நாகர்கோவில் காசி அதிர்ச்சியிலிருந்தே அம்மாவட்டம் மீளாத நிலையில், கணவனைப் பிரிந்து வாழும் பெண்களைக் குறிவைத்து அவர்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி தனிமையில் இருந்து அதை வீடியோ எடுத்து மிரட்டி, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் குமரியைச் சேர்ந்த ராஜீவ் எனும் காமாந்தகன்.
கடந்த டிச. 31-ஆம் தேதி குழித்துறையை சேர்ந்த மஞ்சுளா, குளச்சலை சேர்ந்த சுதா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) என்ற இரண்டு பெண்கள் அடுத்தடுத்து தக்கலை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் "மேல் புறத்தைச் சேர்ந்த ராஜீவ் என்பவன் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அனுபவித்த தோடு, தனிமையில் இருக்கும்போது எடுத்த வீடியோக்களை காட்டி, தன்னைவிட்டு பிரிந்து செல்லுங்கள், இல்லையென்றால் சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன்'' என மிரட்டிவருவதாக புகார் கொடுத்தனர்.
இதுகுறித்து குழித்துறை மஞ்சுளா கூறும்போது, “2014-ல் ஜெஸ்டின் என்பவருடன் எனக்கு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடால் 2018-ல் அவரைப் பிரிந்து வயதான ஒரு தம்பதியினரைக் கவனித்துக்கொண்டு, அந்த வீட்டிலே தனியாக வசித்துவந்தேன். இந்த நிலையில் 2021-ல் எனது செல்போனுக்கு மூன்றுமுறை மிஸ்டுகால் வந்தது. அந்த நம்பருக்கு நான் திரும்ப தொடர்புகொண்டபோது ராஜீவ்னு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர், வேற யாருக்கோ தொடர்பு கொண்டதாகவும், தவறாக இந்த எண்ணுக்கு வந்துவிட்டது எனவும் கூறி பேச்சைத் தொடர்ந்தார். "உங்கள் குரல் இனிமையா இருக்கே?... பாட்டு டீச்சரா?' என கேட்டு என்னையும் என் குடும்பச் சூழலையும் பற்றி தெரிந்துகொண்டு ஆறுதலாகப் பேசினார்.
பிறகு அடிக்கடி தொடர்புகொண்ட ராஜீவ், ரியல் எஸ்டேட் நடத்திவருவதாகவும், என்னைப் போன்ற ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பதே லட்சியம் எனக்கூறி வலையில் வீழ்த்தினார். அதன்பின் அடிக்கடி தனிமையில் சந்தித்தோம். அப்படி தனிமையில் இருக்கும்போது வீடியோ எடுப்பதைத் தடுத்தேன். "நான்தானே உன்னை கல்யாணம் செய்யப்போறேன். என் மனைவியின் இந்த அழகான உடம்பை நான் எப்பவும் பார்த்து ரசிக்கணும். அதுக்குத்தான் வீடியோ' என பேசி, நாங்கள் அந்தரங்கமாக இருக்கும்போதெல்லாம் வீடியோவும் போட்டோவுமாக எடுத்து வைத்திருக்கிறார். அதுபோக என்கிட்ட இருந்த 15 பவுன் நகையையும் வாங்கிட்டார். இந்த நிலையில், “வீட்டில் திருமணம் செய்ய வற்புறுத்துவதாகவும், ஆனால் உன்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். வீட்டிலிருந்து என்னைத் துரத்திவிடுவார்கள். அதனால் அவர்கள் விருப்பத்துக்கு ஒரு பெண்ணை கல்யாணம் செஞ்சிட்டு, உன்கூட குடும்பம் நடத்துவேன். கொஞ்ச நாள் பிரிஞ்சிருப்போம்” என்றார். அதற்கு சம்மதிக்காததால்தான் அந்த வீடியோக்களை வெளியிட்டுடுவேன்னு மிரட்டி என்னை துரத்தப் பார்க்கிறார்.
இந்த நிலையில் ராஜீவைப் பற்றி பல தகவல்கள் என் காதுக்கு வரத் தொடங்கியது. என் தூரத்து உறவுக்கார பெண்ணுடனும் இதேபோல் முகநூலில் இருந்து நம்பர் எடுத்து அவளை தொடர்புகொண்டு, இரண்டாம் திருமணம் செய்வதாகக் கூறி, நெருக்கமாக இருந்து கழற்றிவிட்டுள்ளார். இப்படி பல பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றியிருக்கிறார்” என்றார்.
சுதாவோ, “எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து அண்ணன் வீட்டில் வசித்து வருகிறேன். ராஜீவ் என்னுடைய முகநூலிலிருந்து செல்போன் நம்பரை எடுத்து மிஸ்டுகால் கொடுத்துப் பழக்கமானார். ஆரம்பத்தில் நண்பராகப் பழகி, அதன்பிறகு அவருடைய ஆறுதலான பேச்சில் மயங்கி அவரிடம் என்னை இழந்தேன்.
என்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாகவும், குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக்கொள்வதாகவும் உறுதி கூறினார். நாங்கள் தனிமையில் இருக்கும்போது வீடியோ, போட்டோக்கள் எடுத்து வந்தார். என் கையிலிருந்த பணம், நகை எல்லாம் அவரிடம் கொடுத்துவிட்டேன். இந்த நிலையில் மெல்ல... மெல்ல என்னுடைய தொடர்பைக் குறைத்ததால் சந்தேகமடைந்து அவரின் செல்போனைப் பார்த்தபோது பல பெண்களிடம் அவர் தனிமையில் இருக்கும் வீடியோ, புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். ஒவ்வொரு பெண்ணின் பெயரில் ஃபோல்டர் போட்டு, அதில் அவர்களின் வீடியோக்களை பதிவுசெய்து வைத்திருந்தார்.
நான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து அவரிடம் கேட்டேன். “கணவரைப் பிரிந்து வாழும் பெண்களிடம் இந்த மாதிரி தொடர்பை வைத்துக்கொள்வதில் அதீத பிரியம். உங்களை மாதிரி பெண்கள்தான் ஈசியா விழவும் செய்வாங்க. அவர்களிடம் சொகுசா செலவு செய்வதற்கும் கறக்கவும் முடியும். ஏதாவது வம்பு பண்ணினா, உன் அந்தரங்க வீடியோவை உலகமே பார்க்கும்”னு மிரட்டினார்.
இதுகுறித்து விசாரணை நடத்திவரும் தனிப் படை போலீசார், “அந்த இரண்டு பெண்களும் கொடுத்த தகவலின் அடிப்படையில் விசாரித்து வருகிறோம். காசியால் ஏமாற்றப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுத்ததையடுத்து அவர்களின் பெயர்களும் ரகசியமாக வைக்கப்பட்டது. அதேபோல் ராஜீவால் ஏமாற்றப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுக்கவேண்டும்” என்றனர்.
இதுகுறித்து ராஜீவிடம் பேச நாம் முயற்சித்தபோது.... அவரின் செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆஃப்பாக இருந்தது.