வாழ்வா-சாவா என்கிற அரசியல் களத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்க முழு வீச்சில் தயாராகி விட்டது தி.மு.க. என்பதையே "விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற பரப்புரை பயணம் வெளிப்படுத்துகிறது. கட்சியின் மாநில நிர்வாகிகள்-அணிகளின் பொறுப்பாளர்கள் இதனை மேற்கொள்கின்றனர்.
முதல் பரப்புரையை இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கலைஞரின் திருக்குவளையில் தொடங்கினார். நடிகர் என்பதால் இளைஞர்கள் கூட்டம் திரண்டது. திருவாரூர், தஞ்சை மாவட்ட பகுதிகளில் அவரது பயணம் கவனத்தைக் கவர்ந்த நிலையில், மகளிரணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, தி.மு.கவுக்கு பலவீனமான ஏரியா எனச் சொல்லப்படும் கொங்கு மண்டலத்தில் பரப்புரைப் பயணத்தைத் தொடங்கியது ஆச்சரியம் கலந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தியது. எதற்கு இந்த ரிஸ்க் என்று சொந்தக் கட்சிக்காரர்களே யோசித்த நிலையில், அதற்கு நேர்மாறாகத் தன் பயணத்தின் தாக்கத்தை வெளிப் படச் செய்தார் கனிமொழி. முதல்வர் பழனிச்சாமியின் சொந்த ஊரான எடப் பாடியில் 29 ந் தேதி பயணத்தை தொடங்கி சிக்ஸர் அடித்தார். சேலம் மாவட் டத்தை அடுத்து, 2ந் தேதிவரை ஈரோடு மாவட்டம் முழுக்க சுற்றுப்பயணம் செய்தார்.
அந்தியூரில் நடந்த வார சந்தைக்கு சென்ற கனிமொழி, பெண் வியாபாரிகளிடம் பேசியதோடு, அவர்களிடம் வெற்றிலை வாங்கி, உரையாடியபடி உற்சாகப்படுத்தினார். அதே போல் பர்கூர் மலை கிராமம் சென்று மலைவாழ் மக்களிடம் பேசியதோடு அவர்களோடு மதிய உணவு சாப்பிட்டார். அடுத்து பவானி சென்று ஜமக்காள பெட் சீட் உற்பத்தி செய்யும் நெசவாளர்களை சந்தித்தார். தொடர்ந்து சலங்க பாளையம், கவுந்தப்பாடி, பெருந்துறை, வெள்ளோடு, மொடக்குறிச்சி, ஈரோடு என பயணம் செய்த கனிமொழி ""விவசாயம், நெசவு, வியாபாரம் செய்யும் மக்கள் மட்டுமல்ல, கூலி வேலை செய்யும் மக்களுக்கும் இந்த ஆட்சியால் நிம்மதி இல்லை. எல்லோருக்கும் துன்பம் தரும் ஆட்சியாக இது உள்ளது.
தன்னை ஒரு விவசாயி என கூறிக் கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகள் எப்படிப்பட்ட பாதிப்புகளோடு வாழ்கிறார்கள், அவர்களின் குறைகள் என்ன என்பதை புரிந்து கொள்ளவில்லை. கொங்கு மண்டலம் விவசாயத்தோடு ஜவுளி, மஞ்சள் என தொழில் சார்ந்த வளமான பகுதி. அதை சிதைத்து விட்டது இந்த ஆட்சி'' என பல புள்ளி விபரங்களோடு மக்களிடம் கனிமொழி பேசி அவர்களை கவர்ந்தார்.
டிசம்பர் 1 ந் தேதி தந்தை பெரியார் பிறந்து வாழ்ந்த இல்ல மான பெரியார், அண்ணா நினைவகத்திற்கு வந்தவர் அந்த இல்லத் தில் இருந்த பெரியார், அண்ணாவின் அரிய புகைப்படங்கள், பெரியார் பிறந்த அறை, அண்ணா அங்கு பணியாற்றிய அறை என எல்லாவற் றையும் சுமார் ஒரு மணி நேரம் பார்வையிட்டார். பிறகு வெளியே வந்து நக்கீரனிடம் பேசிய அவர் ""நான் பல முறை ஈரோடு வந்திருந் தாலும் பெரியார், அண்ணா நினைவகத்திற்கு இன்றுதான் வந்தேன். சுயமரியாதை இயக்கத்தின் பிறப்பிடம் இது. தலைவர் கலைஞர் குரிப்பிடுவது போல இது குருகுலம். இங்கு வந்தது எனக்கு பெருமை என்பதோடு இது ஒரு மறக்க முடியாத நிகழ்வு'' என்றார்.
தனது பிரச்சாரம்பற்றி குறிப்பிட்ட கனிமொழி, ""கொங்கு மண்டல மக்களின் உபசரிப்பு, பண்பாடு என்னை மிகவும் கவர்ந் திருக்கிறது. உழைக்கும் மக்களுக்கு இந்த அரசு வேதனையைத்தான் தொடர்ந்து கொடுத்து வந்திருக்கிறது. போகும் இடம் எல்லாம் மக்களுக்குள்ள குறைகளை கூறினார்கள். ஆட்சி மாற்றம் உடனே வர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. தி.மு.க. அரசு அமைய வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். கொங்கு மண்டலப் பயணம் முழுமையான நம்பிக்கையை கொடுத்துள்ளது'' என்றார்.
நான்கு நாட்கள் ஈரோட்டில் இருந்த கனிமொழியை சிறு, குறு, மற்றும் தொழில் சார்ந்த அமைப்பினர், விவசாய சங்க, விசைத் தறியாளர்கள் சங்க, ஜவுளி உற்பத்தியாளர்கள், மேலும் பல்வேறு அமைப்பினர் சந்தித்து அவர்களுக்கான கோரிக்கை மனுக்களை கொடுத்ததோடு அடுத்து தி.மு.க.ஆட்சி தான். எங்களுக்கான தேவை களை நிறைவேற்றிக்கொடுங்கள் என கேட்டுக் கொண்டனர்.
கொங்கு மண்டலத்தில் கனிமொழியின் பயணம் அதற்கு பொது மக்களின் வரவேற்பு தி.மு.க.வுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக அமைந்துள்ளது. பலவீனமான ஏரியாவை ப்ளஸ்ஸாக மாற்றியிருக்கிறார் கனிமொழி என ஆட்சித் தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளதாம் உளவுத் துறை.