கர்நாடக சட்டப் பேரவைக்கான தேர்தல் கடந்த 10 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தேர்தலின் போது சில இடங்களில் பதற்றமான சூழல் நிலவினாலும், பிரச்சனை எதுவுமின்றி வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. பதிவான வாக்குகள் மே 13 ஆம் தேதி எண்ணப்பட்ட நிலையில், தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வந்தது. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை நிலவிய நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்த பா.ஜ.க. திட்டமிட்டது. ஆனால், சற்று நேரத்திலேயே காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது உறுதியான நிலையில், பா.ஜ.க. தனது தோல்வியை ஒப்புக்கொண்டது.
கர்நாடகா களம் சொன்ன செய்தி என்ன?
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 42.9% வாக்குகள் பெற்று 135 இடங்களில் வெற்றி பெற்றது; பா.ஜ.க. 36% வாக்குகள் பெற்று 66 இடங்களில் வெற்றி பெற்றது; ம.ஜ.த. 13.3% வாக்குகள் பெற்று 19 இடங்களில் வெற்றி பெற்றது; சுயேச்சைகள் 2 இடத்திலும், கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா 1 இடத்திலும், சர்வோதய கர்நாடக பக்ஷா 1 இடத்திலும் வெற்றி பெற்றன.
தொடர் தோல்விகள் மூலம் பலம் இழந்து இருந்த காங்கிரஸ், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் மூலம் கட்சியை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றது. அந்த முயற்சி, இத்தேர்தலில் மிகப்பெரிய அளவில் கைகொடுத்துள்ளது. அதானி விவகாரம், ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் இவையெல்லாம் களத்தில் எதிரொலிப்பது ஒரு பக்கம் என்றாலும், பா.ஜ.க.வின் தோல்விக்கான காரணம் குறித்து அறிய அவர்களின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டி இருக்கிறது. கர்நாடக வரலாற்றில் இதுவரை தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சியமைத்தது கிடையாது. குமாரசாமி ஆட்சி கவிழ்ந்த பிறகு ஆட்சியமைத்த பா.ஜ.க., தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்தது. ஒப்பந்ததாரர்களிடம் 40% கமிஷன் பெறப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து உள்ளிட்டவை அங்கு பா.ஜ.க.விற்கு பெரும் பின்னடைவைத் தந்தது.
தேசியக் கட்சிகள் போட்ட தேர்தல் வியூகம்!
கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது போல், ஆட்சியைத் தக்கவைக்க வேண்டிய கட்டாயம் பா.ஜ.க.விற்கு இருந்தது. ஆனால், அங்கு காங்கிரஸ் வகுத்த வியூகங்களால், பா.ஜ.க.வின் திட்டங்கள் எடுபடவில்லை; கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைப்பயணம் கர்நாடகத்திற்குள் நுழைந்தபோது பெரும் வரவேற்பு கிடைத்தது.
அதற்காக மிகத் தீவிரமாகப் பணியாற்றியவர் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார். டி.கே.எஸ்ஸின் களப்பணியோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்திலும், தேர்தல் வியூக வகுப்பாளரான சுனில் கனுகோலுவும் பா.ஜ.க. மீதான அதிருப்தியை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்தனர். பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்கள், பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட பலர் கர்நாடகத்தில் சுழன்று கொண்டிருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்திற்காக முகாமிட்டிருந்தார். ஆனால் அவை எதுவும் பா.ஜ.க.விற்கு கைகொடுக்கவில்லை.
தென்னிந்தியாவின் நுழைவுவாயில் கர்நாடகா!
இந்தியா முழுக்க 10 இடங்களில் நேரடியாகவும், 5 இடங்களில் கூட்டணி ஆட்சியும் நடத்தி வரும் பா.ஜ.க., தென்னிந்தியாவில் அவர்களுக்கு இருந்த ஒரே பிடிமானமான கர்நாடகாவையும் நழுவவிட்டுள்ளது. "வெற்றிக்கான இடங்களை எங்களால் பெற முடியவில்லை; முடிவுகள் முழுவதுமாக வந்ததும், எங்கே நாங்கள் வாய்ப்பை தவறவிட்டோம் என அலசுவோம்" என பசவராஜ் பொம்மை பேட்டியளித்தார். "கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்; இந்த தேர்தல் முடிவு நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது" என எடியூரப்பா உறுதி தெரிவித்தார். பா.ஜ.க. தோல்விக்கான காரணத்தை ஆராயும் அதே வேளையில், காங்கிரஸ், தி.மு.க., திர்ணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த வெற்றியை 2024 மக்களவைத் தேர்தலிலும் பெற முழு முனைப்போடு களம் இறங்கியுள்ளன. கர்நாடகா வெற்றி குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்" என்றார்.
"இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அந்தந்த மாநிலத்தில் வலுவாக இருக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்; மாநிலக் கட்சிகள் வலுவாக இருக்கும் இடங்களில் பா.ஜ.க.வால் வெல்ல முடியாது; காங்கிரஸ் வலுவாக இருக்கும் தொகுதிகளில் நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறோம்; கர்நாடகாவில் காங்கிரஸை நான் ஆதரிக்கிறேன். ஆனால், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் எனக்கு எதிராக இருக்கக்கூடாது. காங்கிரஸ் எங்கு வலுவாக உள்ளதோ அங்கு போராட வேண்டும். நாங்கள் ஆதரவளிப்போம். கூடவே, காங்கிரஸும் அதே ஆதரவை மற்ற கட்சிகளுக்கும் கொடுக்க வேண்டும். சில நல்லது நடக்க வேண்டும் என்றால் சில இடங்களில் விட்டுக்கொடுத்துத்தான் போக வேண்டும்" என்று அறிவுரையோடு அணைப்பு காட்டினார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. பல்வேறு கட்சித் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் கரத்தை மேலும் பலப்படுத்த, அவர்களோடு கரம் கோர்த்து வருகின்றனர்.
கர்நாடக வெற்றி மூலம் 2024 வெற்றி சாத்தியமா?
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்தும் முனைப்போடு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், அது சாத்தியமாகுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. கூட்டணிக் கட்சிகளை வழிநடத்தும் இடத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் குரலுக்கு இந்த வெற்றி வலுசேர்த்து இருக்கிறது என்றாலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறியதையும் அக்கட்சி கவனத்தில் கொள்ள வேண்டும் எனும் கருத்தும் எழுந்துள்ளது.
கர்நாடகா தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எனச் சொல்லப்பட்டு வருகிறது. அப்படியிருக்கும்போது, பாஜக இந்தத் தேர்தலில் போராடித்தான் தோற்றுள்ளது. குறிப்பாக பாஜக - காங்கிரஸுக்கு இடையே 6.9% வாக்குகள் மட்டுமே வித்தியாம். தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்கள் கழித்து பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு அம்மாநில முதல்வரை காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது. இதனை பாஜக கடுமையாக விமர்சித்தது. காங்கிரஸ் உட்கட்சியில் நிலவும் பூசல்களை சரிசெய்து, ஜனநாயகத்திற்கு ஆதரவான குரல்களுடன் ஒன்றுபட்டால் மட்டுமே 2024ல் தேசத்தை கைப்பற்றும் எண்ணம் சாத்தியமாகும்.
- தி.மு. அபுதாகிர்