அதிமுக ஆட்சியின் ஓராண்டு சாதனையோ? சோதனையோ? வேதனையோ? எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனாலும், தென்மாவட்டங்களில் தொகுதி தோறும் சைக்கிள் பேரணி நடத்தி, அங்கங்கே சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தினார்கள். அமைச்சர்கள் சைக்கிள் ஓட்டியதையே, இமாலய சாதனை என்று மார் தட்டினார்கள். இன்னும்கூட நிறையப் பேசினார்கள். அமைச்சர்கள் நிகழ்த்திய உரையில் ஒரு சில துளிகளை இங்கே உதிர்த்திருக்கிறோம்.
முதலில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி...
கடப்பாரையை வளைத்தார் எம்.ஜி.ஆர்.!
அப்போது, தலைமைக் கழகத்துக்கு எம்.ஜி.ஆரும் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரமும் வரும்போது, கடப்பாரையால் எம்.ஜி.ஆர். தாக்கப்பட்டார். திமுக கருங்காலி கபாலியால். அந்தக் கடப்பாரையைப் பிடித்து, கடப்பாரையை வளைத்தவர் எம்.ஜி.ஆர். பிறகு, கபாலியை அடித்து நொறுக்கி, தலைமைக் கழகம் சென்று கட்சி நடத்தியவர் எம்.ஜி.ஆர்.
மக்கள் தலை மேல் ஏறுபவனே எம்.ஜி.ஆர். தொண்டன்!
நாங்க என்றைக்குமே, வரிசையில் நின்று சினிமா பார்த்தது கிடையாது. தியேட்டரில் வரிசையில் நின்று டிக்கெட் எடுத்ததே கிடையாது. பத்து, இருபது பேர் போவோம். மக்கள் எல்லாரும் வரிசையில் நிற்பாங்க. அவங்க தலை மேல ஏறி, தவழ்ந்துக்கிட்டே போயி, கவுன்டர்ல போயி கையை நீட்டுவோம். அவன்தான் எம்.ஜி.ஆர். தொண்டன். டிக்கெட் எடுத்து உள்ள போயி படம் பார்ப்போம். புரட்சித்தலைவர் நடித்த படத்தைக் காணவந்த கலைக்கண்களுக்கு நன்றின்னு போஸ்டர் ஒட்டுவோம். இதை ஏன் சொல்லுறேன் தெரியுமா? இன்னைக்கு சைக்கிள் பேரணி தொடங்கினோம் பார்த்தீங்களா? நான் சைக்கிள்ல வந்துக்கிட்டிருக்கும்போதே, என்னுடைய நினைவுகளெல்லாம் பின்னோக்கிப் போயிருச்சு.
எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் பிள்ளை இல்லை!
எம்.ஜி.ஆர். காலத்துல அண்ணன் ராதாகிருஷ்ணன் சேர்மனுக்கு 1986-ல் போட்டியிட்டபோது, பிரச்சாரம் நிறைவு நாளன்று சைக்கிள் பேரணி. ராதாகிருஷ்ணன் ஆலமரத்துப்பட்டி வரையிலும் சைக்கிளோட போயிட்டாரு. நான் கடைசி வரைக்கும் சைக்கிள் மிதிச்சேன். நல்ல சாப்பாடெல்லாம் போட மாட்டாங்க. எங்கேயாவது புளியோதரை வச்சிருப்பாங்க. தட்டுல கொடுப்பாங்க. சாப்பிட்டுட்டு சைக்கிளை மிதிப்போம். வெறித்தனம்.. எம்.ஜி.ஆர். மீதுள்ள பற்று, பாசம். தீயசக்தியை அழிக்கணும்கிற அந்த வெறித்தனம் இன்னைக்கும் இருக்கு. அதன் வெளிப்பாடுதான் இந்த சைக்கிள் பேரணி. அதிமுக ஒண்ணும் அழியல. பணக்காரர்களை நம்பி எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை ஆரம்பிக்கல. அதிமுக அழியவில்லை, ஒழியவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டுதான் அம்மா பேரவையோட சைக்கிள் பேரணி. தலைவர் மறைந்து 31 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இங்கு பிறக்கின்ற இளைஞர்களெல்லாம் எம்.ஜி.ஆர். வாழ்க, அம்மா வாழ்க என்று சொல்லி வந்துகொண்டிருக்கிறார்கள். 30 வயதுக்கு கீழ் உள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள், இளைஞர்கள், இளஞ்சிங்கங்கள் சைக்கிளில் வந்துகொண்டிருக்கிறார்கள்.
சில பேர் சொல்வார்கள்.. அதிமுக தொண்டர்கள், எம்.ஜி.ஆர். பக்தர்கள் எல்லாரும் இறந்துவிட்டார்கள். இந்தக் கட்சியில் இருப்பவர்களுக்கெல்லாம் வயதாகிவிட்டதென்று. இல்லியே? இங்கே அமர்ந்திருக்கின்ற, சைக்கிள் பேரணியில் வந்த இளைஞர்களெல்லாம், எம்.ஜி.ஆரை பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அவர் நடித்த படத்தைப் பார்த்திருப்பார்கள். எம்.ஜி.ஆருக்கும் பிள்ளை இல்லை. ஜெயலலிதாவுக்கும் பிள்ளை இல்லை. தொல்லை இல்லை. கருணாநிதிக்கு பிள்ளை உண்டு. தொல்லை உண்டு. கருணாநிதி செத்ததுக்கு திமுககாரன் யாரும் கவலைப்படல. அழல. சமாதிக்கு இடம் கொடுத்துட்டாங்களாம் கோர்ட்ல. இடம் கிடைச்சதுக்கு வெடி போடறாங்க.
ஜாதகம் அதிமுகவுக்கு சாதகம்!
ஸ்டாலினோட ராசியைப் பார்த்தோமே. அவரு முதலமைச்சர் ஆகவே முடியாது. எடப்பாடி அண்ணன் ஜாதகம் வலுவா இருக்கு. கட்டம் சரியா இருக்கு. ராசிநாதன் வந்து வலுவா உட்கார்ந்திருக்கான். சனி உச்சத்துல இருக்கு. குரு பார்வையில இருக்கு. ஒண்ணுமே செய்ய முடியாது. எல்லாரு ஜாதகத்தையும் நாங்க பார்த்தாச்சு.
அமைச்சர்கள் சிந்திய ரத்தம்!
இன்றைக்கு சைக்கிள் பயணத்துல, ஐந்தாறு மாவட்டங்களில் தொடர்ந்து வர்றாரு வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார். சைக்கிள் வந்து முன்னாடி ஓட்டும்போது தெரியாது. அப்ப சைக்கிள் மட்டும்தான் இருந்துச்சு. இப்ப எவ்வளவோ வண்டி வந்திருச்சு. டூ வீலர் வந்திருச்சு. கார் வந்திருச்சு. எவ்வளவோ சொகுசு வாழ்க்கை வந்திருச்சு. பழையபடி சைக்கிள்ல போகணும்னு ஏன் நினைச்சாருன்னா, அதிமுக தொண்டர்கள் நாங்க லட்சியவாதிகள். எதையும் சந்திக்கத் தயாராக இருப்பவர்கள். நாங்க நடந்து, பாதயாத்திரையாகக் கூட சாதனையைச் சொல்வோம். சைக்கிளில் வந்தும் சாதனையைச் சொல்வோம். எங்களுக்கு அந்த வலிமை, வல்லமை பேரவை நிர்வாகிகளுக்கு, அதிமுக தொண்டர்களுக்கு இருக்கு என்பதைக் காட்டுவதற்குத்தான் விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக சைக்கிள் பேரணி நடத்துகிறோம்.
சகோதரர் ஆர்.பி. உதயகுமார் ஒரு போராளியாகத் திகழக்கூடியவர். நான் டவுணுக்குள்ளதான், சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர்ல அவுட்டர்ல இருந்து அவுட்டர் சைக்கிள் மிதிச்சு வந்தேன். இங்கே சிவகாசியிலும். அவர் அப்படி இல்ல. தொடர்ந்து மிதிச்சு வர்றாரு. எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஒரு அமைச்சர், அமைச்சர்களாக இருப்பவர்கள், சைக்கிள் மிதித்து வருவது அதிமுகவில் மட்டும்தான் நடக்கும். திமுககாரன் கார் கண்ணாடியைக்கூட இறக்கிவிட மாட்டான். திமுக அமைச்சர்கள் கண்ணாடியை இறக்கிவிட மாட்டாங்க. டபுள் ஏ.ஸிய போட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. நாங்க வியர்க்க வியர்க்க, ரத்தம் சிந்தி மக்களுக்கு உழைக்க வேண்டும்; பாடுபட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் நாங்க.
பத்து மந்திரி பேரம்!
இப்ப எங்களோட லட்சியம் என்ன தெரியுமா? டெல்லிதான்! டெல்லில அதிமுக ஆதரவு கொடுத்த கட்சிதான், இனிமேல் ஆட்சியமைக்க முடியும். அதிமுக ஆதரவு இல்லாம, டெல்லில யாரும் ஆட்சியமைக்க முடியாது. இனி அதிமுக இப்படியெல்லாம் வெற்று ஆதரவு கொடுக்காது. மத்தியில் பத்து மந்திரி கொடுன்னு கேட்போம். சும்மா வெற்று ஆதரவு ஜெயலலிதா கொடுத்தாங்கன்னா, அவங்க வந்து பெரிய மனுஷத்தன்மையில கொடுத்தாங்க. நம்மள்லாம் அப்படி கொடுக்க முடியாது. பத்து மந்திரி கொடு. நான் வந்து விருதுநகர் மாவட்டத்துக்கு ஒரு மந்திரி கொடுன்னு கட்டாயம் கேட்பேன். நம்ம யாருக்கோ ஒட்டு போட்டு, யாருக்கோ ஆதரவு கொடுத்து, இவங்க கேட்பாங்க. கேட்கிறவங்களுக்கு நாம ஓட்டு போடணும். நீ இங்கிட்டு ஒரு காலை வைப்ப. அங்கிட்டு ஒரு காலை வைப்ப. ஒரே பேச்சு. நீ எங்கள நம்பு. உனக்கு ஆதரவு கொடுக்கிறோம். இல்ல, அவன நம்பு. முன் வாசல்ல அவன பார்க்கிற. பின் வாசல்ல எங்கள பார்க்கிற. இந்த வேலைய எல்லாம் எங்ககிட்ட வைக்காத.”
இதைப் பார்த்தே ஆச்சரியப்பட வேண்டாம். இதை விட வீரமாகப் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் வைர வரிகள் கீழே...
புளியோதரை கிடைக்கவில்லையென்றாலும், புலியை எதிர்ப்போம்! - ஓட்டும் காமெடி அமைச்சர்கள்! #2