகளை பெற்றதில்லை.
ஒரே அடிப்படை கொள்கைகளையும், அரசியல் பார்வையையும் கொண்ட கட்சிகளால் கேரளா நிரம்பி இருப்பதே பாஜக வின் இத்தனை ஆண்டுகால தோல்விகளுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இரண்டு கூட்டணிகளிலும் 16 கட்சிகள் இருந்தாலும் அவை அனைத்தின் அடிப்படையும் மதச்சார்பின்மையையும், பொதுவுடையுமாகவே இருப்பதால் பாஜக எப்போது கேரளா மக்களுக்கு இவற்றிலிருந்து அந்நியமாகவே தெரிகிறது என்ற கருத்தும் நிலவி வருகிறது.
ஒருபுறம் சரியான கூட்டணி இல்லாமல் பாஜக தவித்து வந்தாலும் மறுபுறம் அதன் வளர்ச்சியும் கேரளாவில் மெதுவாக நடந்தே வருகிறது. 2014 மக்களவை தேர்தலில் 10 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக இந்த முறை 12.9 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பாஜக -விற்கு கிடைத்த முகமான மோடியை போல கேரளா பாஜக -விற்கு ஓரு முகம் கிடைத்தால் அங்கும் நிச்சயம் பாஜக வளர்ச்சி பெறும் என நம்புகின்றனர் அம்மாநில பாஜக தொண்டர்கள்.