திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பத்து இடங்களுக்கான வெற்றி வேட்பாளர்களை தேர்வு செய்வதில் டெல்லியில் இதுவரை 3 கட்ட ஆலோசனைகள் நடந்து முடிந்துள்ளன. காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டாலும் அவைகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் போடப்படாமல் இருக்கிறது.
இந்த நிலையில், பத்து தொகுதிகளை திமுக ஒதுக்குவதற்கு வசதியாக, தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 16 தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் தலைமை திமுகவிடம் ஒப்படைத்துள்ளது. அதேசமயம், குறிப்பிட்ட சில தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டே தீர வேண்டும் என 6 தொகுதிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது காங்கிரஸ் தலைமை!
அந்த 6 தொகுதிகளில் மிக முக்கியமானது கன்யாகுமரி தொகுதி. அந்த தொகுதியை குறிவைத்து காங்கிரசின் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் வசந்தக்குமார், விஜயதாரணி, முன்னாள் எம்.எல்.ஏ. ராணிவெங்கடேசன் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். கன்னியாகுமரியைக் கைப்பற்ற இந்த மூவரும் சரி சமமாக மோதும் நிலையில், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்பது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தரப்பில் விசாரித்தபோது, "கட்சியின் மாநில தலைவர்களாக இருப்பவர்களுக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பளிக்க கூடாது என்கிற பொது விதியை அகில இந்திய அளவில் கொண்டு வந்திருக்கிறார் ராகுல்காந்தி.
அதனால் எந்த ஒரு மாநிலத்திலும் கட்சியின் தலைவராக இருப்பவர்களுக்கு இந்த முறை சீட் இல்லை. அதே போல, எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களில் அவர்களது பதவி காலம் குறைந்த பட்சம் 1 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அவர்களை எம்.பி.தேர்தலில் களமிறக்க வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில், வசந்தக்குமாரும் விஜயதாரணியும் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களாக இருக்கிறார்கள். அவர்களது பதவிகாலம் 2021 வரை இருக்கிறது. அதனால், அவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு இருக்காது. அந்த வகையில் முன்னாள் எம்.எல்.ஏ. ராணிவெங்கடேசனுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. தவிர, தொகுதியில் கிருஸ்துவ நாடார்களும் இந்து நாடார்களும் தான் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். பொதுவாக, கிருஸ்துவ நாடார்களின் வாக்குகள் காங்கிரஸுக்கே விழும். அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் அந்த கூட்டணியை கிருஸ்துவர்கள் புறக்கணிப்பார்கள். அந்த வகையில், இவர்களின் வாக்குகள் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கே சாதகமானது.
இந்த சூழலில், இந்து நாடார் வாக்குகள்தான் தீர்மாணிக்கும் சக்தியாக இருக்கும். அதனால் இந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்தவரான ராணி வெங்கடேசனுக்கு வேட்பாளர் தேர்வில் முன்னுரிமைக் கிடைக்கும். தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளர் ராணி வெங்கடேசன். இளங்கோவனும் தற்போது டெல்லியில் இவருக்காக சிபாரிசு செய்திருக்கிறார்" என்கிறார்கள் கதர்சட்டை தலைவர்கள்.