கலைஞரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் செய்த சாதனைகள் குறித்தும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் கவிஞர் சல்மா தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
அவர் பேசியதாவது, "தான் ஒரு அரசியல்வாதி என்பதையும் தாண்டி கலைஞர் ஒரு நல்ல எழுத்தாளராகவும் இலக்கியவாதியாகவும் இருந்தார். அரசியல் காரணமாக பல்வேறு பணிச்சுமை இருந்தாலும் இதற்கான நேரத்தை ஒதுக்கி தன்னுடைய படிப்பு திறனையும் செயல்பாடுகளையும் கொண்டு திரைப்படங்கள் வாயிலாக தான் ஏற்றிருக்கும் கருத்துகளையும் சித்தாந்தங்களையும் தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களிடம் கொண்டு சென்றவர். தன்னுடைய இலக்கியத்தை படைப்புகள் மூலம் கொண்டு சென்று தான் ஒரு சிறந்த இலக்கியவாதி என்றும் நிரூபித்தவர்.
மேலும், அரசியல் மாற்றத்தை உருவாக்கும் விதமாக பெண்களுக்குச் சொத்துரிமை, திருநங்கைகளுக்கு நல வாரியம் அமைத்தல் போன்ற செயல்களைச் செய்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர். சமத்துவபுரம் போன்ற திட்டங்களை உருவாக்கி மக்களிடையே சாதி மத வேறுபாடுகளைப் போக்கியது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டைத் தாண்டி எந்த மாநிலத்திலும் கொண்டு வர இயலாத இத்திட்டத்தை முதல் முதலில் கலைஞர் தான் கொண்டு வந்தார். இது போன்ற செயல்களால் தமிழ்நாடு தனித்துவமான மாநிலமாக இருக்கிறது.
தன்னுடைய கனவுத் திட்டமான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டமும், தமிழை வழக்காடு மொழியாக மாற்ற வேண்டும் என்ற திட்டமும், சேது சமுத்திர திட்டத்தையும் செயல்படுத்த முடியவில்லை என்ற எண்ணம் கலைஞரின் மனதில் என்றும் வருத்தத்தைத் தந்திருக்கும். மேலும், தமிழ்நாட்டுடைய வளர்ச்சிக்கு முக்கியப் பங்காக இந்த சேது சமுத்திர திட்டம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு தொடங்கிய நேரத்தில் ராமேஸ்வரத்தில் ராமர் பாலம் இருப்பதாக பொய்யான வதந்தியைப் பரப்பி அந்த திட்டத்தை பாதியில் நிறுத்தியது தான் கலைஞருக்கு நெஞ்சில் தைத்த முள்ளாக இருந்திருக்கும்.
யாரும் எதிர்பார்க்காத சூழலில்தான் ஐ.டி துறையை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கினார். அப்படிப்பட்டவருக்கு இந்த நவீன தொழில்நுட்பம் தற்போது கிடைத்திருந்தால், தன்னுடைய கொள்கைகளையும் செயல்பாடுகளையும் கொண்டு செல்ல மிகப்பெரிய அளவில் இந்த சமூக ஊடகத்தை பயன்படுத்தியிருப்பார். ஏனென்றால், இன்றைய சூழ்நிலையில் அவதூறைப் பரப்புவதற்கும் நாகரீகமற்ற கருத்துகளைப் பகிர்வதற்கும் தான் சமூக ஊடகத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால்,கலைஞர் சமூக ஊடகத்தை ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்வதற்கு பயன்படுத்தியிருப்பார். அவரைப் பின்பற்றி பலரும் அவரைப் போன்ற நாகரீகமான கருத்துகளைப் பகிர்வதற்கு கலைஞர் முக்கியப் பங்காக இருந்திருப்பார். தன்னுடைய கருத்துகள் மூலமாகவோ சமூகநீதி கொள்கைகளைப் பகிர்வதன் மூலமாகவோ தற்போது இருக்கின்ற வெறுப்பரசியலுக்குத் தக்க பதில் அளித்திருப்பார்" என்று கூறினார்.