Skip to main content

"24 எல்லாம் வேண்டாம் 4 சீட்டையாவது ஜெயிக்க சொல்லுங்க பாப்போம்...பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா..." - கே.சி. பழனிசாமி

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

 

ப

 

சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது சந்திக்காதது பற்றிப் பேசினார். இருவரும் வேறு வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள்; தேவைப்பட்டால் சந்திப்போம், வரும் போதெல்லாம் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் வியப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி அவர்களிடம் கேள்வியை முன்வைத்தோம். 

 

நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு, " அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் இருக்கும் வரையில் அந்தக் கட்சிக்குக் கேடுதான். இவர்கள் கட்சியிலிருந்து என்றைக்கு வெளியேறுகிறார்களோ அன்றுதான் கட்சிக்கும் தொண்டர்களுக்கும் நல்லது நடக்கும். இவர்கள் பதவி சண்டையில் கட்சியை அடகு வைத்துவிட்டார்கள். அதை மீட்க வேண்டும் என்று ஒவ்வொரு தொண்டனும் விரும்புகிறான். இவர்கள் பதவி வேண்டும் கட்சி வேண்டும் என்று அடித்துக்கொள்வதைத் தவிர கட்சிக்காக இவர்கள் செய்த ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைத்தான் செய்தேன் என்று இவர்களால் கூற இயலுமா என்றால் நிச்சயம் முடியாது. ஏனென்றால் எதையும் இவர்கள் செய்யவில்லை. 

 

தமிழகத்தில் பாஜகவால் எந்தக் காலத்திலும் ஆட்சி அமைக்க முடியாது. அடுத்த தேர்தல் அல்ல, இன்னும் ஐந்து தேர்தல் வந்தாலும் அவர்களால் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது. இது அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். அடுத்த தேர்தலில் தமிழக பாஜக 24 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று அவர்கள் தலைவர் கூறியதாகக் கேட்கிறீர்கள். கனவிலும் இது சாத்தியப்படாது. அப்படி ஜெயிக்காவிட்டால் அமித்ஷா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வாரா? இல்லை அரசியலிலிருந்து விலகுவாரா? சும்மா கட்சியினரை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக இவ்வாறு வாயில் வந்ததை எல்லாம் பேசியாக வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது.

 

அதனால் தமிழகத்தில் இது நடக்காது, முடியாது என்று தெரிந்து வாயிக்கு வேலை என்ன என்று நினைத்து தொடர்ந்து உளறிக்கொண்டு இருக்கிறார்கள். கனவில் கூட இந்த வெற்றியை அவர்கள் பெற முடியாது. ஆகவே அவர்கள் பேசுவதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். திமுக எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்கிறார்கள். அதிமுக வெற்றி பெறுவோம் என்று கூறுகிறார்களே அந்தத் தகுதி பாஜகவுக்கு இல்லையா என்று பதிலுக்கு நீங்கள் கேட்கலாம். இவர்கள் இருபத்தி நான்கு அல்ல, வெறும் நான்கு சீட்டுக்களை ஜெயிக்க சொல்லுங்க பாப்போம். சும்மா எதார்த்தம் தெரியாமல் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.